4 ஆண்டுகளில் ரூ.100 கோடி- இந்தியாவின் வேகமாக வளரும் இயற்கை பராமரிப்பு ப்ராண்ட் Mamaearth நிறுவிய ஜோடி!
குழந்தைகள் நலப்பொருட்களுக்கான பாதுகாப்பு சான்றிதழை பெற்ற ஆசியாவின் முதல் பிராண்டாக திகழும் மாமாஎர்த் நான்கு ஆண்டுகளில் 100 கோடி விற்றுமுதலை அடைந்துள்ளது.
ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தைக்கு நிபந்தனியில்லா அன்பு மற்றும் அக்கரையை அளிக்க விரும்புகிறார். அம்மா, தனது அன்பு அனைத்தையும் வெளிப்படுத்தி தன்னுடைய குழந்தையை ஒவ்வொரும் நாளும் பாதுகாக்க விரும்புகிறார்.
காஜல் அலக் மற்றும் வருண் அலக், தங்கள் குழந்தையை எதிர்பார்த்திருந்த போது, குழந்தையின் பாதுகாப்பிற்காக எல்லாவற்றையும் செய்ய விரும்பினார். எல்லா பெற்றோர்களையும் போல அவர்களும் இணையத்தில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பட்டியலை தேடினார். அதோடு குழந்தைக்கான பொருட்களையும் தேடினார். ஆனால், முடிவுகள் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தன.
பாதுகாப்பு தரத்திற்கு ஏற்ற பொருட்களை அவர்களை கண்டறிய முடியவில்லை. பட்டியலில் இருந்த ஒவ்வொரு பொருளும், குழந்தைகளுக்கு தீங்கான ரசாயனம் கொண்டிருந்தன.
“எங்கள் குழந்தையை நினைத்து மட்டும் அல்லாமல், எங்கள் நண்பர்கள் குழுவில் இருந்த குழந்தைகளை நினைத்தும் கவலை கொண்டோம். என்ன முயற்சி செய்தாலும், பாதுகாப்பான பொருட்களைக் கண்டறிய முடியாத பெற்றோர்களின் வலி எங்களுக்கு புரிந்தது,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசிய வருண் கூறினார்.
இந்த அனுபவத்தின் பயனாக இந்த தம்பதி, பெற்றோர்களுக்கான பிராண்டை உருவாக்க தீர்மானித்து, ’மாமாஎர்த்’ (Mamaearth) துவக்கினர்.
தொழில்முனைவோர்
வருண் மற்றும் காஜல், பெற்றோர் ஆன பிறகு அமெரிக்காவில் இருந்து பொருட்களை தருவித்தனர். அங்கு அவை தர நிர்ணயம் பெற்றிருந்தாலும் இந்த ஏற்பாடு செலவு மிக்கதாக அமைந்தது.
இந்தப் பிரச்சனை அவர்களை வாட்டியது. குழந்தை நலப் பொருட்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர்.
“ஆறு மாதங்கள் தூக்கம் வராமல் தவித்தோம். ஆய்வு செய்வது முதல், ஆய்வுக்குழுவை உருவாக்குவது வரை, சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது வரை பல விஷயங்களுக்காக பாடுபட்டோம். இறுதியாக எங்களால் தீர்வை கண்டறிய முடிந்தது,” என்கிறார் வருண்.
2016ல், இந்த தம்பதி, ’ஹோனசா கன்ஸ்யூமர் லிட்’ கீழ், தங்கள் பிராண்டை துவக்கினர். இயற்கையான, தாவிரம் அல்லது கைகளால் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட, சான்றிதழ் பெற்ற பொருட்களை பயன்படுத்தினர்.
ஐ.எஸ்.ஓ, ஜி.எம்.பி, உள்ளிட்ட அமைப்புகளின் சான்றிதழ் பெற்ற சிறந்த இடங்களில் இருந்து மூலப்பொருட்களை தருவித்தனர்.
நான்கு ஆண்டுகளில், மாமாஎர்த், அதன் நச்சுத்தன்மை இல்லா பொருட்களுக்காக ’மேட் சேப்’ சான்றிதழ் பெற்ற ஆசியாவின் முதல் பிராண்டாக உருவானது. பெற்றோர்களுக்கான மன அழுத்தத்தை குறைத்து, குழந்தைகளுக்கான பாதுகாப்பான பொருட்களை தொடர்ந்து வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
ஆறு குழந்தைகள் நலப் பொருட்களுடன் துவங்கிய மாமாஎர்த், இன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சரும நலப் பொருட்கள் பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்துள்ளது. இந்தியா முழுவதும் 500 நகரங்களில் 1.5 மில்லியன் வாடிகையாளர்களுக்கு சேவை அளித்துள்ளது.
100 கோடி நிறுவனம்
Mamaearth இந்தியாவின் வேகமாக வளரும் பிராண்ட்களில் ஒன்றாக இருக்கிறது. துவங்கிய நான்கு ஆண்டுகளில் 100 கோடி வருவாயை கடந்துள்ளது. பெற்றோர்களுடான உணர்வுப் பூர்மான பந்தமே இதற்குக் காரணம் என்கிறார் வருண்.
“பிராண்டின் தன்மை மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் நச்சுத்தன்மை இல்லாத பொருட்களுக்கான தேவை, எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்துள்ளது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது உண்மை தான். சந்தையில் உள்ள இடைவெளியை நிரப்ப முடியும் என நினைத்தோம். அது நிறைவேறியுள்ளது,” என்கிறார் வருண்.
இ.டி பிராண்ட் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் இந்தியாவின் சிறந்த பிராண்ட்களில் ஒன்றாக மாமாஎர்த் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள வெகு சில பிளாஸ்டிக் பாசிட்டிவ் பிராண்ட்களில் ஒன்றாக மாமாஎர்த் திகழ்கிறது. எதிர்கால குழந்தைகளுக்காக அன்னை பூமியை காப்பதில் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. நிறுவனம் தான் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைவிட அதிக பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்கிறது.
வருண் மற்றும் காஜல், தங்கள் பிராண்டுக்கான விளம்பர தூதராக வேண்டும் எனும் கோரிக்கையுடன் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை அணுகினர்.
“ஷில்பாவை அணுகிய போது, எங்கள் பொருட்கள் பிடித்திருந்தால் மட்டுமே விளம்பரத் தூதராக இருப்பேன் என்றார். எங்கள் பொருட்கள் மீது நம்பிக்கை இருந்தாலும், ஆறு மாதங்களுக்கு மேலாக அவரிடம் இருந்து பதில் வராததால் ஏமாற்றம் அடைந்தோம்,” என்கிறார் வருண்.
ஆனால், எட்டு மாதங்களுக்குப் பிறகு அழைத்த ஷில்பா, பொருட்களை விரும்பியதாக தெரிவித்ததோடு நிறுவனத்தில் முதலீடு செய்யவும் முன்வந்தார்.
சவால்கள்
இலக்கு சந்தைக்கு பொருத்தமாக இருப்பது தான் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்கிறார் வருண். தொடர்ந்து புதுமையாக்கம் தேவைப்படுகிறது.
பெரிய நிறுவனங்களின் பொருட்கள் நிறைந்த சந்தையில் 100 சதவீதம் நச்சு இல்லாத பொருட்களை அளிப்பதால், நியாயமான விலையில் பாதுகாப்பான பொருட்களை அளிக்கும் வகையில் தரமான பொருட்களை கொள்முதல் செய்வது சவாலாக இருக்கிறது.
“பெரிய பிராண்ட்கள் தங்கள் பொருட்கள் நச்சுத்தன்மை இல்லாததாக இருப்பதை உறுதி செய்ய கஷ்டப்படும் நிலையில், மாமாஎர்த் இயற்கையான, பாதுகாப்பான பொருட்களை வழங்குகிறது,” என்கிறார் வருண்.
எதிர்காலம்
செல்வாக்காளர் மார்க்கெட்டிங் மற்றும் டிஜிட்டல் வழிகளில் நிறுவனம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்கிறார் வருண்.
“இந்தியா முழுவதும் மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளோம். இதை அடுத்த ஐந்தாண்டுகளில் பத்து மில்லியனாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். மாமாஎர்த்தை 500 கோடி பிராண்டாக உயர்த்துவதே எங்கள் திட்டம்,” என்கிறார்.
நிறுவனம், இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் விரிவாக்கம் செய்து வருகிறது.
மேலும் நிறுவனம் முன்னணி முதலீட்டாளர்களிடன் நிதி திரட்டுவது தொடர்பாக பேசி வருகிறது.
ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்