ஷாம்பூ, சோப்பு, கிளீனர்களை இயற்கை முறையில் வீட்டிலே தயாரித்து வர்த்தகம் செய்யும் நிஷா நடராஜன்!
பெங்களூருவைச் சேர்ந்த நிஷா நடராஜன் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ஸ்டார்ட் அப் தொடங்கி முற்றிலும் இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு வீட்டு உபயோகம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களை வழங்குகிறார்.
வீட்டிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் கடைக்குச் சென்று லிஸ்ட் கொடுத்து வாங்கிவிடுபவர்கள் ஒரு ரகம். இதில் சிலவற்றை தாங்களே தயாரித்துப் பயன்படுத்துபவர்கள் மற்றொரு ரகம். இவ்வாறு தயாரிப்பவர்கள் அதற்கான ஒவ்வொரு மூலப்பொருளையும் கவனமாக ஆராய்ந்து வாங்கி பக்குவமாக தயாரித்துப் பயன்படுத்துவார்கள்.
ஆனால் விற்பனை நோக்குடன் பொருட்களைத் தயாரிப்பவர்கள் லாபத்தில் கவனம் செலுத்துவதால் மூலப்பொருட்களைத் தேர்வு செய்வதிலோ தயாரிப்பு செயல்முறைகளிலோ அக்கறை காட்டுவதில்லை. இது பெரும்பாலான தயாரிப்புகளுக்குப் பொருந்தும்.
வீட்டுப் பயன்பாட்டிற்காகத் தயாரிப்பவர்களில் சிலர் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதே அக்கறையுடன் தயாரித்து விற்பனை செய்வதுண்டு. அப்படித்தான் நிஷா நடராஜன் இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு வீட்டிற்குத் தேவையான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.
தேவை மற்றும் ஆய்வு
நாம் ஒரு பிரச்சனையை சந்திக்கும்போதுதான் அதற்கான தீர்வை ஆராய்வோம் அல்லவா? அதேபோல் பெங்களூருவைச் சேர்ந்த நிஷாவும் ஒரு பிரச்சனையை சந்தித்தார். இவரது வீட்டில் தரையை சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் அடங்கியிருந்தன. இதனால் இவரது வளர்ப்புப் பிராணியான மூன்று நாய்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
இதை கவனித்த நிஷா, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுத்தப்படுத்தும் பொருட்களை இயற்கையான முறையில் தயாரிக்கத் தொடங்கினார்.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மக்களை வீட்டுக்குள் முடக்கினாலும் அவர்களது அறிவாற்றலையும் படைப்பாற்றலையும் விரிவடையச் செய்துள்ளது. நிஷா இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஷாம்பூ பார், சோப்பு, கிளீனர்கள் போன்ற வெவ்வேறு பொருட்களைத் தயாரித்து பயன்படுத்திப் பார்த்துள்ளார்.
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து சோதனை செய்துள்ளார். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கார்ப்பரேட் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரமாக தொழில்முனைவில் களமிறங்கினார்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கையான பொருட்களை வழங்கும் Down to Earth என்கிற பிராண்டைத் தொடங்கினார்.
Down to Earth பிராண்ட்
நிஷா Down to Earth பிராண்டை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கினார். நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வழங்கவேண்டும் என்பதே இந்த பிராண்டின் நோக்கம்.
ஃபேஸ் மாஸ்க், பாடி பட்டர்ஸ், சோப்பு, ஷாம்பூ பார், ரூம் ஸ்ப்ரே, தரையை சுத்தப்படுத்தும் பொருட்கள், பாத்திரங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் திரவங்கள் போன்ற வீட்டுப் பராமரிப்பு பொருட்களை இந்த பிராண்ட் வழங்குகிறது. இவை தவிர இந்த பிராண்டின் Kadha தயாரிப்பு நோய் எதிர்பாற்றலை மேம்படுத்த உதவுகிறது. இது மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
எந்தவிதமான பதப்படுத்தும் பொருட்களும் இவரது தயாரிப்புகளில் சேர்க்கப்படுவதில்லை. முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த பிராண்டின் தயாரிப்புகள் 90 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலை நிர்ணயிக்கப்பட்டதற்கான காரணம்
இரண்டு முக்கியக் காரணங்களுக்காக மற்ற பிராண்ட் தயாரிப்புகளைக் காட்டிலும் இந்த பிராண்ட் விலை சற்றே அதிகமாக இருப்பதாகத் தோன்றலாம் என்கிறார் நிஷா. ஒன்று பேக்கேஜிங். அதாவது இந்தத் தயாரிப்புகள் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டாவது இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் கொண்டு பேக்கேஜ் செய்ய 2 ரூபாய் செலவிட்டால் போதும். ஆனால் கண்ணாடி ஜார்களுக்கு குறைந்தபட்சம் 16 ரூபாய் செலவிடவேண்டும். இருப்பினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேக்கிங் செய்வதற்கு நிஷா கண்ணாடி ஜார்களையே தேர்வு செய்தார்.
“இத்தனை பிரயத்தனப்பட்டு இயற்கையான பொருட்களைத் தயாரிக்கும் போது, அவற்றைப் பேக் செய்ய கூடுதல் கவனம் செலுத்தவேண்டாமா?” என்று கேள்வியெழுப்புகிறார் நிஷா.
வாடிக்கையாளர்கள் கண்ணாடி ஜார்களைத் திருப்பியளித்து தள்ளுபடி கூப்பன் பெறலாம். அல்லது குறைந்த விலையில் ரீஃபில் செய்துகொள்ளலாம்.
இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிப்பதால் செலவு அதிகமாகிறது. குறிப்பாக குறைந்த அளவில் தயாரிக்கும்போது அதிகம் செலவிடவேண்டியிருக்கும்.
ஒரு வாரத்திற்கு ஒரு பேட்ச் என்று தயாரிக்கிறார் நிஷா. அடுத்தடுத்த கட்டங்களுக்கு நிறுவனம் வளர்ச்சியடையும் நிலையிலும் அதிக இயந்திரப் பயன்பாடின்றி தயாரிப்புப் பணிகள் நடக்கவேண்டும் என்பதே நிஷாவின் விருப்பம்.
குழு மற்றும் சந்தைப்படுத்துதல்
நிஷா உட்பட நான்கு முழு நேரப் பணியாளர்கள் அடங்கிய குழு செயல்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ததால் விரைவிலேயே இவரது தயாரிப்புகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. விலை சற்று அதிகம் இருப்பினும் தரமான பொருட்களை மக்கள் ஆர்வமாக வாங்குகின்றனர். அவர்களது மனநிலை மாறியுள்ளது. இது நல்ல மாற்றம்,” என்கிறார்.
நிஷாவின் கணவர் திரைத்துறையில் அனுபவமிக்கவர். பிராண்ட் தயாரிப்புகளை சந்தைப்படுத்த இது உதவுகிறது. WedMeGood என்கிற திருமண ஏற்பாட்டு தளத்துடன் இணைந்து திருமணம் மற்றும் பண்டிகைகளுக்கான பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த நிஷா திட்டமிட்டுள்ளார்.
இந்த பிராண்டிற்கு சொந்தமான வலைதளம் மூலம் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் Curated Consciously என்கிற தளத்திலும் இதன் தயாரிப்புகள் கிடைக்கின்றன.
இந்நிறுவனம் இதுவரை 3,000 தயாரிப்புகளை டெலிவர் செய்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற மின்வணிக தளங்களிலும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
சவால்கள்
உலளவில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று சமயத்தில் வணிக முயற்சியைத் தொடங்கியதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதனால் வணிகத்தைத் தொடங்குவது சற்று தாமதமானது.
மூலப்பொருட்களை வாங்குவது, ஸ்டார்ட் அப் பதிவு செய்வது, சட்ட ரீதியான வேலைகள் என அனைத்தும் ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்பட்டன. பெருந்தொற்று சமயத்தில் மக்கள் ஒரு புதிய பிராண்டை ஏற்றுக்கொண்டு அதற்காக பணம் செலவிடத் தயாராக இருப்பார்களா என்கிற சந்தேகம் நிஷாவிற்கு ஏற்பட்டது.
கண்ணாடி ஜார்களில் பேக் செய்யப்பட்ட பொருட்களை அனுப்புவதில் லாஜிஸ்டிக்ஸ் சிக்கல் இருந்தன. உடைந்துவிட்டால் பொறுப்பேற்க மாட்டோம் என்கிற நிபந்தனைகளுடனேயே பார்சல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
“பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பேப்பர் பப்பிள் ரேப் மூலம் பேக் செய்யப்பட்டிருப்பது பாதுகாப்பானது என்று விவரித்து லாஜிஸ்டிக்ஸ் நபர்களை சம்மதிக்க வைப்பது சவாலாக இருந்தது,” என்றார்.
தற்போது இந்த ஸ்டார்ட் அப் இந்தியா போஸ்ட் மற்றும் உள்ளூர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
பசுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த லைஃப்ஸ்டைல் தயாரிப்புகளைத் தேடும் இந்திய நுகர்வோர்களின் தேவைகளை பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் பூர்த்தி செய்கிறது.
மஹிந்திரா குழுமம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற 88 சதவீதம் பேர் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் அத்தகைய பொருள் கிடைக்காதது தடையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா