#100UNICORNS | ‘யுனிக்’ கதை 40 - Zenoti: சலூனில் உதித்த யோசனையில் எழுந்த சாம்ராஜ்ஜியம்!
ஜெனோட்டியை தொடங்கிய சுதீர் கோனேரு ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர். அவரது உத்தியும் வளர்ச்சியும் உத்வேகம் ஊட்டுபவை.
நம்மில் பெரும்பாலான மக்களுக்கு 40 என்பது தொழில் மற்றும் நிதி ரீதியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத் தொடங்கும் வயது. ஆனால், 40 வயதில் ஓய்வு பெற்று, மெட்ரோ சிட்டிக்கு அருகே ஒரு பண்ணை வீட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு உலகை சுற்றிவந்தால் எப்படி இருக்கும்?
பலரின் ஆசையும் அதுதான். அப்படியான ஆசையை நிறைவேற்றி கொண்டிருந்தவருக்கு கூடுதலாக ஜாக்பாட் அடித்த கதைதான் இந்த யூனிகார்ன் அத்தியாயம்.
அப்படியானவர்... அக்கட தேசமான ஆந்திரத்தின் சுதீர் கோனேரு. சுதீர் கோனேரு தனது 40 வயதில் ஓய்வு பெற முடிவு செய்தார். ஏனென்றால் இரண்டு தசாப்த தொழில் வாழ்க்கையில் வெற்றிகரமான பிசினஸ்மேன் சுதீர் கோனேரு.
இரண்டு நிறுவனங்களை தொடங்கி அவற்றை சக்சஸ் செய்து காட்டிய திருப்தியோடு ஓய்வுபெற நினைத்த சுதீர், நண்பர் உடன் மீண்டும் ஒரு வெற்றி பாய்ச்சலை நிகழ்த்தினார். அப்படியான ஓர் பாய்ச்சலால் உருவான சாம்ராஜ்யம்தான் 'ஜெனோட்டி' (Zenoti). கிளவுட் அடிப்படையில் இயங்கும் ஒரு மென்பொருள் இது.
மைக்ரோசாப்ட் வேலை துறப்பு
ஜெனோட்டியை தொடங்கிய சுதீர் கோனேரு, ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர். ஐஐடி-யில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, அவர் அமெரிக்கா சென்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஐஐடி, அமெரிக்கா என்றாலே அடுத்து என்ன?
ஆம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து தனது வாழ்க்கையை தொடங்கினார். தனது திறமை மற்றும் அர்ப்பணிப்பு அவரை மைக்ரோசாப்ட் இயக்குநர் பதவியை தேடிக் கொடுத்தது. ஆனால், விரைவாகவே சொந்த நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற கனவு, அவரை மைக்ரோசாப்ட் வேலையை உதறச் செய்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு சுதீர் உருவாக்கிய முதல் நிறுவனம் Intelliprep Technologies. இதன் சிஇஓ-வாக பணியாற்றினார். சில ஆண்டுகள் இந்நிறுவனம், Click2learn என்கிற நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. Click2Learn மைக்ரோசாப்டின் இணை நிறுவனராக இருந்த பால் ஆலனின் நிறுவனம் ஆகும்.
இந்த இணைப்புக்கு மீண்டும் ஒரு புதிய முயற்சியில் இறங்கிய சுதீர், ‘சம்டோடல்’ என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கினார். அவரின் தலைமையில் சம்டோட்டல் சுமார் 100 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியது. இப்படியாக சுதீர் கோனேரு தான் உருவாக்கிய 2 நிறுவனங்களை விற்றுவிட்டு, 2008-ல் ஓய்வு பெற முடிவு செய்தார்.
மேனேஜ் மை ஸ்பா...
அக்செல் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த அபினவ் சதுர்வேதி ஹைதராபாத்தில் ஹேர்கட் செய்யச் சென்றார். அவர் சென்ற கடையில் கிடைத்த அனுபவம், அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் தன்மை அவரை கவர்ந்ததால், ஆர்வமாகி அதைப் பற்றி கடைக்காரர்களிடம் கேட்டார். இந்த ஆர்வம் சலூன், ஸ்பா தொடங்க உத்வேகம் கொடுத்தது.
2010-ல் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு 'மேனேஜ் மை ஸ்பா' (ManageMySpa) தொடங்கப்பட்டது. இதனை தொடங்கும்போது அபினவ், சுதீரை சந்தித்தார். பண்ணை வீட்டில் சுதீர் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தச் சந்திப்பு நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு முறை நடந்த உரையாடல்களுக்கு பிறகு மேனேஜ் மை ஸ்பாவுக்கு தலைமையேற்றார் சுதீர்.
மேனேஜ் மை ஸ்பாவுக்கு தலைமையேற்க சுதீர் ஒப்புக்கொள்ள காரணம், அதற்கு முன் சுதீர் நடத்தி வந்த Latitude Pro என்கிற ஹெல்த் நிறுவனம்தான். ஸ்பா மற்றும் சலூன்களுக்கான மேலாண்மை தொடர்பான பிரச்சனைகளை இந்நிறுவனம் மூலம் நன்கு அறிந்திருந்த சுதீர், அதில் கிடைத்த அனுபவத்தில் மேனேஜ் மை ஸ்பாவை வழிநடத்தினார்.
Zenoti உதயம்
ஒருமுறை சுதீர் அளித்த பேட்டியில் இருந்து இந்த பகிர்வு...
“15 ஆண்டுகளுக்கும் மேலாக மைக்ரோசாப்ட் மற்றும் சம்டோட்டல் நிறுவனங்களின் சாஃப்ட்வேர் டீமில் பணிபுரிந்த எனக்கு அழகு மற்றும் ஆரோக்கியத் துறையில் இறங்குவது தர்க்கரீதியான பாய்ச்சல் அல்ல என்பது தெரியும். ஸ்பாக்கள், சலூன்கள், ஃபிட்னஸ் சென்டர்கள் பற்றியோ எனக்கு அதிகம் தெரியாது. அதிகபட்சம் எனது அனுபவம் என்பது ஜிம்முக்கு செல்வது மட்டுமே. Latitude Pro-வை தொடங்கிய பிறகு விரைவில் அது மாறியது.
இந்த நேரத்தில்தான் எதிர்பாராத சூழ்நிலைகளால், மேனேஜ் மை ஸ்பா வணிகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை நான் ஏற்க வேண்டியிருந்தது. ஜிம்மில் ஹேங்கவுட் செய்வதும், ஸ்பாவில் மசாஜ் செய்வதும் எனது வழக்கம். இந்த வழக்கத்தை, மேனேஜ் மை ஸ்பாவிலும் தொடரலாம் என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டு, தலைமைப் பொறுப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
ஆனால், ஸ்பா வணிகத்தை நான் குறைத்து மதிப்பிட்டிருந்தேன். நான் நினைத்தற்கு மாறாக அது இருந்தது. எனவே, பயிற்சியாளர்கள் உதவியுடன் ஸ்பா வர்த்தகத்தை கற்றுகொள்ளத் தொடங்கினேன். இந்தப் பயிற்சியில் சந்தையில் ஜிம்கள், ஸ்பாக்கள் மற்றும் சலூன்களின் மேலாண்மைக்கு மென்பொருள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஸ்பா வணிகத்திற்கான மென்பொருள் தீர்வை உருவாக்குவதில் கவனம் செலுத்த தொடங்கினேன்.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் இதற்காக நான் செலவிட தருணங்கள் தான் மேனேஜ் மை ஸ்பா வெற்றிக் கதைக்கு மிகவும் முக்கியமான தருணங்கள். இறுதியாக வாடிக்கையாளர்களுக்கு தீர்வை வழங்கும் வகையில் மென்பொருளை உருவாக்கினோம். 2015-ல் மேனேஜ் மை ஸ்பா என்பது ‘ஜெனோட்டி’யாக பெயர் மாறியது.”
வெர்டிக்கல் சாஸ் தொழில்நுட்பம் (Vertical SaaS):
ஒரு நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேரைத் தயார் செய்து, அவற்றை அந்த நிறுவனத்திடம் விற்றுவிடாமல், மாதந்தோறும் எவ்வளவுக்கு பயன்படுத்துகிறார்களோ அதற்குரிய பணத்தை மட்டும் கட்டணமாக பெறுவதே சாஸ் (Software as a Service - SaaS) தொழில்நுட்பம்.
ஆனால், அதுவே வெர்டிகல் சாஸ் என்பது சில்லறை வணிகம், நிதிச் சேவைகள், காப்பீடு, சுகாதாரம் அல்லது உற்பத்தி போன்ற ஒரு குறிப்பிட்ட தொழிற்துறைக்காக உருவாக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேர். அப்படியான ஓர் சாஃப்ட்வேராக ஜெனோட்டி சாஃப்ட்வேர் உருவானது.
சாஃப்ட்வேர் மற்றும் வெற்றியை தேடி கொடுத்துவிட முடியாது அல்லவா? அதனால் சந்தையில் நிலைத்து நிற்க பல ஸ்டேட்டர்ஜிகளை பின்பற்ற தொடங்கியது ஜெனோட்டி. குறிப்பாக இந்திய, ஆசிய சந்தைகளை தாண்டி, உலக சந்தையை எட்டிப்பிடித்தது ஜெனோட்டி. இதுமட்டுமில்லாமல், ஸ்பாக்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, ஆன்லைன் சேவைகளை அதிகப்படுத்தியது, பி2பி சேவைக்கு மாறியது, சிறிய நிறுவனங்களை கையகப்படுத்தி பிராண்டின் மதிப்பை கூட்டியது என சுதீர் தலைமையில் ஜெனோட்டி ஒவ்வொரு அஸ்திரங்களாக செயல்படுத்தியது.
இதன் பயன், முதலீடுகள் குவிய 2020-ல், ஜெனோட்டி யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது. அழகு மற்றும் ஆரோக்கிய பிரிவில் பில்லியன் டாலர் மதிப்பை எட்டிய முதல் ஸ்டார்ட்அப் இதுவாகும். அவரது தயாரிப்பு 50 நாடுகளில் 12,000 வணிகங்களால் பயன்படுத்தப்படுகிறது. வென்ச்சர் இன்டெலிஜென்ஸ் படி, ஜெனோட்டி நிறுவனத்தின் மதிப்பீடு சுமார் ரூ.12,000 கோடிக்கும் அதிகம். விரைவில் ஐபிஓ வெளியிடவும் ஜெனோட்டி திட்டமிட்டுள்ளது. இதனால், நிறுவனத்தின் மதிப்பு இன்னும் அதிகமாகலாம்.
2010-ல் மேனேஜ் மை ஸ்பாவாக துவங்கியதில் இருந்து 2020-ல் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது வரை ஜெனோட்டி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அழகு சாதனம் மற்றும் உடல் நலப் பிரிவில் உலக அளவில் வர்த்தக கிளவுட் சேவை அளிப்பதில் ஜெனோட்டி முன்னணியில் விளங்குகிறது. இதன் டச்லெஸ் மற்றும் மொபைல் சேவை எளிதான வாடிக்கையாளர் தொடர்பிற்கு உதவுகிறது. 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை, இலவச பயிற்சி, ஆலோசனை சேவை மற்றும் மைய மென்பொருள் ஆகியவற்றை அளிக்கிறது.
இத்தனையும் சாத்தியமானது சுதீர் கோனேரு மற்றும் அவரது டீமின் அயராத முயற்சியே. அந்த முயற்சிக்கு விதை சலூன் சென்றபோது கிடைத்த ஓர் ஸ்பார்க் (ஐடியா) மட்டுமே.
யுனிக் கதை தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 39 - Glance: லாக் ஸ்க்ரீனில் நவீன் அள்ளிய லாபம்!
Edited by Induja Raghunathan