#100Unicorns | 'யுனிக்' கதை 04 | Info Edge: சாதாரண பின்புலத்தில் இருந்து அசாதாரண பாய்ச்சல் காட்டிய சஞ்சீவ்!
சஞ்சீவ் பிக்சந்தானி (Sanjeev Bikhchandani) என்ற ஐஐஎம் பட்டதாரியே Info Edge-கான சூத்திரதாரி. இன்ஃபோ எட்ஜ் மூலமாக Naukri.com-ஐ ஒரு வெற்றி நிறுவனமாக உருவாக்கி, வளர்த்தெடுத்தவரும் அவரே.
#100Unicorns | 'யுனிக் கதை 04 | EDGE
நவீன காலத்தில் மனிதர்களைப் பொறுத்தவரை, ஒருவர் வாழ்க்கையில் செட்டில் ஆக கல்வி, வேலை, வீடு மற்றும் வாழ்க்கைத் துணை ஆகியவை மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நான்கையும் ஒருவருக்கு கிடைக்க, உதவும் நிறுவனம்தான் இந்தியாவின் பழமையான நிறுவனமான ’இன்ஃபோ எட்ஜ்’ (
).வேலைவாய்ப்புகள், ரியல் எஸ்டேட் வணிகம், மேட்ரிமோனி சேவைகள் மற்றும் கல்வி தொடர்பான இணையதளங்கள் ஆகியவை Info Edge செயலில் உள்ள முக்கியப் பகுதிகளாகும்.
வேலைவாய்ப்பு அருகிவரும் காலம் இது என்றாலும், அவரவர் தகுதிக்கேற்ற வேலையைப் பெற்றுவிட முடிகிறது. ஒவ்வொருவருக்கும் தகுதிக்கேற்ற வாய்ப்புகளை வழிகாட்ட இன்றைக்கு எண்ணற்ற நிறுவனங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் முன்னோடி
நிறுவனம். வேலைவாய்ப்புக்காக தேடலில் இன்றைய இளைய தலைமுறையினரின் விருப்பமான சாய்ஸ் Naukri.com.இன்று உலகளவில் முன்னணி வேலைவாய்ப்பு போர்ட்டலாக மாறியுள்ள Naukri.com 1997-ல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்த தளத்துக்கு அடித்தளமிட்டது 1995-ல் நிறுவப்பட்ட Info Edge.
சஞ்சீவ் பிக்சந்தானி (Sanjeev Bikhchandani) என்ற ஐஐஎம் பட்டதாரியே Info Edge-கான சூத்திரதாரி. இன்ஃபோ எட்ஜ் மூலமாக Naukri.com-ஐ ஒரு வெற்றி நிறுவனமாக உருவாக்கி, வளர்த்தெடுத்தவரும் அவரே.
சாதாரண பின்புலம்:
ஏதோ பணக்காரக் குடும்பத்தில் பிறந்து இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை சஞ்சீவ் உருவாக்கிவிடவில்லை. சாதாரண நடுத்தர வர்க்கத்தை பின்புலமாகக் கொண்ட சிந்தி குடும்பத்தில் பிறந்தவர் அவர். டெல்லி அவரின் பூர்விகம். அவரின் தந்தை அரசு மருத்துவர். தந்தையின் சம்பளத்தைத் தவிர, சஞ்சீவ் குடும்பத்துக்கு வேறு வருமானம் கிடையாது. அரசுக் குடியிருப்புகளிலேயே சஞ்சீவ்வின் பால்ய காலம் கழிந்தது.
வியாபாரத்துக்கு பெயர்பெற்ற பாரம்பரியமான சிந்திக் குடும்பம் என்றாலும் சஞ்சீவ்வின் நெருங்கிய உறவினர்களில் யாரும் வியாபாரம் செய்யவில்லை. இயல்பாகவே படிப்பில் கொண்டிருந்த அவருக்கு படிப்பை போலவே சொந்தத் தொழிலிலும் சிறுவயது முதலே ஆர்வம். படித்து முடித்ததும் சில காலம் வேலை பார்த்துவிட்டு, தொழில் தொடங்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டே சிறுவயது வாழ்க்கையைக் கடந்தார்.
“பெரிதாக கனவு காண்...
சிறிதாக காலடி எடுத்து வை!”
பி.ஏ பொருளாதாரம் முடித்தவர், 1984-ம் ஆண்டு லோவெஸ் லின்டாஸ் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் அக்கவுன்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் பணி செய்தார். அந்தப் பணியில் அவருக்கு கிடைத்த சம்பளம் ரூ.1,000. அதுவும் சம்பளம் என்ற பெயரில் கிடையாது. உதவித்தொகையாக கிடைத்தது.
அந்த வேலையை உதறியவர், ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளோமா இன் மேனேஜ்மென்ட் கோர்ஸ் முடித்தார். இதன்பின், சில ஆண்டுகள் ஹார்லிக்ஸ் நிறுவனத்தில் வேலை. ஹார்லிக்ஸ் பிராண்டை தனித்துவமான ஒன்றாக மாற்றியதில் அதன் நிர்வாகியாக இருந்த சஞ்சீவுக்கு ஏக பங்குண்டு. மாதம் 8,000 ரூபாய் சம்பளம், நல்ல வேலை என்றாலும் விரைவில் அதில் இருந்து வெளியேறினார். எல்லாம் தனது பிசினஸ் கனவுக்காக.
Naukri யோசனை உதித்த தருணம்:
ஐஐஎம்மில் தன்னுடன் பயின்ற காதல் மனைவி சுரபியிடம் குடும்ப பொறுப்பை ஒப்படைத்துவிட்டு 1990ல் நண்பர் ஒருவருடன் சேர்ந்த இரண்டு நிறுவனங்களைத் தொடங்கினார். அவற்றில் ஒன்றுதான் Info Edge. மற்றொன்று இண்ட்மார்க். இரண்டு நிறுவனத்துக்கும் முதல் பணி வேறுவிதமாக இருந்தது.
இன்ஃபோ எட்ஜ்ஜை பொறுத்தவரை நிறுவனங்கள் வழங்கும் சம்பளம் குறித்த சர்வேக்களை நடத்தியது என்றால், இண்ட்மார்க் நிறுவனமோ தகவல்களின் அடிப்படையில் ட்ரேட் மார்க்குகளுக்கான டேட்டாபேஸை டெவலப் செய்துகொடுத்தது.
''தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்றால், முடிவைப் பொருட்படுத்தாமல் உங்கள் ஐடியாக்களை சோதித்துக் கொண்டே இருங்கள்," - சஞ்சீவ் பிக்சந்தானி
Naukri.com-க்கான ஐடியா என்பது சில பிசினஸ் இதழ்களை படிக்கும்போது கிடைத்தது. பட்டதாரிகள் பிசினஸ் இதழ்களை படிக்கும்போது பின்பக்கங்களைப் படிப்பதை அவர் கவனித்தார். ஏனென்றால், அந்த இதழ்களில் கடைசிப் பக்கங்கள் வேலை வாய்ப்பு விளம்பரங்களால் நிரம்பியிருந்தன. இந்த நடத்தை விசித்தரமாக தோன்ற அப்போதுதான் அவர் ‘வேலைகள்’ என்பது அதிக ஆர்வமுள்ள விஷயமாக இருப்பதை கவனித்தார்.
இதற்கான தீவிர ஆலோசனை வேலைகள் பற்றிய தரவுத்தள யோசனையை ஏற்படுத்த, டெல்லி ஐடி எக்ஸ்போ வலைதளம் பற்றிய அறிவை கொடுக்க இரண்டையும் சேர்த்து மாதம் 25 டாலர் வாடகைக்கு அமெரிக்காவில் ஒரு சர்வரை எடுத்து 1997ல் Naukri.com-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.
என்றாலும், பாதியிலேயே தன்னுடன் இருந்த நண்பன் விட்டுச்சென்றது, செலவை சமாளிக்க முடியாமல், வார இறுதிநாள்களில் சில தனியார் நிறுவனங்களில் மேனேஜ்மென்ட் வகுப்பு எடுப்பது என்று பல சிக்கல்களை சந்தித்தார் சஞ்சீவ்.
நிறுவனம் தொடங்கினாலும், அதற்கென்று தனி அலுவலகம் இல்லை. தனது தந்தையின் கேரேஜ்ஜை அலுவலகமாக்கினார். இப்படி வீழ்ந்தாலும், எழுந்து நின்றவருக்கு காலம் கைகொடுத்தது.
சாத்தியமான பேரழுச்சி:
2000-ம் தொடக்கத்தில் இன்டர்நெட் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாகி வந்த நேரம். ஊடகங்கள் வாயிலாக இன்டர்நெட் குறித்த தகவல்கள் மக்களுக்குச் செல்ல Naukri.com மெல்ல மெல்ல வேலை தேடுபவர்களுக்கான மையப்புள்ளியாக உருவெடுத்தது.
முதல் வருடம் 2.35 லட்ச ரூபாய், அடுத்த ஆண்டு 18 லட்சம் ரூபாய், 2004ம் ஆண்டு 8.4 கோடி ரூபாய் என வருமானம் கிடைத்தது. இதன்பின் நடந்தது எல்லாம் வரலாறு.
ஆம், ஆரம்பித்த குறுகிய ஆண்டுகளிலேயே வளர்ச்சி கண்டது. 2006ல், பிஎஸ்இ பங்குச் சந்தையில் முதன்முதலில் பட்டியலிடப்பட்ட டாட்காம் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது இன்ஃபோ எட்ஜ் தலைமையிலான Naukri.
இதன்விளைவு, Jeevansaathi.com என்ற திருமண தளம், Siksha.com என்ற கல்வி சார்ந்த போர்டல், ரியல் எஸ்டேட்டுக்கு 99acres.com என பல இணையதள தரவு நிறுவனங்களை அடுக்கினார் சஞ்சீவ்.
“தொழில்முனைவோர் ஆக விரும்புவோருக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: கஸ்டமர்கள் மீதும், அவர்களின் தீர்க்க முடியாத பிரச்னைகள் மீதும் கவனம் செலுத்துங்கள். அந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முடிந்தால், எல்லாமே சாத்தியமாகிவிடும்,” - சஞ்சீவ்.
இன்று இந்தியாவின் பல முன்னணி இணையதளங்களைக் கொண்டுள்ள ஒரே நிறுவனம் இன்ஃபோ எட்ஜ். அவை அனைத்தும் சஞ்சீவ் என்ற நபரின் மூளையில் உதித்தவை.
Info Edge நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்களைத் தொட்டு 2020ல் இந்தியாவின் 4-வது ‘யூனிகார்ன்’ நிறுவனம் என்ற பெருமதிப்பை பெற்றது.
இன்ஃபோ எட்ஜ் இன்று பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான Zomato, இன்சூரன்ஸ் நிறுவனமான PolicyBazaar, edtech ஸ்டார்ட்அப் நிறுவனமான Adda247, டிஜிட்டல் லெட்ஜர் தளமான Khatabook ஆகியவை Info Edge முதலீடு செய்த சில முக்கிய ஸ்டார்ட்அப்கள் ஆகும்.
எளிதாகச் சொல்வதென்றால் 2014 நிதியாண்டில் ரூ.336 கோடியாக இருந்த இன்ஃபோ எட்ஜ்ஜின் முதலீட்டு போர்ட்ஃபோலியோ கடந்த 2021 நிதியாண்டில் ரூ.1,108 கோடியாக உயர்ந்தது.
இதுமட்டுமில்லாமல், IE Venture என்ற முதலீட்டு நிறுவனத்தை துவங்கி, Dotpe Pvt Ltd, Qyuki Digital Media Pvt Ltd, Intellihealth Solutions Pvt Ltd, Fanbuff Esports India Pvt Ltd என பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துவருகிறது.
கடந்த நான்கு காலாண்டுகளில், Info Edge அதன் லாபத்தில் சரிவை சந்தித்துள்ளது. ஆனாலும், 10 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இந்த சரிவுக்கு மத்தியிலும் எட்டியுள்ளது. இவை அனைவற்றுக்கும் ஒரே சூத்திரதாரி சஞ்சீவ் பிக்சந்தானி. இவரின் சாதனைகளுக்கான சிறந்த அங்கீகாரமாக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
அட... இது சூப்பர் மேட்டர்!
ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் தலைமைப் பண்புதான் மிக முக்கியம். அதேபோல், அந்தத் தலைவருக்கு ‘இன்ஸிபிரேஷன்’ என்பதும் முக்கியம்தானே. இவை குறித்த சஞ்சீவின் பார்வை நிச்சயம் வேற லெவல்தான்.
தலைவர்கள் உருவாக்கப்படுவது எங்கே?
“நிஜ வாழ்க்கைதான் தலைவர்களை உருவாக்குகிறதே தவிர, எந்த பிசினஸ் ஸ்கூலும் அல்ல!”
ஒரு பிசினஸ் தலைவராக உங்களின் இன்ஸ்பிரேஷன்..?
“ஒற்றை மனிதரை எப்போதும் நான் இன்ஸ்பிரேஷனாக கருதுவது இல்லை. நீங்கள் உற்று கவனித்தால், ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முடியும். நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான மக்களிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆம், மற்றவர்களின் அனுபவங்களில் இருந்தும் நீங்கள் நிறையவே கற்றுக்கொள்ளலாம்.”
தன் தொழிலை மேம்படுத்திக்கொண்ட பல கோடி இளைஞர்களின் வேலைக் கனவுகளை நிறைவேற்றி வரும் சஞ்சீவின் வெற்றி உத்திகள் நாமும் பின்பற்றக் கூடியதே!
யூனிகார்ன்ஸ் தொடரும்...
தகவல் தொகுகுப்பு உதவி: ஜெய்