குமார் வேம்பு இடமிருந்து 3.3 கோடி ரூபாய் நிதி பெற்றது 'ஸ்டார்ட்-அப் தமிழா' நடத்தும் பான்ஹெம் வென்ச்சர்ஸ்!
அடுத்த தலைமுறை ஸ்டார்ட்-அப் நிறுவனர்களையும் தொழில் முனைவோர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது பான்ஹெம் வென்ச்சர்ஸ்.
ஸ்டார்ட்-அப்'களுக்கு முதலீடுகள் பெற உதவும் தொலைக்காட்சி தொடர் நடத்தவுள்ள 'ஸ்டார்ட் அப் தமிழா'-வை படைத்துள்ள 'பான்ஹெம் வென்ச்சர்ஸ்' (BAANHEM Ventures) நிறுவனம், தொழில்நுட்பத் தலைவர்களுள் ஒருவரான குமார் வேம்பு சமீபத்தில் நிருவிய 'முதல் பார்ட்னர்ஸ்' மூலம் ரூ.33 மில்லியன் (அதாவது, 3.3 கோடி) நிதியை முதலீடாகப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனம் எல்.ஹேமச்சந்திரன் மற்றும் ஆர்.பாலச்சந்தர் ஆகியோரால் இணைந்து தொடங்கப்பட்டது. அடுத்த தலைமுறை ஸ்டார்ட்-அப் நிறுவனர்களையும் தொழில் முனைவோர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது பான்ஹெம் வென்ச்சர்ஸ்.
இந்நிறுவனம் முதன் முறையாக தொடங்கியிருக்கும் பிசினஸ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஸ்டார்ட்அப் தமிழா', பல்வேறு தொழில்துட்றை தலைவர்களிடமிருந்து மூன்று சீசன்களுக்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக ரூ.200 கோடிக்கும் அதிகமான முதலீட்டிற்கான வாக்குறுதியை ஏற்கனவே பெற்றிருக்கிறது.
தற்போது 'பான்ஹெம் வென்ச்சர்ஸ்'-இன் முதல் பார்ட்னர்ஸ் நிறுவனர் குமார் வேம்பு கூறும்போது,
“புதிய தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பது, கிராமப்புற வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதுமான பான்ஹெம் நிறுவனத்தின் திட்டம் என்னை மிகவும் ஈர்த்தது. வெற்றிகரமான ஸ்டார்ட்-அப்`களை உருவாக்குவதில் பான்ஹெம் வென்ச்சர்ஸ் அறிவியல் பூர்வமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. எனவே, இந்தப் புதிய முயற்சியில் முதலில் இணையும் நபராக இருக்க விரும்பினேன். முதல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் தொடங்குவதற்கே இதுதான் காரணமாக அமைந்தது,” என்றார்.
பான்ஹெம் வென்ச்சர்ஸின் எல்.ஹேமச்சந்திரன் மற்றும் ஆர்.பாலசந்தர் கூறும்போது,
“தொழில்முனைவோர்களை உருவாக்கி வளர்த்தெடுப்பதற்கு நிதி ஆதரவு மிக முக்கியமானது. தொழில் ஆர்வலர்கள் தங்கள் யோசனைகளை வெற்றிகரமான வர்த்தகமாக வளர்க்க பான்ஹெம் வென்ச்சர்ஸ் உதவிகளைச் செய்து வருகிறது. குமார் வேம்பு முதலீட்டாளர்களை எங்களோடு இணைத்திருப்பது இதில் முக்கிய அங்கமாகும்.“
இவர்கள் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வெற்றிகரமாக உருவாக்க இயலும் என்று நம்புவதாக தெரிவித்தனர்.