Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

#100Unicorns |'யுனிக்' கதை 03 | MuSigma - பில்லியன் டாலர் நிறுவனத்தை நிறுவிய பிசினஸ் அனுபவமில்லாமல் தீரஜ் ராஜாராம்!

டேட்டா என்பது எவ்வளவு முக்கியம் என உலக நிறுவனங்கள் விழித்துக் கொள்ளும் முன்பே, பிக் டேட்டா துறையில் MuSigma என்ற நிறுவனத்தை தொடங்கிய தீரஜ் ராஜாராம், இந்திய ஸ்டார்ட்-அப் துறையில் அதிகம் போற்றப்படாத ஒரு முன்னோடி ஆவார்.

#100Unicorns |'யுனிக்' கதை 03 | MuSigma - பில்லியன் டாலர் நிறுவனத்தை நிறுவிய பிசினஸ் அனுபவமில்லாமல்  தீரஜ் ராஜாராம்!

Wednesday June 29, 2022 , 5 min Read

#100Unicorns | 'யுனிக் கதை 03 | MuSigma

பிசினஸில் அனுபவமில்லாமல், தொழில்முனைவோர் என்ற நினைப்புக்கூட இல்லாமல் சொந்த வீட்டை விற்று ஒருவரால் தொடங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட்-அப் பின்னர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் உச்ச வெற்றியாக கருதப்படும் ‘யூனிகார்ன்’ அந்தஸ்தை பெற்றுள்ளது என்றால் நம்புவது சற்று கடினமாக இருக்கும். எனினும், உண்மை அதுவே.

வாருங்கள் நம் யூனிகார்ன் தொடரில் ‘MuSigma’ வெற்றிக் கதைக்குச் செல்வோம்...

இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் முக்கியமான தரவு பகுப்பாய்வு (Data Analytics) நிறுவனமாக உருவெடுத்துள்ள MuSigma நிறுவனம். பெரும்பாலான இந்திய ஸ்டார்ட்-அப்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்காத வளர்ச்சியை பெற்றுள்ள MuSigma-வின் அத்தியாயத்தை எழுதியது தமிழகத்தில் பிறந்து, தமிழகத்தில் கல்வி கற்ற தீரஜ் ராஜாராம் என்பவர். 

 

ஆம், தீரஜ் ராஜாராம்தான் MuSigma-வின் நிறுவனர். சென்னையில் பிறந்து, கிண்டி பொறியியல் கல்லூரியில் எலெட்ரிக்கல் இன்ஜியரிங் முடித்துள்ள தீரஜ், சிகாகோவில் மேற்படிப்பு முடித்த பின் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனமான பூஸ் ஆலன் ஹாமில்டனில் பணிபுரிந்தார். கை நிறைய வருமானம் கிடைத்தது. 

Musigma

தீரஜ் ராஜாராம்

யோசனை உதித்த தருணம்:

"என்னை ஒரு தொழில்முனைவராக எப்போதும் நான் நினைத்ததில்லை. நான் ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பதையும் விரும்பியதில்லை. நான் செய்துவரும் வேலையில் அனைத்தும் மகிழ்ச்சியாகவே சென்றது..." - தீரஜ் ராஜாராம்.

- இப்படி இருந்தவருக்கு பிசினஸ் என்பது அவரின் கற்கும் ஆர்வத்தால் தொடங்கியது. பொதுவாக தகவல் ஆலோசனை நிறுவனங்களில், பயன்பாட்டுக் கணிதம், தரவு அறிவியல் ஆகியவை இல்லாமல் இருந்தது. அப்படி இருந்தாலும் அவற்றுக்கான கட்டணம் என்பது கணக்கிட முடியாத வகையில் இருந்தது.

தகவல் மேலாண்மை நிறுவனமான பூஸ் ஆலன் ஹாமில்டனில் பணிபுரிந்தபோது பயன்பாட்டுக் கணிதம், தரவு அறிவியல், மற்றும் கம்ப்யூட்டிங் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கான ஆலோசனை இல்லை என்ற உண்மையை உணர்ந்தவர், அந்த இடைவெளியை நிரப்ப விரும்பினார்.

புதுமையான இந்தக் காரணங்களே MuSigma-வை தொடங்க வழிவகுத்தது. இந்தியா திரும்பியவர், 2004ல் தொழில்முனைவில் தனது முதல்படியை எடுத்துவைத்தார். பெங்களூருவில் ஒரு சிறிய அலுவலகத்தில் MuSigma உதயமானது. நிறுவனத்தின் பெயர் புள்ளியியல் சொற்களான "மு (μ)" மற்றும் "சிக்மா (σ)" ஆகியவற்றிலிருந்து வந்தது என பின்புலமும் சொல்லப்படுகிறது.

‘மாத்தியோசி’யின் மகத்துவமும் மனைவியின் உறுதுணையும்:

முசிக்மா நிறுவனத்தின் ஆரம்பம் எளிமையானதாக இருந்தாலும் இன்று அது பல மில்லியன் டாலர் நிறுவனமாக அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் IBM, Cognizant மற்றும் Accenture என ஆலோசனை நிறுவனத்தின் மான்ஸ்டர்கள் ஏற்கெனவே சந்தையில் கோலோச்சிக்கொண்டு இருந்தன. எனினும், இவை யாவும் MuSigma-வின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. அந்த நிறுவனங்களில் இருந்து மாற்றி சிந்தித்ததே அவை MuSigma ஏற்றம் பெறக் காரணம்.

IBM, Cognizant மற்றும் Accenture போன்றவை ப்ரோகிராமிங் மற்றும் பிசினஸ் அனாலிசிஸை தனித்தனியாக மேற்கொண்டன. சற்று மாற்றி யோசித்து, இதை ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் பயன்பாட்டு கணிதம், தொழில்முறை ஆய்வு மற்றும் ப்ரோக்ராமிங் என அனைத்தும் ஒன்றாக இணைத்து முடிவு விஞ்ஞானி (Decision Scientist) என்ற பெயரில் வழங்குவது என முடிவெடுத்தார் தீரஜ்.

சந்தையில் விரைந்து வேலையை முடிக்க விரும்பிய நிறுவனங்களுக்கு இந்த ஐடியா ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது. இப்படியான தனிப்பட்ட சிந்தனைகளுடன் MuSigma தனது வேகத்தை தொடங்கினாலும், தொடங்குவதற்கு முழுபலமாக இருந்தது தீரஜின் காதல் மனைவியே. மனைவியின் சம்மதத்துடன் வீட்டை விற்று தங்களது தனிப்பட்ட சேமிப்பில் முதலீடு செய்தனர் இருவரும்.

பணியமர்த்துதலில் நட்பான அணுகுமுறை:

பொதுவாக ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடுகள்தான் பிரச்னையாக இருக்கும். MuSigma-வை பொறுத்தவரை 80% முதலீடுகளை தீரஜ் செய்தாலும், வேறுமாதிரியான பிரச்னைகள் வந்தன. நிறுவனத்துக்கு வேலை செய்ய சரியான ஆட்கள் கிடைப்பதுதான் அந்தப் பிரச்னை.

”ஆரம்பத்திலிருந்தே தான் எதிர்கொண்ட ஒரு பெரிய சிரமம் இது,” என்கிறார் தீரஜ்.

''எனது நிறுவனத்தில் சேருமாறு நான் தொடர்ந்து பலரை கெஞ்சினேன்..." என ஒரு பேட்டியில் தீரஜ் சொன்னதே அவர் எதிர்கொண்ட சிரமத்துக்கான உதாரணம். நிறுவனத்தை நிறுவிய முதல் நான்கு ஆண்டுகளில், அவர் தனியாகவே அனைத்து வேலைகளையும் கையாண்டுள்ளார்.

நிறுவனத்தின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக தொழில்துறையில் சரியான தொடர்புகளை தனியாக ஏற்படுத்தி வந்த அவர், நண்பர்கள் வட்டத்தில் MuSigma-வின் எதிர்காலம் குறித்தும், வாய்ப்புகள் குறித்தும் விளக்கியே ஒவ்வொரு ஊழியர்களாக நிறுவனத்துக்கு பணியமர்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக, ஒரு நபரை வேலைக்கு சேர்க்க, அவரின் அம்மாவிடம் சென்று MuSigma-வின் வளர்ச்சி குறித்து விரிவாக எடுத்துரைத்து பணியமர்த்தியது சுவாரசியமான கதை.

இந்த அளவுக்கு ஆரம்ப கட்டங்களில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் ஏராளம். இந்த சிரமமான பணியமர்த்தலே அவருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. MuSigma-வின் வளர்ச்சியில் முதல்கட்டமாக நியமிக்கப்பட்ட ஊழியர்களின் பங்கு அதிகம். அவர்கள் அனைவரும் இன்னும் தீரஜின் நெருங்கிய நண்பர்களாகவும், MuSigma-வின் ஒரு பகுதியாகவும் உள்ளனர்.

ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சி என்பது நிதி திரட்டலுக்கு பின்பே இருக்கும். ஆனால், தீரஜ் ஆரம்ப நாட்களில் வெளியில் இருந்து பணம் திரட்டுவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்ததோடு 80 சதவீதம் தனது சொந்தப் பணத்தையே முதலீடும் செய்தார்.

"நீங்கள் உங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்தால்தான் புத்திசாலித்தனமாகவும் சிக்கனமாகவும் செலவு செய்வீர்கள். உங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நிறைய கற்றல் கிடைக்கும்."

- முதலீடுகள் குறித்து இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுக்கிறார் தீரஜ். என்னதான் சொந்தப் பணத்தையே முதலீடு செய்தாலும், யூனிகார்ன் அந்தஸ்தை பெற ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி திரட்டல் முக்கியமான ஒன்று. இதை உணர்ந்த MuSigma, ஆரம்பித்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் சுற்று முதலீட்டை திரட்டியது.

yourstory-Dhiraj-Rajaram

Dhiraj Rajaram

நிதி திரட்டலில் வரலாறு படைத்த தருணம்:

30 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது எஃப்டிவி கேப்பிட்டல்ஸ் நிறுவனம். இது நடந்தது 2008-ல். இரண்டாவது சுற்று சிரீஸ் சி நிதியாக 25 மில்லியன் அமெரிக்க டாலர் 2011-ம் ஆண்டு Sequoia Capital மூலமாக கிடைத்தது. இதன்பின், நிதி திரட்டலில் ஒரு மைல்கல்லாக General Atlantic மூலம் தனிப்பட்ட ஈக்கிவிட்டியாக 108 மில்லியன் டாலர் முதலீடு பெற்றது. ஒரு பிசினஸ் அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தில் இதுவரை வரலாற்றில் செய்யப்பட்ட மிக அதிகபட்ச முதலீடு என்றால் அது இதுவே.

2013-ல் மாஸ்டர்கார்டு நிறுவனம் 45 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய, அந்த நேரத்தில் ரூ.5400 கோடியுடன் இந்தியாவின் மூன்றாவது யூனிகார்ன் ஸ்டார்ட்-அப் அந்தஸ்த்தை பெற்றது MuSigma.

MuSigma ஒரு நிறுவனமாக வளர்ந்தவுடன், தீரஜ் தனது நியாயமான அங்கீகாரத்தைப் பெறத் தொடங்கினார். நிறுவனமும் நிறுவனரும் கைகோத்து வளர்ந்தார்கள் என்றே சொல்லலாம். ஃபார்ச்சூன் இதழின் 500 மதிப்புமிக்க நிறுவனங்களில் 140-வது இடத்தை பெற்றுள்ளது MuSigma. இதுவே அந்த நிறுவனத்தின் அபார வளர்ச்சிக்கு சான்று. ஹெல்த்கேர், விமானம், வங்கிகள், சில்லறை வணிகச் சங்கிலிகள் மற்றும் துரித உணவு நிறுவனங்கள் பல இன்று MuSigmaவின் வாடிக்கையாளர்கள்.

ஆரம்பத்தில் MuSigma பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு நிறுவனமாக இருந்துள்ளது. ஆனால், அதன் வெற்றி என்பது இந்திய ஸ்டார்ட்-அப்களுக்கு ஒரு உத்வேகம் கொடுக்கக் கூடியது என்றால் மிகையல்ல.

சறுக்கல் இல்லாத ஸ்டார்ட்-அப் உண்டோ...?

பிக் டேட்டா-வின் அவசியத்தை ஊர் விழித்துக்கொள்வதற்கு முன்னரே புரிந்து கொண்ட தீரஜ், 2008லேயே MuSigma-வை தொடங்கியதால், பல பெரிய வாடிக்கையாளர்களை உலகளவில் பெற்று வேகமாக வளர்ந்தது. 2013 முதல் லாபகரமான ஸ்டார்ட்-அப் ஆக திகழ்ந்த நிறுவனத்துக்கு, சறுக்கல் 2016ல் தொடங்கியது.

திடீரென நிறுவனத்தைவிட்டு வெளியேறிய டாப் முக்கிய ஊழியர்கள், அதன் விளைவாக கைநழுவிப்போன பிரபல வாடிக்கையாளர்கள் என 2016-ல் தடுமாறியது MuSigma. இதலாம் ஸ்டார்ட்-அப்’ல சகஜமப்பா... என்பது போல, 2017ல் மீண்டும் செயல்பாடுகள் சீராக, வருடாந்திர வளர்ச்சியாக 10 சதவீதத்தை எட்டி மீண்டும் ட்ராக்குக்கு வந்தது.

மொத்தம் 7 ரவுண்ட் முதலீடுகளாக $211.4 மில்லியன் பெற்று, சுமார் 1.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடன் MuSigma தற்போது இருக்கிறது.

தீரஜ்
“உங்களின் டீமில் எவரையேனும் இணைத்துக்கொள்ள விரும்பினால், அவரின் தகுதிகள் மட்டும் பார்க்காமல், அவரது கேரக்டரையும் கவனித்து தெரிவு செய்வது மிக மிக முக்கியம்.”

- பிசினஸ் பார்ட்னர்கள் மட்டுமல்ல, நம் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போதை இதை மனதில் வைத்துக்கொள்ளச் சொல்கிறார் தீரஜ்.

இப்படி சீரியஸாக மட்டுமின்றி சுவாரஸ்யமாகவும் நமக்கு வெற்றிகரமான தொழில்முனைவு குறித்தும் சொல்லித் தருவார் இவர். உதாரணமாக...

“நம்மில் இரண்டு வகையான தொழில்முனைவோர்கள் இருக்கின்றனர். முதலாமவர் அரேஞ்சுடு மேரேஜ் தொழில்முனைவோர்; இரண்டாமவர் லவ் மேரேஜ் தொழில்முனைவோர்.
ஒரு அரேஞ்சுடு மேரேஜ் தொழில்முனைவர் என்பவர் சரியான பிசினஸை நிதானமாகத் தேர்ந்தெடுப்பார். அனுபவத்துக்காக ஊர் சுற்றுவார்; பல ஐடியாக்களை அசைபோடுவார்; காபி ஷாப்பில் அமர்ந்துகொண்டு நண்பர்களுடன் கலந்தாலோசிப்பார்; நிதியைத் திரட்டுவதில் தீவிரம் காட்டுவார்... இறுதியில் சுபமாக அரேஞ்சுடு மேரேஜ் போல தொழில்முனைவோர் ஆவார்.
ஆனால், இரண்டாவது வகையான லவ் மேரேஜ் தொழில்முனைவோர் இருக்கிறாரே... திடீரென ஒரு பெண்ணைப் பார்ப்பார். அந்தப் பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ முடிவெடுப்பார். காதல் கல்யாணம் நடக்கும். அந்தப் பெண்தான் ‘ஐடியா’. நான் ஒரு தொழில்முனைவோர் ஆனது ‘ஐடியா’வுடன் கொண்ட நெருக்கத்தால்தான்...”

ம்... நீங்க எப்படி? 

யூனிகார்ன்ஸ் தொடரும்...

கட்டுரை உதவி: ஜெய்