#100UNICORNS | ‘யுனிக்’ கதை 31 - Nykaa: அழகு சாதன சந்தையின் ‘மகாராணி’ ஃபால்குனி நாயர்!
வாரணாசியில் அன்று ஒரு சிறிய அறையில் தலா ரூ.800 மதிப்புள்ள 10 ஆர்டர்களைக் கொண்டாடிய ஃபால்குனி நாயர் இன்று இந்தியாவின் பணக்கார பெண்மணி!
உலகளவில் அதிக பில்லியனர்கள் உள்ள நாடுகளைப் பற்றி பேசினால், 735 பில்லியனர்களுடன் முன்னணியில் இருப்பது அமெரிக்கா தான். 539 பில்லியனர்களைக் கொண்ட சீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 169 பில்லியனர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளவில் தொழில்முனைவோர்களில் ஆண்களே அதிகம். ஆண்கள் ஆதிக்கம் அதிகம் காணப்படும் இந்தியாவிலும் இதே நிலைதான். எனினும், சில பெண் தொழில்முனைவோர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஃபால்குனி நாயர்.
ஃபால்குனி நாயர்... தொழில்முனைவு விருப்பங்கள் கொண்டிருக்கும் பலரும் அறிந்திருக்கும், அறிந்திருக்க வேண்டிய பெயர். இன்றைய தேதியில் இந்தியாவின் பணக்கார பெண்களில் முன்வரிசையி இருப்பவர் ஃபால்குனி நாயர். பணக்கார பெண்மணியாக பிறக்கவில்லை என்றாலும், தனது நம்பிக்கை, விடாமுயற்சியால் உலகின் மிகப் பெரிய அழகு மற்றும் ஆரோக்கிய பிராண்டுகளில் ஒன்றான ‘நைகா’ (
)-வை உருவாக்கி இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தன்னைத் தானே சுயமாக உருவாக்கினார் ஃபால்குனி. அவரின் உத்வேகக் கதையே இந்த யூனிகார்ன் அத்தியாயம்.50 வயதில் தொடங்கிய சாம்ராஜ்ஜியம்
ஃபால்குனி நாயர் ‘நைகா’ மூலம் தொடர்ந்து சாதித்து வரும் வெற்றியை அனைவரும் அறிந்திருந்தாலும், அவரது பயணத்தின் ஆரம்பம் அதிகம் அறியப்படாத ஒன்று. பிப்ரவரி 19, 1963-ல், மும்பையில் நடுத்தர வர்க்க குஜராத்தி குடும்பத்தில் பிறந்த ஃபால்குனி நாயரின் தந்தை ஒரு தொழிலதிபர். வாகனத்துக்கு பயன்படும் பேரிங் உருளைகளை தயாரித்து விற்கும் ஒரு சிறிய தொழிற்சாலையை 190 சதுர அடி கொண்ட இடத்தில் நடத்திவந்தவர்.
தந்தை தொழில் நடத்தி வந்தால்தான் என்னாவோ, ஃபால்குனிக்கு வணிகத்தின் மீது நாட்டம் வந்தது. அதன்காரணமாக வணிகக் கல்வியை பயின்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு, அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் ஃபால்குனி.
கல்வியின் அடுத்தபடியாக வங்கிப் பணி. முதுகலை படிப்பை முடித்த ஃபால்குனி பிரபல கோடக் மஹிந்திரா வங்கியில் சேர்ந்து தனது தொழிமுறை வாழ்க்கையை தொடங்கினார். கோடக் மஹிந்திரா வங்கியில் ஃபால்குனிக்கு இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் ரோல்.
ஆர்வம் இருந்தால் திறமையை வளர்த்து கொள்ளலாம். திறமை புதிய வாய்ப்புகளை அளிக்கும் என்பதற்கு உதாரணம் ஃபால்குனி.
தனது பணியில் இருந்த ஆர்வம் காரணமாக திறமையை வளர்த்துக்கொண்டு கோடக் மஹிந்திரா வங்கியில் புதிய வாய்ப்புகளை பெற்றார். இன்வெஸ்ட்மென்ட் பேங்கராக தொடங்கிய அவரது வங்கி பயணம், 20 வருடங்கள் கடந்து நிர்வாக இயக்குநர் என்னும் அளவுக்கு உயர்ந்தது.
கனவை நோக்கிய பயணம்
2010ம் ஆண்டு சமயம், இந்தியாவில் ஸ்டார்ட் அப்கள் பேச்சுக்கள் எழுந்த நேரம் அது. தந்தையின் பிசினஸ் ரத்தமும், வணிக கல்வியும், வங்கி பணிச்சூழலும் இயல்பாகவே ஃபால்குனிக்கு ஸ்டார்ட் அப் குறித்த அறியவைத்தது. கூடவே ஆர்வப்படவும் வைத்தது. ஆர்வம் புதிய ஸ்டார்ட் அப் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வரவைத்தது.
கை நிறைய சம்பளம், நிறைவான வாழ்க்கையை தரும் வங்கிப் பணி தனது பிசினஸ் எண்ணத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. துணிந்து வேலையை விட முடிவெடுத்தார். ஆனாலும், பயம் அவரை விடவில்லை. ஃபால்குனிக்கு குடும்பமே எல்லாம். கணவரும், குழந்தைகளும் பயத்தை அதிகப்படுத்தினாலும், ஃபால்குனியின் கனவை, ஆசையை புரிந்துகொண்டு கை கொடுக்க முன்வந்தனர். விளைவு, பயத்தை விடுத்து நம்பிக்கையின் பாய்ச்சலை கொண்டு தொழிலதிபராக வேண்டும் என்ற தனது கனவை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.
வங்கிப் பணியை துறந்தவர், 2012-ல் தனது 50வது பிறந்தநாளுக்கு சில மாதங்களுக்கு முன்பு நாயர் தனது வேலையை விட்டுவிட்டு தனது தந்தையின் அலுவலகத்தில் இருந்து நைகா நிறுவனத்தை தொடங்கினார்.
‘நைகா’ பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கு அழகு சாதனப் பொருட்களை விற்கும் நிறுவனம். அழகு சாதனப் பொருட்கள் மீது ஃபால்குனிக்கு ஆழ்ந்த தனிப்பட்ட ஆர்வம் இல்லை. எனினும், இந்த துறையை தேர்ந்தெடுக்க காரணம், அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் வழிகாட்டவும் முடியும் என்ற நம்பிக்கையே அவரை இதை தேர்ந்தெடுக்க வைத்தது.
“அழகாக இருக்க விரும்பும் பெண்களுக்காக நான் துணை நிற்க விரும்பினேன். அழகு என்பது ஆண்களின் கண்களுக்கோ அல்லது மற்ற பெண்களுக்காவோ அல்ல. பெண்கள் தாங்கள் அழகாக இருக்கிறோம் என்று நம்பவேண்டும்” - ஃபால்குனி நாயர்.
நைகா என்பது சமஸ்கிருத வார்த்தையான 'நாயாகா' என்பதில் இருந்து எடுக்கப்பட்டது. சுருக்கமாக இதன் பொருள் 'நாயகி'. இன்றைய ட்ரெண்ட்டுக்கு தகுந்தவாறு சொல்வதென்றால் லைம்லைட்டில் பெண்கள் இருக்கவேண்டும் என்பதே அந்த வார்த்தைக்கான பொருள். அழகு சாதனப் பொருள் விற்பனை என்று முடிவான பின்பு நேரடி விற்பனைக்கு செல்லவில்லை அவர்.
மாறாக இ-காமர்ஸ் விற்பனை என்பதில் தெளிவாக இருந்தார். ஆன்லைன் ஷாப்பிங் இந்தியாவில் எட்டிப் பார்த்து கொண்டிருந்த சமயம் 2010. இந்தியாவில் அனைத்தையும் மக்கள் கடைகளுக்கு சென்று வேண்டியவற்றை வாங்கிக்கொண்டிருந்த காலத்தில், இருந்த இடத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் பொருட்கள் வீடு தேடி வரும் விற்பனை என்று ‘நைகா’ புதுமையின் பக்கம் நின்றது.
வித்தியாசம் காண்பித்த நைகா
ஃபால்குனி நினைத்தது நடந்தது. நைகாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. காரணம், இந்தியாவில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை என்பது அதுவரை சில வெளிநாட்டு கம்பெனிகளை சார்ந்தே இருந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இந்திய அழகு சாதனப் பொருட்கள் கம்பெனிகள் இருந்த நிலையில், நைகா அவற்றில் வித்தியாசம் காண்பித்தது. இதுவரை கேட்டிராத பிராண்டுகள், ‘பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் அழகு சாதனப் பொருட்கள்’ என வித்தியாசமான யோசனையுடன் செயல்பட்ட நைகாவை மக்கள் சீக்கிரமே கைதூக்கி விட்டனர். விற்பனை பெரிதானது. நிறுவனம் பெரிதானது.
எளிதாக இது நடந்துவிடவில்லை. சில பல சிக்கல்களும் இருந்தன. சிலசமயம் நிறுவனத்தின் வெப்சைட் செயல்படாமல் முடங்கிப்போவது போன்ற தொழில்நுட்ப சிக்கல் போன்று இடையில் பல வந்தன. ஆனாலும், பொறுமையுடன் அனைத்தையும் கையாண்டார் ஃபால்குனி. ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஃபால்குனியின் மகள் விவரித்த ஒரு சம்பவம்:
“வாரணாசி சென்றிருந்த நேரம். எனது அம்மா கணினியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். காரணம், நைகாவை தொடங்கிய அந்த சமயத்தில் ஆன்லைனில் ரூ.800 அளவுக்கு கிடைத்த 10 ஆர்டரை நினைத்து அவர் அவ்வளவு சந்தோஷம் அடைந்தார்.”
வளர்ந்த கதை
ரூ.800-ல் தொடங்கிய நைகாவின் பயணம் மக்களின் அமோக ஆதரவு காரணமாக விரைவாக வளர்ந்தது. ஆன்லைன் விற்பனையில் இருந்து நேரடி விற்பனை தொடங்கியது. அதேநேரம் ஆன்லைனில் கோடிகளை குவிக்கவும் தவறவில்லை. ஆரம்ப கட்டத்தில் நைகா நிறுவனதுக்கு எந்த நிறுவனம் நிதி அளிக்க முன்வரவில்லை. இதனால், ஃபால்குனி நாயர் மற்றும் அவரது கணவர் சஞ்சய் நாயர் இருவரது நிதியில்தான் அந்நிறுவனம் இயங்கியது.
சஞ்சய் நாயர் தனியார் ஈக்விட்டி நிறுவனமான கேகேஆர் & கோ-வின் நிர்வாகத் தலைவர். இதனால், நைகா முதல் இரண்டு ஆண்டுகள் குடும்ப நிதியில்தான் இயங்கியது. ஆனால், விரைவான வளர்ச்சி முதலீட்டாளர்களை ஈர்த்தது. நைகா நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் முக்கியமானவர்கள் அமெரிக்க தனியார் பங்கு நிறுவனமான டிபிஜி க்ரோத், பில்லியனர்கள் ஹர்ஷ் மரிவாலா மற்றும் ஹாரி பங்கா ஆகியோர் அடங்குவர்.
முதலீடுகள் கிடைக்க, தொழிலை விரிவுபடுத்தினார். இந்தியா முழுவதும் நைகா ரீடெயில் கடைகளை திறந்தார். அதேநேரம், பிராண்டுகளையும் அதிகப்படுத்தினார். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி...
நைகா இப்போது ஆன்லைன் மற்றும் கடைகளில் 4,000-க்கும் மேற்பட்ட பிராண்டுகளை விற்கிறது. தற்போதைய நிலவரப்படி, 2023-ல், இந்தியாவின் 30 நகரங்களில் 70-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளைக் கொண்டுள்ளது நைகா.
மேலும், 2020-ம் ஆண்டில் உலகளாவிய சந்தையில் கால்பதிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவில் நைகா செயல்படத் தொடங்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டுதான் இந்தியாவின் 31-வது ‘யூனிகார்ன்’ நிறுவனம் ஆனது ‘நைகா’.
ஒரே நாளில் பில்லியனர்..!
2022-ல் நைகா பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளன்றே ஐபிஓ விற்பனை சுமார் 80% வரை அதிகரிக்க, அதன் நிறுவனரான ஃபால்குனி நாயரின் சொத்து மதிப்பு ரூ.48,405.50 கோடியாக அதிகரித்தது. புதிய பங்கு வெளியீட்டின் மூலம் சொந்த முயற்சியில் பில்லியனரான பெருமையை ஃபால்குனி நாயர் பெற்றது மட்டுமல்லாமல், ஓரே நாளில் இந்தியாவின் பெண் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பெற்றார்.
அதேநேரம் நைகா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.04 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்ததுடன், இதன் காரணமாக பிரிட்டானியா, கோத்ரேஜ், இண்டிகோ போன்ற ஜாம்பவான் நிறுவனங்களின் சந்தை மதிப்புடன் ‘நைகா’ ஒப்பிடப்பட்டது.
ஃபால்குனி நாயர் தற்போது இந்தியாவின் பணக்கார பெண்மணி என அறிவிக்கப்பட்டுள்ளார். பையோகான் நிறுவனர் கிரண் மஜும்தாரை பின்னுக்கு தள்ளி, ஒரே வருடத்தில் இவரது சொத்து மதிப்பு ரூ.48,405.50 கோடியாக உயர்ந்தது.
“உங்கள் கனவுகளைத் தொடர உங்களுக்கு சுதந்திரம் கிடைத்தால், வானமே எல்லை!” - ஃபால்குனி நாயர்
வாரணாசியில் அன்று ஒரு சிறிய அறையில் தலா ரூ.800 மதிப்புள்ள 10 ஆர்டர்களைக் கொண்டாடிய அதே ஃபால்குனி நாயர் இன்று இந்தியாவின் பணக்கார பெண்மணி. அவரின் சொத்து மதிப்பு ரூ.48,405.50 கோடி. யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு உயரத்தை எட்டியிருக்கிறார் ஃபால்குனி நாயர்.
சமீபத்திய மாதங்களில் ‘நைகா’ சில சரிவுகளை சந்தித்தாலும், அனைத்து சரிவுகளுக்கும் ஒற்றை நம்பிக்கையாக இருக்கிறார் ஃபால்குனி. எந்தவித பின்புலமும் இல்லாமல் அவர் நிகழ்த்தியிருக்கும் இவ்வளவு பெரிய சாதனை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது.
குறிப்பாக, சாதிக்க வயது தடை என நினைப்பவர்களுக்கு. 50 வயதில் ‘நைகா’வை தொடங்கிய சமயத்தில் ஃபால்குனி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தார். அவளுடைய குழந்தைகள் இருவரும் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலான மக்கள் ஓய்வு பெற நினைக்கும் வயதில் ஃபால்குனி தனது தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்கி சாதனையின் உச்சத்தை தொட்டுள்ளார் என்றால் சாதிக்க வயது தடையில்லைதானே!
தற்போது ‘நைகா’ அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்துள்ளது. ஃபால்குனியின் மகளான அத்வைதா நாயர் தாயின் கரங்களை பற்றி நைகா தலைமை பொறுப்பை ஏற்று புதிய சிந்தனைகளை செயல்படுத்த தொடங்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.