11 மாதக் குழந்தையின் உலகச் சாதனை - கின்னஸில் இடம் பிடித்த மார்த்தாண்டம் குட்டிப் பையன்!
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள பாகோடு தேனாம்பாறை பகுதியைச் சேர்ந்த தம்பதி பெரில் ஹெர்மன் – பியான்ஷா. அவர்களது 11 மாத குழந்தையான அற்றி ஹெர்மன், 233 பொருள்களை சரியாக அடையாளம் காட்டி பழைய உலக சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
சாதனை புரிவதற்கு வயது தடையல்ல என்பதை ஓர் 11 மாதக் குழந்தை நிரூபித்திருக்கிறது. தவழும் குழந்தைகளை சமாளிப்பதே பெற்றோருக்கு மிகப் பெரிய சாதனைதான். அப்படியிருக்கையில் தங்களது 11 மாதக் குழந்தை உலக சாதனை புரியும் அளவுக்கு பயிற்சியளித்த அந்த கன்னியாகுமரி பெற்றோரின் செயலும் சாதனையே.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள பாகோடு தேனாம்பாறை பகுதியைச் சேர்ந்த தம்பதி பெரில் ஹெர்மன் – பியான்ஷா. அவர்களது 11 மாதக் குழந்தையான அற்றி ஹெர்மன் தான் 233 பொருள்களை சரியாக அடையாளம் காட்டி பழைய சாதனையை முறியடித்த அந்த கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர்.
தங்கள் குழந்தையின் கின்னஸ் சாதனை குறித்து பெரில் ஹெர்மன், யுவர் ஸ்டோரி தமிழ் உடன் பகிர்ந்து கொண்டார்.
6 மாதக் குழந்தையில் தொடங்கிய திறமை
நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனது மனைவி பியான்ஷா முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவி. எங்களது குழந்தையான அற்றி ஹெர்மன் பிறந்த சில மாதங்களிலேயே மிகவும் சுறுசுறுப்பாக துருதுருவென இருப்பார்.
”சுமார் 6வது மாதத்திலேயே நாங்கள் பேசுவதை கூர்ந்து கவனித்து, நாங்கள் ஏதேனும் பொருள்களை கூறினால் மிகச் சரியாக எடுத்து விடுவார். அவரது அபார நினைவாற்றல் குறித்து நாங்களே வியந்து போனோம்,” என்கிறார்.
இவ்வாறு பெற்றோர்கள் பொருள்களின் பெயர்களை சொல்லச் சொல்ல அற்றி ஹெர்மன் தவழ்ந்து சென்றே அவற்றை சரியாக எடுத்தக் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனை அவர்கள் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர்.
அப்போது அப்பகுதியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி, தனித்திறன் போட்டிகளில் அற்றி ஹெர்மனை கலந்து கொள்ள வைப்பதற்காக தாங்கள் எடுத்த வீடியோக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் காட்டியபோது, அவர்களும் ஆச்சரியப்பட்டு, இதை உலக சாதனை முயற்சியாக மேற்கொள்ளுங்களேன் எனத் தெரிவித்துள்ளனர்.
சாதனைக்குத் தயாரான ஹெர்மன்
இதையடுத்து, நான் இணையத்தில் தேடியபோது, 1 வயது 4 மாத குழந்தையொன்று 200 பொருள்களை சரியாக அடையாளம் கண்டு எடுத்துக் கொடுத்ததே உலக சாதனையாக இருந்தது. ஆனால், எங்கள் குழந்தையோ 8 மாதத்திலேயே அதைவிட அதிக பொருள்களை அடையாளம் கண்டு எடுத்துக் கொடுத்த வீடியோக்கள் இருந்தது.
இதுகுறித்து ’வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’க்கு வீடியோ உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பினேன். அவர்களும் எங்கள் குழந்தையின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர். இதேபோல், ஏராளமான ஆவணங்களுடன் கின்னஸுக்கும் அனுப்பினேன்.
”அவர்களும் இது பழைய உலக சாதனையை முறியடித்த புதிய உலக சாதனை என அங்கீகரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் எங்களது குழந்தையின் சாதனையை இடம் பெறச் செய்தனர்,” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
இதேபோல, இந்திய அளவில் ’கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’, ’ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’, ’மேஜிக் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என ஏராளமான உலக சாதனை புத்தகங்களில் அற்றி ஹெர்மனின் சாதனை வெளிவந்துள்ளது. மேலும், கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அற்றி ஹெர்மனை நேரில் வரவழைத்து, ஓர் பாராட்டு விழா நடத்தி கெளரவித்துள்ளனர்.
பொதுவாகவே எங்கள் குழந்தை சுமார் 500-க்கும் மேற்பட்ட பொருள்களை சரியாக அடையாளம் கண்டு எடுத்துக் கொடுத்து விடுவார். ஆனால், நாங்கள்தான் அவரை கஷ்டப்படுத்த வேண்டாமே என 233 பொருள்களுடன் உலக சாதனையை நிறைவு செய்து விட்டோம், என்கிறார் பெரில் ஹெர்மன்.
எதிர்காலத்தில் அற்றி ஹெர்மனுக்கு 195 நாடுகளின் கொடிகள், பிரபல வாகனங்களின் பெயர்கள், புத்தகங்களின் பெயர்கள், உடல் பாகங்கள் என்பன போன்றவற்றையும் அடையாளம் காண கற்றுத்தர திட்டமிட்டுள்ளோம் என்கின்றனர் பெரில் ஹெர்மன்-பியான்ஷா தம்பதி.
”எல்லா பெற்றோரையும் போலத்தான் நாங்கள் எங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுத்தோம். ஆனால், அதீத நினைவாற்றலுடன் புத்திசாலித்தனமாக அனைத்தையும் எங்கள் குழுந்தை கிரகித்து, சரியாக அடையாளம் காட்டியதால்தான் இந்த உலக சாதனை சாத்தியமானது. அற்றி ஹெர்மன் எங்களுக்கு கடவுள் தந்த சிறப்பு பரிசு,” என சிலாகித்து கூறுகின்றனர் பெரில் ஹெர்மன்-பியான்ஷா தம்பதி.
3 வயதில்; 6 ரெக்கார்ட்ஸ்: 5 நிமிடத்தில் 125 கார் மாடல்களை கண்டுபிடிக்கும் இனியன்!