Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் சுபா சதீஷ்!

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் சுபா சதீஷ்!

Wednesday March 21, 2018 , 4 min Read

தொழில்நுட்பப் பிரிவில் இருக்கும் பெண்கள் வெவ்வேறு துறைகளில் ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகள் செயல்முறைகளில் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், இணைப்பு நிஜமாக்கம், மெய்நிகர் உண்மை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயலிகள் என பெண்கள் வெவ்வேறு நிலைகளில் தொழில்நுட்ப புதுமைகளுக்கு தலைமை ஏற்று வருகின்றனர்.

image


மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் குரூப் ப்ரோக்ராம் மேனேஜராக இருக்கும் சுபா சதீஷ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்து அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார். இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 15 ஆண்டு பணி வாழ்க்கையில் வெவ்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

சுபா மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கி அனைவருக்கும் அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் ஒரு சிக்கலான டயாக்ராமிங் அப்ளிகேஷனை (Visio) உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

அவரது பணியின் பெரும் பகுதியை பார்வை குறைபாடுள்ளவர்களின் படிக்கும் அனுபவத்தை மேம்படுத்துவதில் செலவிட்டார். அவர் கல்லூரி நாட்களில் பார்வை குறைபாடு இருந்த தனது நண்பர் ஒருவருக்காக தேர்வுகளை எழுதினார். அப்போதிருந்தே அவருக்கு தனிப்பட்ட அளவில் இதில் ஆர்வம் ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் டூல்களை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கும் உதவுவதுடன் இந்தப் பகுதியில் நிலவும் சிக்கல்களை குறைக்க பல்வேறு காரணிகளை கண்டறிந்து ஆராய்ந்து வருகிறார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளில் பங்களித்தது குறித்தும் தொழில்நுட்பத்தில் பெண்கள் பணியாற்ற ஊக்குவிப்பது குறித்தும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்துகொண்டார்.

image


யுவர் ஸ்டோரி : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணுயாற்றிய பயணம் குறித்து பகிந்துகொள்ளுங்கள். நீங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தினீர்கள்?

சுபா : அமெரிக்காவில் 12 ஆண்டுகளும் இந்தியாவில் நான்காண்டுகளும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றியது சுவாரஸ்யமான அதே சமயம் உற்சாகமான பயணமாக அமைந்தது. மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2000-ல் துவங்கி மைக்ரோசாஃப்ட் ஒன்நோட் முதல் மூன்று அறிமுகங்கள் வரை பங்களித்துள்ளேன். ஒரு சிறப்பான குழுவில் பங்கேற்றதுடன் ஒன்நோட் சார்ந்த அனுபவம் ஒரு புதிய ப்ராடக்டை உருவாக்குவதிலும் அதை மேம்படுத்துவதிலும் இருக்கும் நுணுக்கங்கள் குறித்த ஆழமாக நுண்ணறிவை வழங்கியது. 

அப்போதிருந்து மக்களுக்கு அதிக பயனளிக்கும் வகையிலான ப்ராடக்டுகளை உருவாக்குவதில் பங்களித்தது மன நிறைவளிக்கிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் எளிதாக தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவும் வகையிலான ப்ராடக்டை வடிவமைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களைக் கொண்டு துறையில் இணையும் புதிய தலைமுறையைச் சேர்ந்த பெண்களுக்கு வழிகாட்டி வருகிறேன்.

யுவர் ஸ்டோரி : தொழில்நுட்பப் பிரிவில் பெண்கள் செயல்படுவது அரிது என நினைக்கிறீர்களா?

சுபா : இந்தியா உட்பட உலகம் முழுவதும் தொழில்நுட்பப் பகுதியில் பெண்கள் குறைவாகவே பங்களிக்கின்றனர். இந்தியாவில் தொழில்நுட்பப் பிரிவில் மட்டும் அல்லாது பொதுவாகவே பெண்கள் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடுகிறது. ஏனெனில் தங்களது பணி வாழ்க்கையில் முன்னேறுவதுடன் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் சமூக எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்ய வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் உள்ளனர்.

யுவர் ஸ்டோரி : அதிக பெண்கள் தொழில்நுட்பப் பிரிவை தங்களது பணி வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்க எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்?

சுபா : பெண்கள் தங்களது வாழ்க்கையில் கடந்து வரவேண்டிய பல்வேறு நிகழ்வுகளை எதிர்த்து போராடி பணி வாழ்க்கையைத் தொடர உதவும் வகையிலான நெகிழ்வான கொள்கைகளை நிறுவனங்கள் வகுக்கவேண்டும். இதில் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் ஆண்களும் பெண்களும் பங்களிக்கவேண்டும். தொழில்நுட்பப் பிரிவில் வெற்றியடைந்த பெண்கள் நேரம் ஒதுக்கி தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டு இந்தப் பிரிவில் உள்ள வளர்ச்சிப் பாதை குறித்தும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் WISE திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்துவது பெண்கள் தொழில்நுட்பப் பிரிவை தங்களது வாழ்க்கைப் பாதையாக தேர்ந்தெடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் முயற்சியாக்கும். ஒரு நிறுவனத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள ஆண், பெண் இருபாலினரின் முழுமையான கண்ணோட்டத்தையும் பெறுவதால் கிடைக்கும் நன்மைகளை பல நிறுவனங்கள் உணரவேண்டும். 

அனைத்திற்கும் மேலாக அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் கலாச்சாரத்தை நிறுவனத்தின் அனைத்து நிலைகளிலும் ஊக்குவிக்கவேண்டும். இது போன்ற நடவடிக்கைகளே அதிக பெண்களை ஈர்க்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்.

யுவர் ஸ்டோரி : தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெண்கள் எவ்வாறு தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடியும்?

சுபா : தகவல்கள் அனைவரும் அணுகும் விதத்தில் இருந்தால் மட்டுமே போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இருக்கும். இன்று தொழில்நுட்பத்தின் உதவியால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்கள் பல்வேறு கல்வி சார்ந்த டூல்களை அணுக முடிகிறது. இதற்கு முன்பு இவர்களால் இத்தகைய தகவல்களை அணுக முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது தகவல்களை அணுக முடிந்ததால் சமூகத்தில் தங்களது உரிமைகளை அறிந்து அதற்காக போராட விரும்புகின்றனர். 

மேலும் பணி வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒத்த சிந்தனைகளை உடைய பெண்களை கண்டறிந்து எளிதாக ஒருங்கிணைய முடியும். இது பன்மடங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் குடும்பத்தினர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ள ஆரோக்கியம் சார்ந்த உலகளவிலான தகவல் மையங்களை அணுக முடிவது ஒரு வரமாகவே பார்க்கப்படுகிறது.

image


யுவர் ஸ்டோரி : ஹேக்கதான் பல பெண்களை துறையில் ஈர்க்கும் என நினைக்கிறீர்களா?

சுபா : பெண்கள் ஹேக்கதான்களில் பங்கேற்கின்றனர். ஆனால் அவர்களது பங்களிப்பு அதிகரிக்கவேண்டும் என விரும்புகிறேன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஹேக்கதான்களில் பெண்களின் பங்கேற்பு அதிகமாக உள்ளது. 2017-ம் ஆண்டில் ’தொழில்நுட்ப ரீதியான மிகவும் சவாலான ஹேக்’ விருதினை பெற்ற அணியில் நானும் பங்களித்தது எனக்கு பெருமை அளிக்கிறது. 

ஒரே சமயத்தில் பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவதால் கிடைக்கும் அதே பலன்களை குறைந்த நேரத்தில் பெற உதவும் ஒரு வேறுபட்ட அணுகுமுறையை ஆராயவேண்டும். இதனால் ஹேக்கதான்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.

யுவர் ஸ்டோரி : தொழில்நுட்ப குழுக்களில் பெண்கள் பாலின பாகுபாடுகளை சந்திக்கிறார்களா?

சுபா : மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த என் தோழிகளுடன் என்னுடைய அனுபவங்களை ஒப்பிடுகையில் பாலின பாகுபாட்டைப் பொருத்தவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறந்த கலாச்சாரத்துடன் கூடிய பணிச்சூழலைக் கொண்டுள்ளது. ஆனால் பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்கையில் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் அறிவியலிலும் கணிதத்திலும் பெண்களுக்கு உள்ள திறன் பல நூறாண்டுகளாகவே பாரபட்சத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது. 

வெற்றிகரமான பெண்கள் அதிகரிப்பதும் முற்போக்கான சமூகமுமே பாலின பாகுபாட்டை முற்றிலும் அகற்றுவதற்கான தீர்வாகும்.  

யுவர் ஸ்டோரி : தொழில்நுட்பப் பிரிவில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

பெண்கள் தொழில்நுட்பப் பிரிவில் இணைவதைக் காட்டிலும் நீடித்திருப்பதிலேயே அதிக சவால்களை சந்திப்பதாக நான் கருதுகிறேன். பெண்கள் மகப்பேறு காலத்திலோ அல்லது ஆரோக்கியத்தை பராமரிக்கவோ பணியில் இடைவெளி எடுக்க நேர்ந்தால் அவர்களை ஆதரித்து ஊக்கப்படுத்துவது நிறுவனத்தின் பார்வையில் ஒரு நெருக்கடியாகவே உள்ளது. 

மனிதனின் உடல் அமைப்பானது போற்றப்படவேண்டுமே தவிர குறைத்து மதிப்பிடப்படகூடாது. 

சக ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள் அடங்கிய ஒரு ஆதரவான அமைப்பு பணிச்சூழலிலும் வீட்டிலும் பெண்களுக்கு அமையுமானால் இந்த சவால்களை பெண்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

யுவர் ஸ்டோரி : உங்களது பணி வாழ்க்கையில் ஏதேனும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருந்தால் அதை பகிர்ந்து கொள்ளமுடியுமா?

சுபா : கல்லூரி நாட்களில் பார்வை குறைபாடு இருந்த என்னுடைய நண்பர் ஒருவருக்காக தேர்வு எழுதினேன். அப்போதிருந்து எனக்கு தனிப்பட்ட அளவில் இதில் ஆர்வம் ஏற்பட்டது. சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களின் படிக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் நான் பங்கெடுத்தேன். என்னுடைய தனிப்பட்ட ஆர்வம் இருந்த அதே பகுதியில் இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி அனைவரையும் உள்ளடக்கிய சூழலை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா