'ஃபிட்டர் டூ 30 கோடி டர்ன்ஓவர் செய்யும் உரிமையாளர்' - ஈரோடு ‘ஆண்டவர் லேத் ஒர்க்ஸ்’ வெற்றிக்கதை!
ஆண்டவர் லேத் ஓர்க்ஸ் அரிசி, கோதுமை, தானியங்கள், எண்ணெய் வித்துக்களை அரைக்கும் அரவை இயந்திரங்களைத் தயாரித்து இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுவதும் 55 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்து வரும் ஓர் பிரபல நிறுவனம் ஆகும்.
இன்று எல்லா உணவுப் பொருள்களும் பாக்கெட்டுகளில் கிடைத்தாலும் அரிசி, கோதுமை, தானியங்களை வாங்கி, அவற்றை வறுத்து, காய வைத்து அரவை மில்லில் அரைத்து தன் கைப்பட செய்யும் பலகாரங்களின் சுவையே தனிதான்.
அந்த சுவையான தரமான, கைத்தயாரிப்பிலான ஆரோக்கியமான உணவுப் பொருள்களை மீண்டும் மக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கியுள்ளது 'ஆண்டவர் லேத் ஓர்க்ஸ்' நிறுவனம்.
‘ஆண்டவர் லேத் ஒர்க்ஸ்’ வெற்றிக்கதை
ஆண்டவர் லேத் ஓர்க்ஸ்; அரிசி, கோதுமை, தானியங்கள், எண்ணெய் வித்துக்களை அரைக்கும் அரவை இயந்திரங்களைத் தயாரித்து இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுவதும் 55 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்து வரும் ஓர் நிறுவனம் ஆகும்.
கடினமான உழைப்பின் மூலம் வாழ்வின் உச்சத்தைத் தொடலாம் என்பதற்கு உதாரணமாக ஓர் சாதாரண ஃபிட்டராக பணியைத் தொடங்கி, இன்று இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுமைக்கும் பல்வேறு இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ’ஆண்டவர் லேத் ஓர்க்ஸ்’-இன் பிரமாண்ட வெற்றிப் பயணம் குறித்து, அதன் நிறுவனர் ராஜூ கண்ணன் தனது இரு மகன்களுடன் யுவர்ஸ்டோரி தமிழ் இடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.
சாதரண ஃபிட்டர் டூ ஆண்டவர் லேத் ஒர்க்ஸ் நிறுவன உரிமையாளர் ஆனது எப்படி?
ஈரோட்டில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், தமிழக அரசு நிறுவனமான டான்சியில் ஃபிட்டராக (Fitter) பணிபுரிந்தேன். சில வருடங்களுக்குப் பிறகு நானும், எனது நண்பரும் இணைந்து 1968, பிப். 4ஆம் தேதி 'ஆண்டவர் லேத் ஓர்க்ஸ்' என்ற நிறுவனத்தை ரூ.30 ஆயிரம் முதலீட்டில் ஈரோடு பேருந்து நிலையம் அருகே சிறிய அளவில் தொடங்கினோம்.
தொடக்கத்தில் விவசாயிகளுக்கான கடலையை அரைத்து எண்ணெய் வழங்கும் இயந்திரங்களை மட்டும் தயாரித்து விற்பனை செய்துள்ளனர். தொடர்ந்து விவசாய உற்பத்தி பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் விதமாக விவசாயிகளுக்குப் பயன்படும்படியான இயந்திரங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளனர்.
தற்போது ராஜூகண்ணனின் மகன்களான பாலசுப்பிரமணியம் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் புதுவிதமான இயந்திரங்களை உற்பத்தி செய்து, தற்சார்பு கிராம பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
1995ல் இரும்பு ரோட்டரியில் எண்ணைய் தயாரிப்பு நடைபெற்றது. விவசாயிகளே தங்களது எண்ணெய் வித்துக்களை எண்ணெயாக்கி மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வந்தனர். ஆனால், மிகக் குறைந்த விலையில் பிசுபிசுப்பு இல்லாத கண்ணாடி போன்ற எண்ணெய் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பெயர்களில் பாக்கெட்களில் எண்ணெய் விற்பனைக்கு வந்தபிறகு, மக்கள் அதனை வாங்கத் தொடங்கினர். இதனால் எங்கள் வியாபாரம் மிகவும் மந்தமானது.
”அப்போது, பிசுபிசுப்பு இல்லாவிட்டால் அது எண்ணெயே இல்லை. அவை முழுக்க வேதிப் பொருள்களால் ஆனது. உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என நமது பாரம்பரிய செக்கு எண்ணெய்க்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்து, கிராம தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபட்டோம்,” என்கிறார் ராஜூ கண்ணன்.
அப்போதுதான் முதலில் தங்கள் தொழிலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். பொதுவாக ஒரு இயந்திரத்தை வாடிக்கையாளர் வாங்கி, அதனை நிறுவி, ஆலை போன்ற செட்டப் செய்ய குறைந்தபட்சம் 2 மாத காலம் ஆகிறது. இந்த கால அளவை குறைக்கவும், நவீன இயந்திரங்களைப் புகுத்தவும் களமிறங்கியுள்ளனர். இதற்காக 2000 முதல் 2003 வரை பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
”எங்கள் ஆய்வுகளின் பயனாக 2000ல் முதல் நவீன இயந்திரத்தை வெளியிட்டோம். இதனை 2 மணி நேரத்தில் நிறுவுவதை கட்டாயமாக்கினோம். தமிழக கிராமங்கள்தோறும் சென்று நவீன இயந்திரங்களை வழங்கினோம். மிகக் குறைந்த இடத்திலேயே இந்த நவீன அரவை ஆலைகளை நிறுவ வழிவகுத்தோம். தற்போது வெற்றிகரமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் எங்களது இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன,” ராஜூ கண்ணன் மற்றும் அவரது மகன்கள்.
உலக அளவில் ஆண்டவர் லேத் ஒர்க்ஸ் இயந்திரம்
தற்போது ஆண்டவர் லேத் ஓர்க்ஸ் மூலம் 31 விதமான இயந்திரங்கள் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் 6 மாடல்கள் வெளிநாடுகளுக்கும், எண்ணெய் அரைக்கும் கல் செக்கில் 4 மாடல்கள், எக்ஸ்பிளர் 2 மாடல்கள், எண்ணெயை வடிகட்ட, தேங்காய் பருப்பை உடைக்க, புண்ணாக்கு உடைக்க என உபரி இயந்திரங்களையும் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக பழைய மரச்செக்கு மாடலிலேயே புதிய நவீன செக்குகளை உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6 அடிக்கு 6 என்ற இட அளவில் மாடிப்படிக்கு கீழே சாதனை அடிப்படையில் ஓர் அரவை இயந்திரத்தை அமைத்துக் கொடுத்து ஓர் சிறிய ஆலை அமைத்துக் கொடுத்துள்ளோம். குறைந்தபட்சம் ரூ.3 லட்சத்தில் ஓர் மைக்ரோ இன்டஸ்ட்ரியை அமைத்துவிட முடியும். அரவை ஆலைகளில் தானியங்களை அரைக்க ஒரு கிலோவுக்கு ரூ.10 முதல் 15 வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். இதில், மரச்செக்கில் ஒரு நாளைக்கு 50 லிட்டர் வரை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். மாதமொன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும்.
மக்களின் கண்முன்னே தரமான கடலையை காட்டி, அரவைக் கூலி பெற்று, அவர்களின் கண் முன்னே தூய எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. எனவே, மக்களும் அதனை விரும்பி வாங்கிச் செல்வார்கள். இதுவே கிராம தற்சார்பு பொருளாதாரத்தை அடைவதற்கான சிறந்த வழியாகும்.
மேலும், எஞ்சிய கடலை சக்கை, கடலை புண்ணாக்குத் தயாரிக்கப் பயன்படுகிறது. இது கால்நடைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து மிக்க தீவனமாக பயன்படுகிறது. இவ்வாறு ஓர் தொழில் சங்கிலியை உருவாக்குதன் மூலம் ஓர் கிராமச் சந்தை உருவாகிறது. இவ்வாறாக ஓர் இயந்திரம் மூலம் நேரடியாக 3 பேருக்கு வேலை, மறைமுகமாக சுமார் 50 பேருக்கு மேல் வேலை கிடைக்கிறதாம்.
”எங்களின் ஆண்டவர் லேத் ஓர்க்ஸ் மூலம் ஆண்டுக்கு சுமார் 50 முதல் 60 இயந்திரங்கள் ஆப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், மியான்மர் என பல்வேறு நாடுகளுக்கு விற்பனையாகின்றன. இந்தியா முழுவதும் ஆண்டொன்றுக்கு சுமார் 2500 இயந்திரங்கள் வரை விற்பனையாகின்றன. இதன்மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.30 கோடி வரை டர்ன்ஓவர் ஆகிறது,” என்கின்றனர்.
ஆண்டவர் லேத் ஓர்க்ஸில் 70 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இயந்திரங்களுக்குத் தேவையான பாகங்கள் அனைத்தும் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்களின் நிறுவனங்களில் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, பின்பு அவை அனைத்தும் இணைக்கப்பட்டு, இறுதியாக இயந்திரங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கிராமங்கள் தற்சார்பு பெற உதவும் நிறுவனம்
எண்ணெயை பொருத்தவரை இந்தியா தற்சார்பு பெற வேண்டும். எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும். அந்தளவுக்கு இந்தியா முழுவதும் கிராமங்கள்தோறும் ஓர் எண்ணெய் அரவை இயந்திரத்தை நிறுவி, தற்சார்பு கிராம பொருளாதரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் திட்டமாகும்.
எங்கள் 55 வருட உழைப்பின் பயனாக தற்போது எங்களிடம் சுமார் 28 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அனைத்து கிராமங்களிலும் அரசு மானியங்கள் மூலம் அரவை இயந்திரங்களை நிறுவ வேண்டும், என்று வேண்டுகோள் விடுகின்றனர்.
மாவு, எண்ணெய் என அனைத்து பொருள்களும் ஆங்காங்கே மக்கள் கண் முன் தயாரிக்கப்பட்டு மக்களுக்குத் தரமாக வழங்கவேண்டும் என்பதே எங்களின் திட்டம்.
“கிராம பொருளாதாரத்தை உருவாக்குவோம், அன்னிய செலாவணியை மீட்போம். இறக்குமதியை குறைப்போம். அனைவருக்கும் தரமான உண்ணத் தகுந்த எண்ணெய் வழங்குவோம்,” என்பதே எங்களின் இலக்கு ஆகும்.
தற்போது இட்லி மாவு அரைக்கும் இயந்திரத்தை புதிதாக தயாரித்து விற்பனை செய்கிறோம். உச்சபட்ச தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி புதுமையான இயந்திரங்களை தயாரித்து வருகிறோம். எங்களின் ஆண்டவர் லேத் ஓர்கஸ் மூலம் மறைமுகமாக சுமார் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெட்ரோலுக்கு நிகராக எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை குறைத்து அனைத்து கிராம பகுதிகளிலும் ஓர் மாவு, எண்ணெய் மில் அமைக்க அரசு திட்டமிட வேண்டும். இதற்கு அரசின் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வோளாண் பொறியியல் துறை, மாவட்டத் தொழில் மையம் போன்றவை இணைந்து கூட்டுத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
இதன்மூலம் தன்னிறைவான கிராம பொருளாதாரம் மீட்கப்படும். தரமான வேதிக்கலப்பற்ற தூய எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் மக்களுக்கு கிடைக்கும். இதனை நோக்கியே எங்களின் லட்சிய பயணம் எனத் தெரிவிக்கின்றனர் ஆண்டவர் லேத் ஓர்க்ஸ் நிர்வாகத்தினர்.
தொடங்கிய 4 ஆண்டுகளில் கோடிகளில் விற்றுமுதல்: நண்பர்களுடன் வெற்றி வழியை கண்டறிந்த சென்னை இளைஞர்!