ஆண்கள் வாழ்வில் ‘ஏஐ காதலிகள்’ - அருமருந்தா, ஆபத்தா?
மெய்நிகர் பெண்கள் மீது காதல் கொள்ளும் ஆண்கள் தங்களது நிஜ வாழ்க்கையில் தனிமையையும், உளவியல் பிரச்னைகளையும் அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் மிகவும் உணர்வுபூர்வமானதும் கூட. ஆம், ‘செயற்கை நுண்ணறிவுக் காதலி’களை உருவாக்கிக் கொடுத்து, அது தனிமையில் வாடும் ஆண்களுக்கு ஓர் அருமருந்தாகச் செய்வதுதான் அது.
சில வேளைகளில் மருந்தே நஞ்சாகவும் நோயாகவும் மாறி விடுகிறது என்று ஆலின் வணிகப் பள்ளியைச் சேர்ந்த தரவு அறிவியலாளர் லிபர்டி விட்டெர்ட் இதுதொடர்பாக புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியுள்ளார். அவரது எச்சரிக்கையின் முதன்மையானது இதுதான்:
“எச்சரிக்கை மணி ஒலிக்கப்படும் இந்தப் புதிய ட்ரெண்ட்டான ‘செயற்கை நுண்ணறிவு காதலிகள்’ என்னும் விவகாரம், ஆண்கள் மத்தியில் தனிமையை அதிகப்படுத்தி, ஒரு முழு தலைமுறையினரின் உணர்ச்சி சமநிலையை குலைக்கக் கூடியது.”
இந்த ட்ரெண்ட்டானது கொரோனா தொற்றுக் காலத்திலேயே பிரபலமடைந்தது. அதாவது, மெய்நிகர் காதலிகள் பயனர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்பவும், ஒரு பெண்ணுடன் வாழும்போது நிஜ வாழ்க்கையில் ஏற்படும் ஊடல்கள், சண்டைச் சச்சரவுகள், தொந்தரவுகள், வாழ்வின் உணர்ச்சி கொந்தளிப்புகள், ஏற்ற இறக்கங்கள் போன்றவை இந்த மெய்நிகர் காதலிகளிடம் இருக்காதவாறு செயற்கை நுண்ணறிவு வடிவமைத்துக் கொடுக்கின்றது.
ஆண்களை ஈர்ப்பது ஏன்?
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் மெய்நிகர் காதலிகளுக்கான ‘ரெப்ளிகா’ (Replika) போன்ற செல்போன் செயலிகள் 2022-ஆம் ஆண்டு வாக்கிலேயே பெரிய அளவுக்கு பிரபலமாகி 1 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் குவித்துள்ளது என்றால், இந்த ட்ரெண்ட் அப்போதிலிருந்தே இருப்பதை இந்தத் தகவல் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
இதில் கவனத்துக்குரிய அம்சம் இதுதான்: நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு பெண்ணுடனுமோ, உறவினரிடமோ, நண்பர்களிடமோ பற்றுதல் இல்லாத நபர்கள் கூட நம்ப முடியாத அளவுக்கு இந்த மெய்நிகர் பெண்களிடம் அதிக உணர்ச்சியைக் கொட்டுகின்றனர் என்று அவர்கள் வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மெய்நிகர் காதலிகள் மீது காதல் ரசத்தைப் பிழிவதோடு, அவர்களைத் திருமணமும் செய்து கொள்கின்றனர்.
“இப்படி மெய்நிகர் பெண்களைக் காதலித்து திருமணம் செய்து கொள்வதால் நிஜ வாழ்க்கையில் இத்தகைய ஆண்களின் தனிமையும் அதிகரித்து வருகிறது என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்” என்கிறார் விட்டெர்ட்.
இது தொடர்பான பியூ ஆராய்ச்சித் தகவல் கூறுவது என்னவெனில், 2022-ம் ஆண்டு வாக்கில் 62% ஆண்களும், 34% பெண்களும் தனியாக வாழ்கின்றனராம். பெண்களை விட ஆண்களுக்கு குறைவான நெருங்கிய நட்பே இருந்ததாகவும், இது கொரோனா காலக்கட்டத்தில் பரவலானதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நிபுணர் விட்டெர்ட் மேலும் கூறும்போது,
“பெண்கள் நிஜ வாழ்க்கையில் பரவலான சமூக பழக்கவழக்கங்களிலும் சமூகத் தொடர்புகளிலும் நெருக்கமாக இருக்கும் வேளையில், ஆண்கள்தான் பெரும்பாலும் மெய்நிகர் துணைகளை நாடுகின்றனர்,” என்கிறார். அதாவது, ஆண்களே இந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கித் தரும் துணை என்னும் கவர்ச்சிக்கு ஆட்படுகின்றனர் என்கிறார் விட்டெர்ட்.
செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்ட தோழிகள், காதலிகள் அல்லது துணைகள் ஒரு லட்சிய உறவை ழங்குகின்றனர். இங்கு மோதல்கள், மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை. ஆண்களை நிரந்தரமாக புரிந்துகொண்டு, அனுசரித்துச் செல்லும் லட்சிய உறவுகள் அமைகிறது. இதனால், நம் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் ஆண்/பெண் வாழ்க்கையின் முரண்பாடுகள், வேறுபாடுகள் கொண்ட மோசமான நாட்களோ முரண்பட்ட ஆசைகளோ எதுவும் இருப்பதில்லை.
தாக்கம்தான் என்ன?
இப்படி மெய்நிகர் உலகில் ஒரு நிம்மதி கிடைப்பதால் ஆண்கள் உண்மையான, நிஜமான உறவுகளைப்புறக்கணிக்கின்றனர் என்கிறார் விட்டெர்ட். செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் சிக்கலற்ற உறவுகளையே அவர்கள் விரும்புகின்றனர். இதனால், குழந்தைப் பிறப்புகள் உள்ளிட்டவை குறைந்து வருகின்றன. மேலும், மனிதர்களை உண்மையான உறவுகளிலிருந்து துண்டிக்கின்றது இந்த செயற்கை நுண்ணறிவு துணை எனும் விஷயம்.
மேலும், தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியினால் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் துணைகள் செய்ய முடியாத காரியம் என்பதே இல்லை எனும் அளவுக்கு அவை ஆண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும், மெய்நிகர் அனுபவம் உணர்ச்சிகரமாக ஈடுபாட்டை அதிகரிப்பதாகவும் தரவு விஞ்ஞானி விட்டெர்ட் எச்சரிக்கிறார். இதனால் ஆண்களின் உளவியல் ரீதியான பலவீனங்கள் கடுமையாக அம்பலப்படுகிறது என்கிறார் அவர்.
செயற்கை நுண்ணறிவுத் தோழிகள் தற்காலிக ஆறுதலையும் தோழமையையும் வழங்கினாலும், மெய்நிகர் உறவுகளை நம்புவது ஆண்களிடையே தனிமை எனும் தொற்றுநோயை ஆழப்படுத்தக் கூடும்.
இத்தகைய செயற்கை நுண்ணறிவு ஆன்லைன் பயன்பாடுகள் கடுமையாக அதிகரித்து வருவதால் பயனாளர்களின் நல்லுணர்ச்சியையும் நல்வாழ்க்கையையும் பேணி பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
மேலும், இத்தகைய செயற்கை நுண்ணறிவுப் போக்குகளின் சமூகவியல், தனிமனித உளவியல் தாக்கங்களையும் ஆராய்ந்து இதற்கு தக்க தீர்வை கண்டுப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மூலம்: Nucleus_AI
Edited by Induja Raghunathan