இந்தியாவில் 50 ஆயிரம் புதிய ஸ்டார்ட்-அப்ஸ், 11.5 லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும்: ஆய்வில் தகவல்
நாட்டில் வேலைவாய்ப்பு தொடர்பாக கவலை தரும் போக்குகள் குறித்த செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 11.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனும் தகவல் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதே சமயம் மத்திய அரசு 50ஆயிரம் ஸ்டார்ட்-அப்’கள் நாட்டில் உருவாக ஊக்கம் அளிக்கவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பயணம், விருந்தோம்பல், பி.பி.ஓ உள்ளிட்ட துறைகளில் இந்த வேலை வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனம் இந்தியாவில் 14 பகுதிகளில் 19 துறைகளில் 775 நிறுவனங்கள் மத்தியிலும், சர்வதேச அளவிலும் ஆய்வு மேற்கொண்டது. இதன் அடிப்படையில் நிறுவனம், வேலைவாய்ப்பு வெளித்தோற்றம் எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 11.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கிறது. ஆய்வுக்குட்பட்ட 19 துறைகளில் 11 துறைகளில் நிகர வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பங்குச்சந்தை ஏறுமுகம் மற்றும் அதிகரிக்கும் முதலீடுகளால் உண்டான சாதகமான சூழல், வேலைவாய்ப்பு தொடர்பான சூழலிலும் பிரதிபலிப்பதாகவும், இது கடந்த ஆண்டு பின்பகுதியில் 2 சதவீதம் குறைந்திருந்த நிகர வேலைவாய்ப்பு சூழலை 3 சதவீதம் உயர்த்திருப்பதாகவும், டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவன செயல் துணைத்தலைவர் ரிதுபர்னா சக்ர்வரத்தி கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
’ரீடெயில், லாஜிஸ்டிகஸ், கல்வி சேவைகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறைகள் முறையே 1.66 லட்சம், 1.49 லட்சம், 1.17 லட்சம் மற்றும் 1.10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்புகள், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலும் அதிகரித்திருப்பது இந்த சாதகமான சூழலுக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. மேலும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் 5 சதவீதம் அதிகரிக்கும் என்றும் இந்த ஆய்வு உணர்த்துவதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
நகரங்களை பொறுத்தவரை புனே, கோவை மற்றும் இந்தூர் ஆகிய நகரங்கள் வேலைவாய்ப்பில் அதிக வளர்ச்சியை காண உள்ளன. கொச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்கள் எதிர்மறையான வளர்ச்சி காண உள்ளன.
பணியில் உள்ள ஊழியர்கள் வெளியேறும் விகிதத்தை பொறுத்தவரை ஆய்வுக்குள்ளான 19 துறைகளில் 5 துறைகளில் இந்த விகிதம் கணிசமாக குறைந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. விவசாயம், கல்வி சேவைகள் உள்ளிட்ட துறைகளில் இது அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஸ்டார்ட்-அப் பொறுத்தவரை, இந்தியா உலக நாடுகளுக்கு இணையாக பல புதிய நிறுவனங்களை உருவாக்கியும், ஊக்குவித்தும் வருகிறது. அண்மையில் இது குறித்து பேசிய இந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் ராம்னாத் கோவிந்த்,
“அரசு நிறுவனம் தொடங்குவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை சுலபமாக்கி, 50 ஆயிரம் ஸ்டார்ட்-அப்’கள் தொடங்க வழி செய்யவுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஸ்டார்-அப் சூழலை வலுவாக்கத் திட்டமிட்டுள்ளது,” என்று அறிவித்தார்.
தற்போதைய சூழலில் இந்தியாவில் சுமார் 19303 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் கள் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பு மட்டும் எதிர்காலம் இல்லை என நினைக்கும் பல இளைஞர்கள் தாங்கள் சுயகாலில் நின்று நிறுவனம் தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கியும் நாட்டின் வளர்ச்சியில் தங்கள் பங்கை கொடுத்து வருகின்றனர். எனவே வரவிருக்கும் இந்த புதிய ஸ்டார்ட்-அப்கள் மூலமும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.
ஆதாரம்: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்