ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.250 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சர்வதேச புதுமையான மையமாக தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் 'ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-23' (Startup and Innovation Polic2018-2023) தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.250 கோடி நிதியும் ஒதுக்குவதற்கான ஒப்புதலை தமிழக கேபினட் அளித்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவன வளர்ச்சியில் முன்னணியில் வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்த வகை நிறுவனங்களை ஊக்குவிப்பதில் இந்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் பதிவு செய்யப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குவது மற்றும் மாநிலத்தை ஸ்டார்ட் அப் உருவாக்கத்திற்கான சர்வதேச புதுமை மையமாக மாற்றும் நோக்கத்துடன், ஸ்டார்ட் அப் & புத்தாக்க கொள்கை 2018-23 எனும் பெயரில் இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் கீழ், 5,000 ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கவும், 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.ஓ.டி எனப்படும் இண்டெர்நெட் ஆப் திங்ஸ், ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு. மிஷின் லேர்னிங் (எம்.எல்) உள்ளிட்ட துறைகளில் ஸ்டார்ட் அப்கள் ஊக்குவிக்கப்படும். மேலும், மாணவர்களிடையே தொழில்முனைவு ஆர்வத்தை ஊக்குவிக்க, கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும், வரி விதிப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்தவும் இந்த கொள்கையின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் சூழலை அமைத்துத் தர, 5 அம்ச செயல்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் கீழ் தகுதி பெறும் ஸ்டார்ட் அப்களுக்கான வரையறையும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு ஸ்டார்ட் அப் அண்ட் இன்னவேஷன் மிஷன் கீழ் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- பதிவு செய்யப்படும் போது நிறுவனம் துவங்கப்பட்டு ஏழு ஆண்டுகளுக்குள் குறைவாக இருக்க வேண்டும். பயோடெக் நிறுவனங்கள் எனில் இது 10 ஆண்டுகளாக இருக்கலாம்.
- நிறுவனங்களின் ஆண்டு விற்றுமுதல் ரூ.25 கோடிக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
மேலும் தமிழக அரசு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வளர்ச்சி நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ரூ.250 கோடி அளவில் கார்பஸ் நிதி உருவாக்கப்படும். பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஆல்டர்நேட் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்டாக இந்த நிதி நிறுவப்பட்டு, சிட்பி போன்ற அமைப்பால் நிர்வகிக்கப்படும்.
இந்த நிதி; ஸ்டார்ட் அப் மற்றும் நடுத்தர, சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யும். இதில் தமிழக அரசு ரூ.75 கோடி முதலீடு செய்யும். இதன் முதல் கட்டமாக இந்த பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது.
இதேப் போல, தமிழ்நாடு ஸ்டார்ட் அப் கிராண்ட் சீட் பண்ட் ரூ.50 கோடியில் ஏற்படுத்தப்படும். நிதி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிதி அமைக்கப்படும். ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நிதி உருவாக்கப்பட உள்ளது.
கட்டுரையாளர்: சைபர்சிம்மன்