சினிமா என்பது யாதெனில்... மகேந்திரன் உதிர்த்த 12 மேற்கோள் பூக்கள்!
தமிழ் சினிமாவின் மகத்தான படைப்பாளி மகேந்திரன் உதிர்ந்துவிட்டார். யதார்த்தம் நோக்கிய தமிழ் சினிமாவின் பயணத்துக்கு வித்திட்டவர். உலக சினிமா என்ற சொல்லே அறிமுகம் ஆகாத காலக்கட்டத்தில் நமக்கு உலக சினிமாவைத் தந்தவர்.
ஓர் இயக்குநராக 'முள்ளும் மலரும்' தொடங்கி 'சாசனம்' வரை நமக்குத் தந்த படைப்புகளின் எண்ணிக்கை வெறும் 12 தான். ஆனால், 'உதிரிப்பூக்கள்' போன்ற படைப்புகளால் தரும் அனுபவமோ உன்னதம். 'சினிமா என்றால் என்ன?' - இந்தக் கேள்விக்கு விடை தேட விரும்புகிறீர்களா?
இயக்குநர் மகேந்திரன் வெவ்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு தளங்களில் அளித்த நேர்காணல்கள், பேட்டிகள் மற்றும் பகிர்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது 12 மேற்கோள்கள் மூலம் உங்களுக்கு நிச்சயம் விடை கிட்டும்.
"சினிமா ஒன்றும் தேவலோகமும் அல்ல. சினிமா சார்ந்த நபர்கள் ஒன்றும் தேவ தூதர்களும் அல்ல. இதைப் புரிந்துகொண்டால், எளிய விஷயங்களைப் பார்த்து ஆச்சர்யப்படத் தேவை இருக்காது."
"சினிமா ஒரு காட்சி ஊடகமாக இருக்க வேண்டும். காட்சிகளால் நகர வேண்டும் என்று நினைத்தேன். எனக்குத் தமிழ்த் திரைப்படங்கள் மீது என்னென்ன ஒவ்வாமைகளெல்லாம் இருந்தனவோ அதையெல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படம்தான் 'உதிரிப்பூக்கள்'."
"சினிமாவை பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக நான் கருதவில்லை. அப்படி நடப்பவர்களை நான் தவறாகப் பார்க்கவுமில்லை. அதனால் அமைதியாக இருக்கவும், நல்ல சினிமாவிற்காக மௌனமாகத் திட்டமிடவும் சாத்தியப்படுகிறது.''
"ஒரு படத்தைப் பார்க்கும்போது அதன் இயக்குநரோ, ஒளிப்பதிவாளரோ, கதை - வசனகர்த்தாவோ நமக்குத் தெரியக்கூடாது. அந்தப் படத்தில் அந்த அளவுக்கு ஒன்றிப்போக வேண்டும்."
"மக்கள் மன நிலையை ஆரோக்கியமான திசைகளை நோக்கி மோல்டு பண்ற கலைதான் சினிமா. சும்மா ரசிகர்களுக்குப் பிடிக்கும்னு தியேட்டர்ல அரட்டை அரங்கம் நடத்தக் கூடாது!''
"என் படங்களில் 'எ ஃபில்ம் பை மகேந்திரன்' என்று நான் போடுவதில்லை. நல்ல ஒளிப்பதிவாளர், நல்ல நடிகர்கள், நல்ல படத்தொகுப்பாளர் போன்றோர் அமைந்தால்தான் கதைக்கு ஏற்ற சரியான மனநிலையை ஏற்படுத்திப் பார்வையாளர்களைக் கதைக்குள் இழுக்க முடியும். இத்தனை பேர் உழைப்பும் இருந்து அந்தப் படத்தை எப்படி நான் என்னுடைய படமாக மட்டும் சொந்தம் கொண்டாடிக்கொள்ள முடியும்?"
"நீங்கள் என்ன வேலை செய்தாலும், எதில் ஈடுபட்டு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள்தான். சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் பாத்திரங்கள்தான். அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும்தான் உங்கள் காரியம். அதைக் கைக்கொண்டுவிட்டால், அதன் பின் ஒவ்வொரு விநாடியும் நீங்கள் கூர் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை."
"சினிமா ஓர் உன்னதமான ஊடகம். அவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த சினிமாவை, நான் சரியாகப் பயன்படுத்தவில்லை. உண்மையான சினிமாவை எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வோடுதான் இருக்கிறேன்."
"ஒரு மனிதனுக்குக் காதல் என்பது அவசியம். தன் மீதான காதல். நீங்கள் முதலில் உங்களை நேசியுங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். அதற்கு மரியாதை செய்யுங்கள். ஆரோக்கியமான உடலும் கூர்மையான மனசும்தான் சிறந்த படைப்புகளைத் தர உதவும்."
"வெற்றி - தோல்வி பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல், எந்தவித சமரசத்திற்கும் இணங்கிப் போய்விடாமல், இன்று பெருமைக்குரிய தமிழ்ப் படங்களுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட இயக்குநர்கள் எவரையும் நான் மனதார மதிக்கிறேன்.''
"எனது வெற்றிப் படங்களிலிருந்து நான் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால், எனது தோல்விப் படங்கள் எனக்குக் கற்றுத் தரும் பாடங்கள் அற்புதமானவை. எனது தவறுகளைத் தெரிந்துகொண்டு அடுத்த பெரிய வெற்றியைத் தர அந்தத் தோல்விப் படங்கள்தான் பெரிதும் உதவுகின்றன.''
"சினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது. பெருமை உடையது. பிரபலம் இல்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியம் இல்லை."
கட்டுரை தொகுப்பு: சரா சுப்ரமணியம்