10ம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ்; இப்போது IAS: ‘மதிப்பெண்கள் மட்டுமே ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை’
மதிப்பெண்கள் நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்பதை தனது 10ம் வகுப்பு சான்றிதழைப் பகிர்ந்து உறுதிப் படுத்தியுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த துஷார் என்ற கலெக்டர் ஒருவர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜஸ்ட் பாஸ் மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ள அவரது மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த காலங்களைவிட மாணவர்கள் மீதான கல்வி தொடர்பான எதிர்கால அழுத்தம் அதிகரித்து வருகிறது என்று சொன்னால் மறுக்க முடியாது. இதனாலேயே பள்ளித் தேர்வு தோல்விகளைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. சிறுசிறு தோல்விகளுக்குக்கூட மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கும் அதிர்ச்சி சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
மதிப்பெண்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போவதில்லை, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என ஆலோசனை மையங்கள் மூலம் எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், மதிப்பெண்கள் குறைந்ததற்காக, பிடித்த படிப்பை படிக்க முடியாமல் போனதற்காக என தவறான முடிவை மாணவர்கள் தேடிச் செல்லும் அவலங்கள் தொடரத்தான் செய்கிறது.
ஆனால், மதிப்பெண்களுக்காக மாணவர்கள் வாழ்க்கையையேத் தொலைக்கக் கூடாது என்பதை தனது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மூலம் மாணவர்களுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறார் குஜராத் ஐஏஎஸ் அதிகாரியான துஷார்.
படிப்பில் தோற்பவர்கள் மற்ற திறமைகளில்தான் ஜெயிக்க வேண்டும் என்றில்லை, படிப்பிலேயே மீண்டும் ஜெயித்துக் காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ள அவரது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மதிப்பெண்கள் வெறும் எண்களே...
குஜராத்தின் பருச் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் துஷார் சுமேரா (Tushar Sumera). கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் புகைப்படத்தை, மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரண் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மதிப்பெண் பட்டியல் எப்படி இருக்கும்... நிச்சயம் எல்லா பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பெற்றிருப்பார், இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைய அதில் வலுவான காரணம் ஒன்று இருந்தது.
ஆம், முதன்மையான படிப்புகளில் ஒன்றாக கருதப்படும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, இன்று ஒரு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வரும், துஷார் பத்தாம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகியுள்ளார். அவர் 100-க்கு ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்களும், கணிதத்தில் 36 மார்க்கும், அறிவியலில் 38 மதிப்பெண்கள் என மொத்தம் 332 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
மாவட்ட ஆட்சியராக நினைப்பவர்கள் எல்லாம் படிப்பில் புலியாக இருக்க வேண்டும். சிறுவயதில் இருந்தே படிப்பில் சிறந்த மாணவராக இருக்க வேண்டும், நகரத்தில் நல்லதொரு ஆங்கிலப் பள்ளியில் அல்லது பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்திருக்க வேண்டும், என இப்படி சமூகத்தில் நிலவி வரும் பல ‘வேண்டும்’களை வேண்டவே வேண்டாம் உறுதி செய்துள்ளது துஷாராவின் இந்த மதிப்பெண் சான்றிதழ் புகைப்படம்.
துஷாரின் மதிப்பெண் பட்டியலைப் பகிர்ந்துள்ள பதிவில்,
“பரூச் கலெக்டர் துஷார் சுமேரா, தனது பத்தாவது மதிப்பெண் பட்டியலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், அவர் பத்தாம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகியுள்ளார். அவர் 100-க்கு ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்களும், கணிதத்தில் 36 பேரும், அறிவியலில் 38 மதிப்பெண்கள் என மொத்தம் 332 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கு, அவரது கிராமம் மட்டுமல்ல, பள்ளியிலும் அவரால் எதுவும் செய்ய முடியாது என்று கேலி செய்தனர். 10ம் வகுப்பு மதிப்பெண்ணிலிருந்து, எதிர்காலத்தில் வெற்றி பெறுவீர்களா அல்லது தோல்வியடைவீர்களா என்பதை முடிவு செய்ய முடியாது,” என அவனீஷ் தெரிவித்துள்ளார்.
அவ்னீஷ் ஷரனின் இந்த ட்வீட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார் துஷார். இந்த டிவீட்டுகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. துஷாரின் பதிவு மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகக் கூறி, நெட்டிசன்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
அவனீஷின் இந்தப் பதிவை இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் ரீடிவீட் செய்துள்ளனர். கூடவே, 'பட்டம் முக்கியம் அல்ல, திறமை தான் முக்கியம், விடாமுயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை’ என துஷாரைப் பாராட்டி கமெண்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
தான் எடுத்த குறைவான மதிப்பெண்கள் மூலம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டார் துஷார்.
யார் இந்த துஷார்?
அகமதாபாத்தைச் சேர்ந்தவர் துஷார். அரசுப் பள்ளி ஒன்றில் படித்து, கலைப் பிரிவில் பட்டம் பெற்ற இவர், கல்லூரி படிப்பை முடித்ததும் சில காலம் பள்ளி ஆசிரியராக பணி புரிந்துள்ளார். பின்னர் தீவிரமாகப் படித்து யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதி, 2012ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார்.
தான் கடந்து வந்த பாதையை எப்போதும் மறக்காத துஷார், மாவட்ட ஆட்சியர் ஆனதும், தான் பணிபுரிந்த பள்ளிக்கு மீண்டும் நேரில் சென்று அங்குள்ள மாணவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் துஷார்.
அதில்,
“சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு எனது பள்ளி மாணவர்களை மீண்டும் சந்தித்துள்ளேன். 2004-07 வரை பள்ளி ஆசிரியராக இருந்த கடந்த காலத்திற்கு மீண்டும் என் நினைவுகள் சென்று வந்துள்ளது. சிறிய வாடகை அறையில் தங்கி, சைக்கிளில் தான் பள்ளிக்கு செல்வேன். கிராமத்தில் மூன்று அறைகளை மட்டுமே கொண்ட சிறிய பள்ளி அது. சாக்பீஸ், டஸ்டர், நண்பர்கள், சமையல் என மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை அது,” என தனது மகிழ்ச்சியை அவர் பதிவு செய்துள்ளார்.
திருமணமானவரான துஷாருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆனால், அவர்களைப் பற்றி பொதுவெளியில் அவ்வளவாக பதிவுகளை அவர் வெளியிடுவதில்லை. 2018ம் ஆண்டு தனது மகனின் பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் கொண்டாடியுள்ளார் துஷார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதேபோல், கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்தபின் தனது மனைவியுடனான புகைப்படத்தை அவர் டிவீட் செய்துள்ளார். அதில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ‘நானும், எனது குடும்பத்தாரும் வாக்களித்து விட்டோம். நீங்கள் எப்படி... மறக்காமல் வாக்களிப்பீர்’ என விழிப்புணர்வு வாசகங்களைப் பதிவு செய்துள்ளார்.
சுமார் பத்தாண்டுகளாக அரசு சேவகராக பணிபுரிந்து வருகிறார் துஷார். ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். பருச்சில் உத்கர்ஷ் பஹல் அபியானின் கீழ் துஷாரின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டியுள்ளார்.
பல மாநிலங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஐஏஎஸ் அதிகாரி துஷாரின் இந்த மதிப்பெண் சான்றிதழ் புகைப்படம், ‘மதிப்பெண்கள் மட்டுமே ஒருவரது எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை’ என்ற பாடத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது.