பன்னாட்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ள 12 வயது சிறுவன்!
கேமிங் மீது அதிக ஆர்வம் கொண்ட 12 வயது சித்தார்த் ஸ்ரீவஸ்தவ் பிள்ளை மிகவும் இளம் வயதிலேயே க்ளௌட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு கற்றுக்கொண்டார்.
இளம் வயதினர் பலர் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் இத்தகைய சாதனையாளர்கள் மிகவும் இளம் வயதினராகவே இருக்கின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவரான 12 வயது சித்தார்த் ஸ்ரீவஸ்தவ் பிள்ளைக்கு மோண்டேகினி ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் தரவு விஞ்ஞானியாக பணி கிடைத்துள்ளது. குழந்தை மேதையான இவர் கேமிங் மீது அதிக ஆர்வம் கொண்டவர். தனது அப்பவைக் கண்டு உந்துதல் பெற்ற இவர் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு கற்றுக்கொண்டார்.
ஏஎன்ஐ உடனான உரையாடலில் சித்தார்த் கூறும்போது,
“தன்மே பக்ஷிக்கு சிறு வயதிலேயே கூகுள் நிறுவனத்தில் டெவலப்பராக பணி கிடைத்தது. செயற்கை நுண்ணறிவு புரட்சி எவ்வளவு அழகானது என்பதை உலகம் புரிந்துகொள்ள இவர் உதவி வருகிறார். நான் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் சேர்வதற்கு இவர் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கிறார்,” என்றார்.
சித்தார்த் கோடிங் கற்றுக்கொள்வதற்கும் அதில் ஆர்வம் ஏற்படுவதற்கும் அவரது அப்பாவே காரணம் என்று அவர் குறிப்பிடுகிறார். சித்தார்த் கூறும்போது,
“இளம் வயதிலேயே எனக்கு வேலை கிடைக்க என் அப்பாதான் உதவினார். எனக்கு கோடிங் கற்றுக்கொடுத்தார். நான் இன்றைய நிலையை எட்டியதற்கு அவர்தான் காரணம்,” என தெரிவித்ததாக ’பிசினஸ் டுடே’ குறிப்பிடுகிறது.
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் இளம் வயதினருக்கு பணி வாய்ப்பு கிடைப்பது இது முதல் முறையல்ல. 15 வயது அபிக் சஹா ஒரு முழுமையான தேடல் பொறியை உருவாக்கியுள்ளார். சித்தார்த் போன்றே அபிக்கிற்கும் 11 வயதிலேயே கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. 13 வயதில் ’Arnabhik Corp’ என்கிற வலைதள வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தத் தொடங்கினார்.
கட்டுரை: THINK CHANGE INDIA