30 மா இலைகளில் 1330 திருக்குறள்; திருச்சி ஆசிரியையின் சாதனை!
திருக்குறளை வைத்து திருச்சி ஆசிரியை செய்துள்ள சாதனை அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருக்குறளை வைத்து திருச்சி ஆசிரியை செய்துள்ள சாதனை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
’அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள்’ என்றார் ஒளவையார்.
அதாவது மிகவும் துண்ணிய அளவிலான அணுவை துளைத்து அதில் ஏழு கடல்களை புகுந்தியது போன்ற நுட்பமான, ஆழமான கருத்துக்கள் திருக்குறளுக்குள் பொதித்துள்ளது என்பதாகும். உலகப் பொதுமறை எனப்படும் திருக்குறளை வைத்து பலரும் பல்வேறு வகைகளில் சாதனை படைத்து வருகிறார்கள்.
ஒன்றரை அடியில் எழுதப்பட்ட திருக்குறளை வைத்து திருச்சி ஆசிரியை படைத்துள்ள சாதனை இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கோடியம்பாளையம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர் புதுச்சேரியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
அப்போது மா மரத்தின் 30 இலைகளில், 1330 திருக்குறளையும் 20 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாண்டிச்சேரி ’ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனத்தின் பொறுப்பாளர் வெங்கடேஷன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ஆசிரியர் அமுதாவிற்கு இது முதல் சாதனை கிடையாது. எற்கனவே திருக்குறளை கவிதை வடிவில் எளியமுறையில் எழுதி பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
சாதனை குறித்து ஆசிரியை அமுதா கூறுகையில்,
“சின்ன வயதில் இருந்தே ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எதைச் செய்யலாம் என சிந்தித்துக் கொண்டிருந்த போது, விளையாட்டாகவே இலையில் திருக்குறளை எழுதி வந்தேன். ஏன் இதையே ஒரு சாதனையாக செய்யக்கூடாது என தோன்றியதால் இந்த போட்டியில் பங்கேற்றேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
திருக்குறளை மா மரத்தின் தளிர் இலைகளில் எழுதி சாதனை படைத்த ஆசிரியைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.