20 திருக்குறள் சொன்னா 1 லிட்டர் இலவச பெட்ரோல்: அசத்தல் அறிவிப்பால் அலைமோதும் கூட்டம்!
10 திருக்குறள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோல்!
20 திருக்குறள்கள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என பெட்ரோல் பங்க் ஒன்றின் அசத்தலான அறிவிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.
கரூரைச் சேர்ந்தவர் செங்குட்டுவன். எம்.டெக் பட்டதாரியான இவருக்கு திருக்குறளின் மீது தீராத ஆர்வம். இந்த ஆர்வத்தின் காரணமாக, வள்ளுவர் உணவகம், வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் பங்ங் ஆகியவற்றை நடத்தி வருகிறார். அனைவரும் திருக்குறளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடைய செங்குட்டுவன், திருவள்ளுவரையும், திருக்குறளின் புகழையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என எண்ணிணார்.
அதன் ஒருபகுதியாக கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் 20 திருக்குறள்களை சேர்ந்தாற் போல் ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்றைக்கு பெட்ரோல் விற்கும் விலையில்,
’இது நல்லாருக்கே’ என்று பலரும் இதற்காக வீட்டில் உட்கார்ந்து திருக்குறளை மனப்பாடம் செய்து வருகின்றனர். இந்தத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது இந்த செயலால் கரூர் – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அவரது வள்ளுவர் பெட்ரோல் பங்கில் கூட்டம் அலைமோதுகிறது.
இலவசமாக பெட்ரோல் வாங்க வேண்டும் என்று வீட்டில் இருந்து வீட்டுக் குழந்தைகளுக்கு திருக்குறள் மனப்பாடம் செய்யச் சொல்லி, அதை சரிபார்க்கும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர். பலர் சரியாக திருக்குறளை சொல்லி பெட்ரோலை வாங்கிச் செல்கின்றனர். திருக்குறளின் மீதான ஆர்வம் காரணமாக சிலர், 20 குறள்களுக்கும் மேல் ஒப்புவித்து ஆச்சரியப்பபடுத்துகின்றனர்.
இந்த திருக்குறள் திட்டம் குறித்து அவர் கூறுகையில்,
“மாணவர்களிடம் தமிழ் வாசிப்பதும், பேசுவதும் குறைந்து வருகிறது. மக்களிடையே திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச பெட்ரோல் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கவே இந்தத் திருக்குறள் போட்டியை அறிவித்தோம். இலவச பெட்ரோல் என்பதையும் தாண்டி மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளான கடந்த ஜனவரி 14-ம் தேதி தொடங்கிய இந்தத்திட்டம், ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் செங்குட்டுவனின் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது!