1500 ரூபாயில் ஒரு ஏசி: கோவை இளைஞரின் அற்புதக் கண்டுபிடிப்பு!
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க ஏசி, ஏர் கூலரை வாங்கமுடியாதவர்களுக்கு வரப்பிரசாதம் இவர் வடிவமைத்துள்ள இந்த ‘வில்லேஜ் ஏசி’
பருவநிலை மாற்றத்தின் விளைவை அனுபவிக்கும் ஒரு தலைமுறையாக நாம் இருக்கிறோம். தாங்க முடியாத குளிர், சகிக்க முடியாத வெப்பம் என பருவநிலை மாற்றம் நம் அன்றாடங்களை பாதித்திருக்கிறது. இந்த கோடை தொடங்கியது முதலே, ’இதுவரை இப்படி ஒரு வெயிலை நான் பார்த்ததில்லை’ என வியர்த்துக் கொட்டியபடியே அத்தனை பேரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். வெயிலை சமாளிக்க ஏசியோ, ஏர் கூலரோ வாங்க வசதியில்லாதவர்களுக்கு நிரந்தரத் தீர்வை கண்டுபிடிக்க முடிவதில்லை.
இந்த நிலையில் தான், கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஷ், மலிவு விலையில் ஒரு ஏர் கூலரை வடிவமைத்திருக்கிறார். இதற்கு ஜெகதீஷ் வைத்திருக்கும் பெயர் ‘வில்லேஜ் ஏசி’.
கே.எஸ்.ஜி கல்லூரியில் எம்.எஸ்.சி ஐடி வரை படித்த ஜெகதீஷ் தற்போது ஒரு நிறுவனத்தில் சிஸ்டம் அட்மினாக வேலை செய்து வருகிறார். இயல்பிலேயே, செல்வபுரத்தில் இருக்கும் ஜெகதீஷின் வீட்டில் வெப்பம் அதிகமாக இருக்கும். கோடை தொடங்கிய பிறகு, அவரின் இரண்டு வயது மகளுக்கு வெப்பம் தாங்காமல் உடல்நிலை சரியில்லாமல் போனது. வெப்பத்தைக் கட்டுப்பத்த ஏசியும் ஏர் கூலரும் வாங்கலாம் என தேடிய போது, அது பட்ஜெட்டிற்குள் இல்லை என்பது புரிய வந்தது. அப்போது தான், இதற்கு சுயமாகத் தான் தீர்வு காண வேண்டும் எனும் முடிவுக்கு வந்தார்.
இணையத்தில் தனக்கான பதில் கிடைக்குமா என்று தேடி, எப்படி ஒரு வீட்டுக்கு அடக்கமான கூலரை வடிவமைப்பது என ஆய்வு செய்தார். யூ-ட்யூபில் ஏகப்பட்ட வீடியோக்களை பார்த்திருக்கிறார். அதில் கிடைத்த ஐடியாவை வைத்துக் கொண்டு, தன்னுடைய திட்டத்தை நடைமுறைபடுத்தினார்.
“வழக்கமாகவே, வெட்டிவேர், மண்பானை போன்ற இயற்கைப் பொருட்கள் குளிர்ச்சி தரும் என்பது நமக்கு தெரியும் தான். ஆனால், அதை மட்டும் வைத்து வீட்டை குளிர்ச்சியாக்க முடியாது. முதலில், வெப்பத்தை வெளியேற்ற வேண்டும். வீட்டிற்குள் இருக்கும் வெப்பத்தை எப்படி வெளியேற்றுவது என யோசித்த போது எக்ஸ்ஹாஸ்ட் ஃபேனை உபயோகிக்கலாம் என தெரியவந்தது. அதனால், எக்ஸ்ஹாஸ்ட் ஃபேனை வைத்து வெப்பத்தை வெளியேற்றி விட்டு, வெட்டிவேர், மண்பானை தண்ணீரால் அறையை குளிர்ச்சியாக்கும் ஒரு கூலரை வடிவமைத்தேன்,” என்கிறார்.
இந்த ‘வில்லேஜ் ஏசி’, ஒரு கூலர் அளவிற்கு குளிர்ச்சி தரவில்லை என்றாலும், அறையின் வெப்பத்தை மட்டுப்படுத்தி, மிதமான குளிர்ந்த காற்று அறை முழுதும் வீசச் செய்கிறது.
ஜெகதீஷ் வடிவமைத்திருக்கும் இந்த ஏர் கூலரின் விலை 1500 ரூபாய் தொடங்கி 4000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கூடவே, ஐந்தாறு மாடல்களில் கிடைக்கிறது. இதுவரை வந்து பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் வீட்டிற்கு ஏற்றது போல வடிவமைக்க வேண்டும் என தங்கள் தேவைகளை விவரிக்கிறார்களாம். அதற்கு ஏற்றது போல புதுப்புது வசதிகளோடு இந்த ‘வில்லேஜ் ஏர் கூலரின்’ வடிவத்தை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொண்டே இருக்கிறார். இவர் வடிவமைப்பிற்கு உரிமமும் வாங்கிவிட்டார்.
தற்போது, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஜெகதீஷ், விரைவிலேயே இதை பெரிய அளவு வியாபாரமாக நடத்த வேண்டும் என விரும்புகிறார்.
’உங்களைச் சுற்றியுள்ள சூழலில் உங்களுடைய பிரச்சனையாக எதை நினைக்கிறீர்களோ, அதற்கான தீர்வில் இருந்து தான் உங்களுடைய தொழில் தொடங்கும்’ என்றோரு அறிவுரையை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஜெகதீஷ். இப்படியான உள்ளூர் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டியது வாடிக்கையாளர்களாக நம் கடமையும் கூட.