Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'கலாபவன்' மணி: தனித்துவ திரைக் கலைஞராக உயர்ந்த ஓர் ஆட்டோ ஓட்டுநரின் வரலாறு!

"இரண்டு வருடங்களுக்கு முன் மணியை சாலக்குடியில் வைத்து பார்த்தேன். அப்போது சார்! எனது வீட்டுக்கு ஏன் வரவில்லை என கேட்டதும் இப்போதே போவோம் என்றேன். அவர் என்னை அவரது புதிய வீட்டிற்கு அழைத்து செல்லாமல் பழைய கூரை வீட்டுக்கு அழைத்து சென்றார்."

'கலாபவன்' மணி: தனித்துவ திரைக் கலைஞராக உயர்ந்த ஓர் ஆட்டோ ஓட்டுநரின் வரலாறு!

Monday March 07, 2016 , 3 min Read

கலாபவன் மணி நம்மை விட்டு விடை பெற்றுவிட்டார். 46 வயதேயான அந்த கலைஞரின் மரணம் தென்னிந்திய திரை உலகையே மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்றே கூற வேண்டும். 

கேரளா மாநிலம் சாலக்குடியின் சேனத்துநாடு குன்னிசேரி வீட்டில் பிறந்த ராமன் மணி, மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய ரசிகர்களை தனது திறமையால் கட்டிப் போட்டவர். திரைத்துறையில், தனக்கேயுரிய தடத்தினை பதித்த மணி, தனது சிறு வயது முதல் வறுமையோடு கட்டிப் புரண்டு போராடியவர். ஆம். ! அவரது வாழ்க்கை சாதாரண ஆட்டோ ஓட்டும் தொழிலில் தான் துவங்கியது. தினமும் ஆட்டோ ஓட்டி கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தினரை கவனித்து வந்த கலாபவன் மணிக்கு, மிமிக்ரி செய்யும் திறமை இருந்தது.

 

 


இதனால் உள்ளூர் நாடக நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டிப் போக மீதி நேரங்களில் எல்லாம் கலந்து கொண்டு மிமிக்ரி செய்தார். கூடவே அவர் பாடிய நாடன் பாட்டுகள் (கிராமிய பாடல்கள்) மலையாளிகளை கவர்ந்திழுத்தன. இதனைத் தொடர்ந்து தான் அவருக்கு கலாபவனில், தனது திறமையை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கலாபவனில் இருந்து இன்னும் மிளிரும் வகையில் வெளியே வந்த மணி, தனது திறமையை மெருகேற்றித் தந்த பாடசாலையான கலாபவனின் பெயரை தன்னுடைய பெயருடன் இணைத்து கொண்டார்.

கலாபவன் மணிக்கு முதன் முதலில் வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் சிபிமலையில். 1995 இல் அவரது அக்ஷரம் என்ற சினிமாவில் கலாபவன் மணிக்கு அவரது தொழிலான ஆட்டோ டிரைவர் வேடமே அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சிபிமலையில், மனோரமா நாளிதழுக்கு கூறும் போது, 

 “அந்த சினிமாவில் ஆட்டோ ஒட்டக்கூடிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பொருத்தமான நபர் தேவைப்பட்டது. பலரையும் பார்த்தேன். எனக்கு திருப்திபடும்படியாக எவரும் இல்லை. இயக்கத்தில் எனக்கு உதவியாக இருந்த சுந்தர்தாசன் தான் சாலக்குடியைச் சேர்ந்த மணியை குறித்து என்னிடம் கூறினார். 'நல்ல மிமிக்ரி செய்வார். நல்ல கலைஞனும் கூட. வாழ்க்கையை ஓட்ட, தற்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்'என என்னிடம் கூறினார். அப்போது காக்கநாடு என்னும் இடத்தில் வைத்து ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. மணியை அழைத்ததுமே வந்தார். சாலக்குடியில் இருந்தே ஆட்டோவில் வந்தார்.” 

இது தான் கலாபவன் மணியின் முதல் திரைப்படப் பிரவேசம் என கூறினார் சிபிமலையில்.

அக்ஷரம் சினிமாவில் மணியின் நடிப்பைக் கண்டு வியந்து போன சிபிமலையினின் உதவியாளராக இருந்த சுந்தர்தாஸ், தான் இயக்கிய முதல் சினிமாவான சல்லாபத்தில் மணிக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். அதிலும் மணி சிறப்பாக தனது திறமையை காட்டவே, கலாபவன் மணியின் சினிமா வாய்ப்புகள் அதிகரித்தன. இதுவரை 200 க்கும் அதிகமான சினிமாக்களில் அவர் நடித்துள்ளார்.

தனது நண்பர்களுடன் மணி | முகநூலில் பகிர்ந்த கடைசி படம்

தனது நண்பர்களுடன் மணி | முகநூலில் பகிர்ந்த கடைசி படம்


தமிழ் ரசிகர்களுக்கு முதன்முதலாக அவர் அறிமுகமானது, 1998 இல் வெளிவந்த மறுமலர்ச்சி என்ற சினிமா மூலம் தான். அந்த படத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல தமிழ் சினிமாக்களில் நடித்த அவர், ரஜினிகாந்த் நடித்த எந்திரன் சினிமாவிலும் நடித்துள்ளார்.

“ ரஜினிகாந்தை போன்ற ஒரு மனிதராக தான் கலாபவன் மணியும் இருந்தார். இருவருமே நிறைய கஷ்டங்களை அனுபவித்து சினிமாவில் தடம் பதித்தவர்கள். சாதாரண குடும்பப் பின்னணி உள்ளவர்கள். மணியின் சிறு வயது வாழ்க்கை, வறுமை மிகுந்த வாழ்க்கையாக இருந்தது. அதை எங்களிடம் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொள்ளுவார். நாடன் பாட்டுக்களை அவர் சிறு வயதிலிருந்தே பாடுவது வழக்கம். அந்த பாட்டையே பிற்காலத்தில் மேடைகளில் பாடி ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார்” . என கூறுகிறார் சிபிமலையில்.

வாழ்க்கையின் உச்சநிலைக்கு உயர்ந்தாலும், தனது ஏழ்மை நிலையை என்றுமே மறக்காதவர். சிறுவயதில் தன்னோடு நண்பர்களாக இருந்தவர்களை, தனது நிலை வளர்ந்த பின்னும் மறக்காமல் உதவியவர். அது போன்றே அவரது ஊரில் உள்ளவர்களுக்கு உதவ ஒரு போதும் தயங்கியதில்லை. கடந்த 2009 இல் சாலக்குடி அரசு மகளிர் உயர்நிலை பள்ளிக்கு தனது சொந்த செலவில் பேருந்து ஒன்றினை வாங்கிக் கொடுத்தார். அதுபோன்றே கடந்த 2011 இல் ஓணம் பண்டிகையை 1000 க்கும் அதிகமான ஆதிவாசிகளுடன் கொண்டாடினார். அவர்களுக்கு துணியும், இனிப்புகளையும் வழங்கினார்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம், திருச்சூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தனது நேரத்தை செலவழிக்கும் மணி, தேசிய விருது வாங்குவதைக் காட்டிலும், முதியோர்களை சந்தோஷப்படுத்துவது மிகவும் பயனுள்ளது என்று ஒருமுறை கூறியவர்.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த மணி 

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த மணி 


“இரண்டு வருடங்களுக்கு முன் மணியை சாலக்குடியில் வைத்து பார்த்தேன். அப்போது சார் ! எனது வீட்டுக்கு ஏன் வரவில்லை என கேட்டதும் இப்போதே போவோம் என்றேன். அவர் என்னை அவரது புதிய வீட்டிற்கு அழைத்து செல்லாமல் பழைய கூரை வீட்டுக்கு அழைத்து சென்றார்.” என பழைய வாழ்க்கையை மறக்காத மணியை குறித்து குறிப்பிட்டார் சிபி.

நடிகர் ஜெயராமும், கமலஹாசனும் கலாபவன் மணியிடம் நெருக்கமாயிருந்தவர்கள். போன மாதம் ஒருமுறை நடிகர் கமலஹாசன், மணியின் உடல் நலத்தை நன்கு கவனிக்கும்படி தன்னிடம் அறிவுறுத்தியதாக ஜெயராம் கூறுகிறார். கமலஹாசனின் பாபநாசம் சினிமா தான் கலாபவன் மணி நடித்து தமிழில் வெளிவந்த கடைசி சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஏழ்மை நிலையிலிருந்து தனது திறமைகளை வெளிக்காட்டி, கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்ட ராமன் மணி என்ற கலாபவன் மணி என்ற ஆட்டோ ஓட்டுனர், தேசிய விருதுகளையும், கேரள அரசின் விருதுகளையும் வாங்கிக் குவித்து, தென்னிந்திய சினிமா வரலாற்றில் தனக்கென முத்திரையைப் பதித்துவிட்டே இவ்வுலகை விட்டுச் சென்றுள்ளார் என கூறுவதே பொருத்தமானது.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்