அக்பருக்கான விருந்தை ஜோதாவுக்காக உண்மையில் சமைத்த சுபாங்கி தாய்மதே!
அக்பருக்கான ஜோதாவின் விருந்தை உண்மையிலேயே செய்த பெண் – சுபாங்கி தாய்மதே
உங்கள் உணவுப் பழக்கத்தின் மீது உங்களால் கட்டுப்பாடாக இருக்க முடியவில்லையா. ஒரு சின்ன நடைபயணத்தில் உங்கள் தெருமுனையில் இருக்கும் ஒரு உணவு விளம்பரப் பதாகை உங்கள் உமிழ் நீரை ஊறச் செய்கிறதா? உங்களுக்குப் பிடித்தமான பீஸாவின் தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் மோஸரெல்லா சீஸின் இழைகளில் மனதைப் பறிகொடுக்கிறீர்களா? உங்கள் பிடித்தமான உணவை இன்னும் ருசிகரமாகத் தெரியச்செய்வது யார் என்று நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அவர்தான் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து உலகளாவிய உணவு வடிவமைப்பாளர்களில் ஒருவரான சுபாங்கி தாய்மதே.
அவருடைய வேலை நாம் கடந்து போகும் வேலைகளில் ஆர்வத்தைத் தூண்டும் ஒருவேலை. உணவை அழகாகத் தெரியவைப் பதற்காக அவர் பெரிய அளவில் ஊதியம் பெறுகிறார். அது உணவுப் பொருட்கள் இருக்கும் கலன்களில் மேல் இருப்பதாகட்டும், விளம்பரங்கள் ஆகட்டும், திரைப்படங்களாகட்டும் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகட்டும். அடுத்தமுறை ஒரு விளம்பர நடிகை பாதி உருகிய சாக்லேட்டை தன் வாயருகே கொண்டு செல்வதை கேமிரா காட்டுகையில், அதன் பின்னர் ஒரு வடிவமைப்பாளர்அந்த நிறம், அந்த வடிவம், அந்த கேமிரா கோணம், ஒளி அமைப்பு போன்ற அனைத்தும் மிகச் சரியாக வருவதற்காக உழைத்திருக்கிறார் என்று நினைவில் கொள்ளுங்கள்.
தொலைக்காட்சியில் வரும் சமையல் குறிப்புகளை வீட்டில் செய்து பார்க்கையில் வரும் வேறுபாடுகளை நாம் எல்லோருமே கடந்து வந்திருப்போம். உதாரணமாக ஒரு பராத்தாவின் மீது குமிழ்விட்டுக் கொதிக்கும் வெண்ணையைப் பார்த்து அதுபோல் நாம் முயன்றால் நாம் வெண்ணையோடு போராட வேண்டிவரும். அப்போதெல்லாம் ஒரு முறை கூட அந்த உணவை அமைப்பதற்கு ஒரு கலைஞர் உழைக்கிறார் என நினைத்திருக்கமாட்டோம். பின் எவ்வாறு சுபாங்கி இந்த தனித்தன்மையுடைய, யாரும் முயலாத துறைக்குள் நுழைந்தார்?
வெறுமையில் இருந்து பெருமைக்கு
23 வருடங்களுக்கு முன், இந்தப் படைப்பாளி உணவுத்துறைக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு துறையில் இருந்தார். “என் தொழில் வாழ்வை நான் ஒரு ஜப்பானிய நிறுவனத்திற்கு வேதிப் பொருள் திறனாய்வாளராக தொடங்கினேன். என் மகன் ஷாரங்க் வயிற்றில் இருந்த போது நான் பேறு கால விடுப்பில் இருந்தேன். என் காலில் மீண்டும் நான் நிற்க வேண்டும் என்னும் எண்ணம் வரும்வரை ஐந்து ஆண்டுகள் நான் வேலைக்குச் செல்லவில்லை. ஆனால் என்னால் என் பழைய வேலைக்குச் செல்ல இயலவில்லை.
வேறு சில துறைகளை நான் முயல ஆரம்பித்தேன். உணவுத் துறையில் எனக்கு நம்பிக்கை தெரிந்தது. ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த என் கணவர் நான் சமையற்கலையில் பெற்ற சான்றிதழ்களை வைத்து ஏன் இதை தொழிலாகச் செய்யக்கூடாது எனக் கேட்டார். சரி இதை முயலலாம் என தோன்றியது. சரியாக வந்தால் செய்யலாம் இல்லா விடில் விட்டுவிடலாம் என ஆரம்பித்தேன். இரண்டு மூன்று வேலைகள் முடித்தபின் என் துறை இது தான் என நம்பிக்கை பிறந்தது. 1997களில் இந்தத்துறைக்கு பெரிதாக தேவை இருக்கவில்லை. மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று வேலைகளே அதிகம். இணையம் இல்லாத காரணத்தால் விளம்பரமோ சந்தைப்படுத்துதலோ இல்லை.
உணவுத்துறை வளர வளர, இந்த வடிவமைப்புத் துறைக்கான தேவை வளர்ந்து கொண்டே சென்றது. “இப்போது மாதம் இரண்டு மூன்று நாட்கள் தான் எனக்கு ஓய்வு கிடைக்கிறது” என அந்த மகிழத்தக்க மாறுதலைப் பற்றி சிலாகிக்கிறார்.
இன்னொரு மகிழ்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் இந்த துறைக்கான தேவை அதிகரித்தாலும் இதில் விற்பன்னர்கள் பெரும்பாலும் அதே அளவுதான் உள்ளனர். அதனால் இந்த ஐந்து பெரும் வடிவமைப்பாளர்கள் சந்தையின் பெரும் தேவையை சமமாக, நிறைவாக பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
நிறுவனங்களின் தேவை தற்போது மாறியும் வளர்ந்தும் விட்டது. எங்கள் அனைவருக்கும் தேவைக்குமேல் இப்போது வேலை இருக்கிறது. இணையம் உலகைச் சுருக்கிவிட்டதால் இப்போது இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நாங்கள் வேலை செய்கிறோம்.
கலை
இந்தத் தொழிற்துறை முறைப் படுத்தப்பட்டோ அல்லது பெருநிறுவனங்களாலோ நடத்தப்படுமா?
முதலாவதாக இங்கு போட்டி என்பது பெரிய அளவில் இல்லை. மேலும் இது ஒரு கலை என்பதால் இதை நடத்துவது பெரும்பாலும் தனிநபர்களே. இதற்கென்று பட்டயப்படிப்போ வேறு வகுப்புகளோ கிடையாது. இயல்பாகவே அது அமைந்திருக்க வேண்டும். மேலும் இதைச் செய்கையிலேயே கற்கும் திறனும் வேண்டும்.
இது கலை என்றால் நீங்கள் செய்த சிறந்த வடிவமைப்புகள் யாவை?
நம்மை அறியாமலே நாம் இவருடைய வடிவமைப்புகளை ரசித்திருப்போம். ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யாராய் ஹ்ரித்திக் ரோஷன் காலடியில் காதலோடு வைக்கும் வண்ண மயமான மார்வாரி உணவுவகைகளின் அழகை வாய் பிளந்து இரசித்திருப்போமானால், அந்த வேலைப் பாட்டின்பின் இருப்பது சுபாங்கிதான்.
“இது எனக்கு சவாலான ஒரு வேலையாக இருந்தது. அந்த உணவுவகைகளைப் பற்றி, அவற்றின் வடிவங்களைப் பற்றி, அவற்றை அழகாக வழங்குவது பற்றி நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருந்தது. எனக்குப் பெரிய வேலைகளைவிட வித்தியாசமான வேலைகள் செய்வது பிடிக்கும்".
நான் செய்ததிலேயே மிகவும் வித்தியாசமானது ஒரு கனவுக் காட்சியில் கதை மாந்தர்கள், பரிமாறும் மேஜையில் மிகப்பெரிய அளவில் இருக்கும் உணவு வகைகளைப் பற்றி கனவு காணுவார்கள். எனக்கு அவர்கள் அந்த காட்சியை விளக்கி என்னால் எவற்றையெல்லாம் அந்த மேஜைக்குக் கொண்டு வரமுடியும் எனக் கேட்டார்கள்.
நான் அவர்களுக்கு கால்பந்தின் அளவுள்ள லட்டுக்களும், இரண்டு கிலோ கேக்கின் அளவு பெரிய பர்கர்களையும், மூன்றடி நீளமுள்ள மீனையும் கொடுத்தேன்” என்கிறார்.
மேற்சொன்னவை பெரிய அளவிலான வேலைகள் என்பதால் 5-7 நாட்கள் ஆகும், சிறிய அளவிலான வேலைகள் 1-3 நாட்கள்வரை பிடிக்கலாம்.
ஐஸ்கிரமா? மசித்த உருளையா?
எப்படி தலைமுடி மற்றும் அழகுசாதனப் பொருள் விற்கும் நிறுவனங்கள் தங்கள் நடிகையின் தலைமுடியை பளபளப்பாக காண்பிக்க சில திரைமறை உத்திகளைக் கையாள்கிறார்களோ, அதே போல் உணவு வடிவமைப்பாளர்களும் அந்தப் பொருளை காட்சிப் படுத்தையில் இன்னும் கவர்ச்சியாகத் தெரியவேண்டும் என்பதற்காக உணவு அல்லாத பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இது சில கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் சுபாங்கி தன் வடிவமைப்புகளில் நம்பகத்தன்மை இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தொலைக்காட்சி விளம்பரங்களில் ஐஸ்கிரமுக்கு பதிலாக மசித்த உருளைக்கிழங்கு பயன்படுத்துகிறார்கள் என்கிறார்கள். அது தவறானது. நான் நிஜமான உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறேன். மேலும் இப்போது நுகர்வோர் புத்திசாலிகளாக ஆகிவிட்டார்கள். எவ்வளவு உண்மையோ அவ்வளவு நம்புகிறார்கள்.
நாம் நினைப்பதைவிட இங்கு கிடைக்கும் இடம் பெரிது.
தன் துறையில் உச்சத்தில் இருந்தாலும் குடும்பத்திற்காக நேரம் செலவழிக்க வேண்டும் என எண்ணுகிறார். “வேண்டாம் என்று சொல்லக்கூடிய சுதந்திரம் தான் ஒரு பெண் தொழில்முனைவராக என்னை உணர வைக்கிறது” என்று சிரிக்கிறார்.
உலகம் முழுக்க வேலை விஷயமாகச் சுற்றினாலும் அது அவரது வேலை-குடும்ப சமநிலையை எந்த அளவிலும் பாதிக்கவில்லை. தன் எல்லைகளை விரிவாக்க எல்லா சுதந்திரத்தையும் அவர் குடும்பம் அவருக்காகக் கொடுத்திருக்கிறது என்கிறார்.
“என் வீட்டிலும், வேலையிலும் நான் என்றுமே ஆண்-பெண் வேறுபாடுகளை உணர்ந்ததில்லை. விளம்பரத்துறை முற்போக்காகச் சிந்திக்கும் துறையாதலால் நம்வேலைகள் நம்மைப்பற்றி பறை சாற்றும்.”
மேலும் அவர்; என் விடாமுயற்சியும் கடின உழைப்புமே என்னை இங்கு கொண்டு வந்ததாகக் கூறுகிறார். மேலும் பொறுமை என்ற குணத்தை நான் வளர்த்துக் கொண்டேன். அது இந்தத் துறையில் இருப்பதற்கு மிகவும்அவசியமாகும். ஒரு படப்பிடிப்பு நாள் என்பது குறைந்தபட்சம் 12 மணி நேரம் நீளும். அது உடலளவில் நம்மை அயர்வுறச் செய்யும். நாமே எல்லாவற்றையும் யோசிப்பது மனதளவில் அயற்சியைத் தரும். இதைச் செய்ய ஒருவருக்குப் பெருமளவு பொறுமை வேண்டும்.
மேற்கு உலகைப் பாராட்டும் இந்திய மனப்பாங்கு
இந்தத்துறை பெரிய அளவில் நகராததற்குப் பெரியகாரணம் நம் பாரம்பரிய உணவுவகைகளை நாம் தரக்குறைவாக மதிப்பிடுவதுதான். மெக்டொனால்ட்ஸும், டாமினோஸும் பெரிய அளவில் விளம்பரப்படுத்துகிறார்கள், ஆனால் நம் நிறுவனங்கள் அதைச் செய்ய மறுக்கின்றன. இங்கு பெரிய அளவில் சங்கிலித் தொடர் உணவகங்கள் இல்லை. நம் பாரம்பரியத்தை நாம் மதிப்பதும் இல்லை பெருமை கொள்வதும் இல்லை. நம் ஊர் நிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் ஈட்ட பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டும் எனப்புரிந்து கொள்ளாதவரை, இந்தக் கவர்ச்சியும் விளம்பரங்களும் மேற்கு உலகில் மட்டுமே இருக்கும்.