நாமே தயாரிக்கலாம் நேச்சுரல் டிஷ்வாஷ் பவுடர்: எளிய இயற்கை முறையில் லாபகரமான சிறுதொழில்!
சாம்பல் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் உள்ள மகளிர் நான்கைந்து பேர் இணைந்தோ அல்லது மகளிர் குழுக்களோ இத்தயாரிப்பை எளிய முறையில் சிறு தொழில் போல செய்து லாபம் ஈட்டலாம்.
இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி, பணிபுரியும் மகளிராக இருந்தாலும் சரி. அவர்களின் இடுப்பொடிய செய்யும் இரண்டு முக்கியமான பணிகள் துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது ஆகும். துணி துவைப்பதற்குக் கூட இயந்திரம் உள்ளது. அதுவும் வாரம் ஓர் முறை துவைத்தால் போதும். ஆனால் பாத்திரம் கழுவது என்பது தினசரி செய்யவேண்டிய மிகக் கடினமான பணியாகும். அதே சமயம் அத்தியாவசியமானதும்.
காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேலை உணவுக்குப் பயன்படுத்திய பாத்திரங்கள் மலை போல் குவிந்து கிடப்பதை பார்த்தாலே பெண்களுக்கு மயக்கம் வந்துவிடும்.
என்னதான் வீட்டு வேலைக்கு ஆட்களை வைத்துக்கொண்டாலும், அவர்களின் பணியில் பெரும்பாலானோருக்கு திருப்தி ஏற்படுவதில்லை. எவ்வளவுதான் கடினமாக இருந்தாலும், தன் கையால் பாத்திரங்களை துலக்குவதுதான் அவர்களுக்கு முழு திருப்தியாக இருக்கும்.
என்னதான் சிரத்துடன் இப்பணியை செய்தாலும், அதிலும் சிறு குறை ஏற்படத்தான் செய்கிறது. ஆம், நாம் பாத்திரம் துலக்கப்பயன்படுத்தும் பெரும்பாலான சோப்கள், பவடர்களில் வேதிப் பொருள்கள் உள்ளது. இவற்றில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத சிறு வேதிப் பொருள்களின் துகள்கள் பாத்திரங்களிலும், கைகளிலும் ஓட்டிக் கொண்டு உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தத்தான் செய்கின்றன என்பதை யாரும் மறுக்க இயலாது.
இப்பிரச்னைக்குத்தான் தீர்வு கண்டுள்ளார் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த உஷாபவன். கணிதத்தில் எம்.ஃபில். வரை படித்துள்ள இவர், கணவரின் சொந்தத் தொழிலை செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் என் கணவர் சரவணபவனுக்கு தங்களின் பரம்பரைத் தொழிலான தென்னை, பனஞ் சர்க்கரை மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலை தொடர்ந்து செய்து வர விருப்பம். நான் அதற்கு உறுதுணையாக செயலாற்றி வந்தேன்.
இந்த தொழிலுக்கு எரிபொருளாக மரக்கட்டைகளைப் பயன்படுத்தி வந்தோம். இதனால் தினசரி பெருமளவில் சாம்பல் கிடைக்கும். அதனை தோப்பில் உள்ள மரங்களுக்கு உரங்களாகப் பயன்படுத்தி வந்தோம். ஆனால் மிகுதியாக சாம்பல் மிச்சமாகும். இதனை எப்படி பயன்படுத்துவது என தனது ஆய்வுக்கு பிள்ளையார்சுழி போட்டுள்ளார்.
அப்போதுதான் இந்த சாம்பலை, பாத்திரம் தேய்க்கும் டிஷ்வாஷ் பவுடராக மாற்றி விற்பனை செய்தால் என்ன என்ற சிந்தனை அவரது சிந்தையில் உதித்துள்ளது. ஆனால் அந்தக் காலத்தில் இருந்தே அனைவரும் சாம்பலைக் கொண்டுதானே பாத்திரம் துலக்கியுள்ளனர். இதில் என்ன புதுமை உள்ளது. இதை எப்படி சந்தைப்படுத்துவது என யோசித்தபோதுதான் அவருக்கு பதில் கிடைத்தது.
பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் பவுடர்களில் வேதிப் பொருள்கள் உள்ளதால், கைகள், பாத்திரங்களுக்கு, அந்த பாத்திரங்களில் இருந்து உண்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை ஆராய்ந்தார்.
இதனை தடுக்கும் வகையில் இயற்கை முறையில் சாம்பலுடன் பல்வேறு ஆரோக்கியமான கைகளுக்கோ, பாத்திரங்களுக்கோ, உடல் நலனுக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத நேச்சுரல் டிஷ்வாஷ் பவுடரை உருவாக்குவது என முடிவுக்கு வந்தார்.
இந்த இயற்கை முறையிலான டிஷ்வாஷ் பவுடர் தயாரிப்பு குறித்து அவரிடம் கேட்டபோது,
“நன்கு எரிந்த மரக்கட்டை சாம்பலை எடுத்து தூசி போல முற்றிலும் நன்றாக சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். வேப்பிலையை நன்றாக சூரிய வெளிச்சத்தில் காய வைத்து அதனையும் நன்றாக மாவு போல அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் பூந்திக்கொட்டையை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பாத்திரம் தேய்க்கும்போது நுரை வருவதற்காக பயன்படுத்துவது) வாங்கி, பருப்பை நீக்கிவிட்டு, தோலை மட்டும் உலர்த்தி நன்றாக இடித்து வைத்துக் கொள்ளவேண்டும். இம்மூன்றையும் சமவிகிதத்தில் நன்றாக கலந்து பொட்டலங்களாக்கி விற்பனைக்கு சந்தைப்படுத்தலாம். இதன் விலை கால் கிலோ ரூ.89 மட்டுமே,” என்றார் உஷாபவன்.
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வேதிப்பொருள்களான டிஷ்வாஷ் சோப் அல்லது பவுடர்கள் கால்கிலோ ரூ.50-க்கு கிடைக்கும்போது இது விலை அதிகமில்லையா என நாம் கேட்டதற்கு,
“இது முற்றிலும் இயற்கை முறையிலானது. எந்த வேதிப் பொருளும் கலக்காதது. இது பாத்திரங்களுக்கோ, கைகளுக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், பாத்திரங்களில் உள்ள எத்தகைய கறைகளையும் நீக்கக் கூடியது. எனவே இயற்கை முறையிலான இப்பொருளுக்கு இவ்விலை அளிப்பதில் தவறில்லை,” என்றார்.
”மேலும், சாம்பல் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் உள்ள மகளிர் நான்கைந்து பேர் இணைந்தோ அல்லது மகளிர் குழுக்கள் ஒன்று சேர்ந்தோ இத்தொழிலை எளிய முறையில் சிறு தொழில் போல செய்து லாபமீட்டலாம். பொதுமக்கள் இதன் பயன் உணர்ந்து பயன்படுத்தத் தொடங்கும்பபோது, உற்பத்தி அதிகரிக்கும். விலையும் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும்,” என்கிறார்.
இதனை எவ்வாறு சந்தைப்படுத்துகிறீர்கள் எனக்கேட்டபோது, “ஏற்கெனவே நாங்கள் மேற்கொண்டுள்ள பனை சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றை விற்பனை செய்யும் முகவர்களிடமே இதனையும் சேர்த்து விற்கும்படி அளிப்போம். இயற்கைப் பொருள்களை மட்டுமே விரும்பி பயன்படுத்துவோர் இதனை வாங்கி பயன்பெறுகின்றனர்,” என்கிறார்.
இவைதவிர, பனையில் இருந்து கிடைக்கும் பதனீர் மூலம் தயாரிக்கப்படும் மொலாசஸ் எனும் கால்சியம், இரும்புச் சத்து, மினரல்ஸ் நிறைந்த உணவுப் பொருள் பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் நன்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் மட்டும்தான் இந்த மொலாஸ் குறித்து தெளிவு மக்களிடம் இல்லை என வருத்தம் தெரிவிக்கிறார்.
மேலும், வரும்காலங்களில் கருப்பட்டியில் கடலைமிட்டாய், சாக்லேட் என பல்வேறு கிரியேட்டிவ் ஐடியாக்களையும் செயல்படுத்தி கலக்க இருப்பதாக பெருமையுடன் கூறுகிறார் உஷாபவன்.