அதிகாரியை அரசியலுக்கு அழைக்கும் இளைஞர் படை: சகாயத்தின் பதில் என்ன?
சமீபத்திய மாமழை தமிழக மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றங்களையும், அரசியல் புரிதலையும் ஏற்படுத்தியிருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதிமுகவையும், திமுகவையும் மாறி மாறி சிம்மாசனத்தில் அமர வைத்த மக்கள் நிவாரணப் பணிகளில் ஏமாற்றம் அடைந்ததோடு, பொதுவெளியில் தங்கள் சகிப்பின்மையை உரக்கச் சொன்னதால் அதிருப்தியின் அளவு அதிகமானதை உணர முடிந்தது.
தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. நிகழ்கால, கடந்த கால ஆட்சிகளால் ஏற்பட்ட அதிருப்திகளின் வெளிப்பாடுதான் ஐஏஎஸ் அதிகாரி 'சகாயம்' அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்னையில் பேரணி நடத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.
சகாயம் அரசியலில் ஈடுபட வேண்டும், சகாயம் முதல்வராக வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் பரவலாக வலுக்கத் தொடங்கி இருக்கிறது. சகாயத்துக்கு எப்போதும் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. நேர்மையான அதிகாரி என்ற அடையாளத்தோடு இரவு பகல் பாராமல் கடமையே கண்ணாக செயல்படுபவர் என்பதால் அவர் மீது வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் கூடிக்கொண்டே செல்கிறது.
சகாயம் முதல்வராக வர வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புவது ஒரே இரவிலோ, ஒரே நாளிலோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அது அதிசயமாகவோ, அற்புதமாகவோ நடந்துவிட வேண்டும் என்று தமிழக மக்கள் கனவு காணவில்லை. சகாயத்தின் கடந்த கால வரலாறும், பின்புலமும், சந்தித்த சவால்களுமே தமிழக முதல்வராகி மக்கள் நண்பனாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்பதைக் கட்டியம் கூறுகிறது.
திமுக, அதிமுகவை பற்றி அதிகம் விமர்சிமக்கத் தேவையில்லை. மாறி மாறி ஆட்சி செய்தும் எங்களுக்கு நல்லது நடக்கவில்லை. அதனால்தான் சகாயத்தை முன்னிறுத்துகிறோம் என்பதே பொதுமக்களின் மையக் கருத்தாக உள்ளது. காரணம், சகாயத்தை நேர்மையின் அடையாளமாகப் பார்க்கிறார்கள். சகாயம் ஊழலற்ற ஆட்சிக்கு உதாரணமாக இருப்பார் என்று நம்புகிறார்கள்.
தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருக்கும்போது தனி நபரை முதல்வராக முன்னிறுத்தும் போக்கு சரியா? என்ற ஜனநாயக மரபில் கேள்வி எழுந்தாலும், அதற்கும் மக்கள் பதில் அளிக்கிறார்கள். அந்த பதில் எப்படிப்பட்டது என்று தெரிந்தால் நீங்கள் இனிமேல் தமிழக மக்களை முட்டாள்கள் என்றோ, விலையில்லா பொருட்களின் பின்னால் அலைபவர்கள் என்றோ சொல்ல உங்கள் நா எழாது.
திமுக அதிமுகவை குற்றஞ்சாட்டுகிறது. அதிமுக திமுகதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று அதே பந்தை திருப்பி அடிக்கிறது. தமிழ் தேசியத்தின் குறியீடாக இருக்கும் வைகோ, தேமுதிக தலைவர் விஜய்காந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார். திமுகவை அதிகம் விமர்சிக்க விரும்பாத தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜெயலலிதா - மோடி சந்திப்பை எந்த அரசியல் நாகரீகமும் இல்லாமல் விமர்சிக்கிறார். பெண்மைக்கு மகுடம் சூட்டிய பெரியாரின் பேரனாக இருந்துகொண்டு, தமிழிசை சவுந்தரராஜன் கரகாட்டப் பெண் போல இருப்பதாக மலினமான அரசியல் பேசி பாஜகவை சீண்டிவிட்டதாக திருப்திப்பட்டுக்கொள்கிறார்.
ராமதாஸ் தன் மகனை முதல்வராகப் பார்க்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் நானே முதல்வர் வேட்பாளர். அதனால் தனித்துப் போட்டி. கூட்டணிக்கு வாய்ப்பிருந்தால் துணை முதல்வர் பதவி தந்தே ஆக வேண்டும் என்று டீலா நோ டீலா பேசும் முடிவில் வாசல் நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார். பண்டிகை நாட்களில் வரும் நடிகர்களின் படங்களைப் போல, முஷ்டி முறுக்கி பன்ச் பேசிவிட்டு உள்ளேன் ஐயா அட்டனென்ஸ் போட்டுவிட்டு தலைமறைவாகிவிடுகிறார் சீமான். மோடியோ பாஜகவை அதிமுகவுடன் சவாரி செய்ய முயற்சிக்கிறார். அதுவும் மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டுவருமே தவிர மாற்றம் இருக்காது. மிகப்பெரிய வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும் ஏனோ தானோ பேசி செல்வாக்கு சரிவதற்கு தானே காரணமாகிவிடுகிறார் விஜய்காந்த்.
இந்த நிலையில் இருந்து எங்களை மீட்கும் மீட்பராக சகாயத்தைப் பார்க்கிறோம் என்று இளைஞர்கள் கருதுகிறார்கள். சகாயம் ஒருவரால்தான் அரசியல் மாற்றத்தைத் தர முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.
எத்தனையோ ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தும் சகாயத்தை மக்களும், இளைஞர்களும் கொண்டாடக் காரணம் என்ன?
* 'என் அரசுப் பணியில் எங்காவது ஓர் இடத்தில் ஒரு சிறு ஊழல் செய்து இருந்தாலோ, ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கி இருந்தாலோ, பொதுமக்கள் முன்னிலையில் என்னைத் தூக்கில் போடலாம்' என்று முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியவர் சகாயம்.
* நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தபோது சாலை ஓரத்தில் கொடிக்கம்பத்தின் கீழ் கைலியுடன் படுத்துகிடந்து மணல் கடத்தல் மற்றும் மண்ணெண்ணெயில் ஒடும் லாரிகளை மடக்கிபிடித்தவர் சகாயம்.
* பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனைக்கு வந்த மென்பானம் அசுத்தமாக இருந்ததாக நுகர்வோர் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து விசாரித்து, அந்த நிறுவனத்துக்கே துணிந்து சீல் வைத்தவர் சகாயம்.
* மதுரையில் ஆட்சியராக இருந்தபோது, ரூ.16,000 கோடி கல் குவாரி கொள்ளையை அம்பலப்படுத்தியவர் சகாயம்.
* தொடர் நஷ்டங்களால் நலிவடைந்து நின்ற கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி கூட்டுறவு நெசவுத் துறை ரூ.11.5 கோடி நஷ்டத்தில் இயங்கியது. சகாயம் இயக்குநராக பொறுப்பேற்ற ஓராண்டிலேயே ரூ.13.5 கோடியாக அதன் வருவாயை உயர்த்தினார். நஷ்டத்திலிருந்து மீட்டு ரூ.2.5 கோடி நிகர லாபம் என்ற நிலைக்கு அதை உயர்த்தினார். வேட்டி தினம் முதல் திருக்குறள் படுக்கை விரிப்பு வரை அவர் கையாண்ட ஒவ்வொரு புது உத்திகளும் கோ-ஆப்டெக்ஸுக்குப் புது மரியாதையைப் பெறவும், இரு தேசிய விருதுகளைப் பெறவும் காரணமாக இருந்தன.
* 20 ஆண்டு கால பணிக் காலத்தில் 25 முறை பணி மாறுதல் செய்யப்பட்டாலும் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டாலும், அவமானங்களே பரிசாகக் கிடைத்தாலும், கொலை மிரட்டல்கள் தொடர்ந்தாலும் தன் கொள்கையை தளர்த்திக்கொள்ளாதவர்.
* மதுரை கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பான வழக்கில் சகாயத்தை சட்ட ஆணையராக உயர் நீதிமன்றம் நியமித்த பிறகு, போலீஸார் ஒத்துழைக்காத போதும், நரபலி கொடுக்கப்பட்ட எலும்புகளைக் கண்டெடுக்கும் வரை சுடுகாட்டில் இரவைக் கழித்தவர்.
* தான் மட்டும் நேர்மையாக இருக்க வேண்டும் என்றில்லாமல், முக்கியமாக தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நேர்மையானவர்களாக மாற்றும் பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்துவருபவர்.
சகாயத்துக்குப் பிடித்த தலைவர்
நேர்மை, உண்மைக்கு உதாரணமாக இருக்கும் சகாயத்துக்குப் பிடித்த தலைவர் கக்கன். நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று சல்லிக்காசு கூட சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர் கக்கன். தனது தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர், மனை ஒதுக்கீடு செய்து அளித்த அரசாணையைக் கிழித்தெறிந்தார்.
தம்பிக்கு காவல்துறையில் தகுதி, திறமையின் அடிப்படையில் வேலை கிடைத்தது. ஆனால், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பதால், அதில் சேர வேண்டாம் என்று கக்கன் கண்டிப்பாக கூறிவிட்டார். பதவிக் காலத்தில் எந்தப் பரிசுப் பொருளையும் யாரிடமிருந்தும் பெற்றதில்லை. இதனாலேயே கக்கன் சகாயத்துக்குப் பிடித்த தலைவராகிவிட்டார் என்று கூட சொல்வதுண்டு.
''எங்கள் மதுரைப் பக்கம் வந்தால் மேலூரைத் தாண்டிச் செல்பவர்கள் ஒரு சிலையைத் தவறாது பார்க்க முடியும். அது கக்கனுடையது. பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவர், மிகக் கொடூரமான சாதியக் கட்டமைப்பின் அடித்தளத்தில் இருந்து வந்து கீர்த்தி பெற்றவர். அடக்கப்பட்ட சமூகத்தில் தோன்றிய கக்கனுக்குச் சிறப்பின் அடையாளமாகச் சிலை எழுப்புகிறார்கள் என்றால், அது நேர்மைக்குக் கிட்டிய பரிசு தானே'' என்று ஒரு பேட்டியில் கக்கனைப் பற்றி சகாயம் சிலாகித்து சொல்லியிருக்கிறார்.
அரசியல் கோணத்தில் பார்த்தால்...
சகாயம் அரசியலுக்கு வந்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்? மக்களிடம் செல்வாக்கு இருக்குமா? போதிய வரவேற்பு கிடைக்குமா? என்ற கேள்விகளை மூத்த அரசியல்வாதி ஒருவரிடம் கேட்டோம்.
''சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகள் அரசியலுக்கு வந்தால் நல்லதுதான். ஆனால், அவர்களை மக்கள் எந்த அளவுக்கு ஆதரிப்பார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
தற்போது அதிகாரியாக இருக்கும் சகாயம் நேர்மையாக நடந்துகொள்கிறார். சட்டத்திற்கு உட்பட்டு கடமையைச் செய்கிறார். ஆனால், அரசியல் களம் அப்படிப்பட்டதல்ல. அமைச்சர்களைத் தக்க வைத்துக்கொள்வது, சில விஷயங்களில் விட்டுக்கொடுப்பது, சமரசங்களில் ஈடுபடுவது போன்றவை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப அமையும். அதை சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்.
மேலும், தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் சாதிப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை, கூடங்குளம் அணு உலைப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, மீத்தேன் பிரச்சினை, ஈழப் பிரச்சினை என்று பிரச்சினைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்தப் பிரச்சினைகளை அணுக அசாத்திய பொறுமையும், ஆழமான அரசியல் அனுபவமும் அவசியம்.
இவை எல்லாவற்றையும் அமைத்துக்கொண்டாலும் சகாயத்துக்கு மற்ற அமைச்சர்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்று சொல்லமுடியாது.
அரசியலில் சகிப்புத்தன்மை முக்கியம். எதையும் தன்னிச்சையாக முடிவெடுப்பதோ, செயல்படுவதோ முடியாது. டிராபிக் ராமசாமி போன்ற சமூக ஆர்வலர்கள் கூட தேர்தல் களத்தில் நிற்கும்போது மக்கள் எந்தவிதத்திலும் தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை.
இந்தச் சூழலில், தனிநபராக இருந்துகொண்டு சகாயம் ஊழலற்ற நிர்வாக அதிகாரியாக சாதிப்பதே சிறந்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சகாயம் சாதித்து வருவதால் அவர் வழியில் தொடர்ந்து செயலாற்றுவதே உன்னதமானதாக இருக்கும்'' என்றார் அவர்.
தீவிரம் காட்டும் 'சகாயம் 2016 ஆதரவுக் குழு'
தமிழக அரசியலின் யதார்த்த பார்வை மீது அக்கறைக் காட்டாத 'சகாயம் 2016 ஆதரவுக் குழு' We want U Sagayam IAS as CM என்ற பெயரில், ஃபேஸ்புக்கில் தீவிரமாக தமது இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது. அத்துடன், களப்பணியில் தொடர்ந்து கால் பதித்து இளைஞர்களைத் திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தை மிகக் குறுகிய காலத்தில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரும்பித் தொடர்வதும், அவ்வப்போது பதிவுகளை இட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.
சென்னை இளைஞர் எழுச்சிக் கூட்டத்துக்குப் பின் 'சகாயம் 2016 ஆதரவுக் குழு' வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தற்போது சகாயம் ஆதரவு இளைஞர்களைக் கொண்டு ஏற்படுத்தும் கட்டமைப்பில், யாரெல்லாம் நிர்வாகிகளாக இருந்து கொண்டு செயல்படுவது என்ற விசயத்தில் சில குளறுபடிகள், தவறான இதர அரசியல் கட்சியினரின் ஆளுமை போன்ற குறுக்கீடுகள் இருந்தாலும், அவற்றை சரிசெய்து, கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம். இந்த ஆரம்பச் சிக்கல் அனைத்து இயக்கத்திலும் உள்ளவைதான்.
பல்வேறு இயக்கத்தினர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் விவரம்:
1. ஜனவரி 3 அன்று மதுரையில் மாபெரும் இளைஞர் எழுச்சிக் கூட்டம் அல்லது பேரணியினை நடத்துவது. இடம் மற்றும் விபரம் விரைவில் வெளியிடப்படும்.
2. இனி எந்தவொரு அமைப்பின் பெயரையும் பயன்படுத்துவதோ, தனிப்பட்ட அமைப்பின் சீருடை அல்லது பெயர்பட்டை (பேட்ஜ்) பயன்படுத்தல் கூடாது.
3. இந்த அமைப்பிற்கு புதியதொரு பெயரினைத் தேர்ந்தெடுக்கும் வரை "சகாயம் 2016" எனும் குடையின் கீழ் இயங்குவது.
4. சகாயம் அவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையிலும், அவருக்கு நம் மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் நம்பிக்கை வரும் வண்ணம் இளைஞர்களை ஒன்று திரட்டி, சமுதாயப் பணியினைச் செய்வது.
5. தமிழகம் சீர்கேடு அடைந்திருக்கும் நிலையில், சகாயம் போன்ற அதிகாரி இளைஞர்களை வழி நடத்தி நல்லதோர் மாற்றத்தை உருவாக்க முன் வர வேண்டும் என்பதுதான் நம் அத்தனை பேருடைய விருப்பம் ஆகும். நமது தமிழக இளைஞர்களின் எழுச்சி அதிகரிக்க அதிகரிக்க நிச்சயம் அவர் வருவார் என்பதுதான் உண்மை. ஒருவேளை சகாயம் அவர்கள் அரசியலுக்கு வராது போனால், அதே அவரது ஆதரவு இளைஞர்களைக் கொண்டு தேர்தலைச் சந்திப்பது.
6. இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், நம் கொள்கைக்குட்பட்ட சமூகநல அமைப்புக்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி, ஆங்காங்கே கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட சில ஆரம்பக்கட்ட முடிவுகளைச் செய்திருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்கு வருவீர்களா? - சகாயம் பதில்
தமிழ்நாட்டின் கேஜ்ரிவால் என்று சகாயத்தை சிலர் புகழ்பாடுகிறார்கள். இன்னொரு கக்கனாக சகாயம் அரசியலில் சாதிப்பார் என்று சொல்கிறார்கள். இளைஞர்களோ இவரை அரசியலுக்கு அழைப்பதில் மிகத் தீவிரமாக களத்திலும் இறங்கிவிட்டனர்.
இதற்கு சகாயம் என்ன சொல்கிறார்? தமிழகத்தின் நடப்பு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, உங்களையே நம்பி இருக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? என்று அலைபேசியில் தமிழ் யுவர் ஸ்டோரி சார்பில் கேட்டோம்.
''இளைஞர்களின் அன்பை மதிக்கிறேன். ஆனால், இது குறித்து எந்த ஊடகத்திலும் நான் கருத்து சொல்ல முடியாது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறேன். தகவல்கள் முறையாக வரும்'' என்று சகாயம் முடித்துக்கொண்டார்.
அதேவேளையில், சகாயத்துக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். அரசியலில் ஈடுபடும் எண்ணம் சகாயத்துக்கு துளியும் இல்லை. இது பற்றி பல கூட்டங்களில் அவரே கருத்து சொல்லியிருக்கிறார். ஊடகங்களில் அதுபற்றி சொல்வது சரியாக இருக்காது என கருதுகிறார். அதனாலேயே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். சகாயத்தை அதிகாரியாக மட்டுமே பார்க்க முடியும். அரசியல்வாதியாக பார்க்க முடியாது என்கிறார்கள் உறுதியாக.
எனினும், 'சகாயம் 2016 ஆதரவுக் குழு' இளைஞர்களின் உத்வேகத்துக்கு, விரைவில் பதில் கிடைக்கும் என்பது மட்டும் இப்போதைக்குத் தெளிவு.
(தமிழ் யுவர் ஸ்டோரியின் புதிய பதிவுகளை அறிய விரும்புவோருக்கான ஃபேஸ்புக் பக்கம் )