படைப்பாற்றல் மிக்கவர்கள் பணம் ஈட்ட உதவும் 18 வயது சமூக தொழில்முனைவர்!
கலை மற்றும் படைப்பாற்றல் துறை சார்ந்த சரியான புரிதல் இல்லாத காரணத்தால் இந்தத் துறைசார் வாய்ப்புகள் குறைந்துள்ளதை கவனித்த புனேவைச் சேர்ந்த சுஹானி தட்பாலே Sangam India என்கிற தளத்தைத் தொடங்கியிருக்கிறார்.
கலை மற்றும் படைப்பாற்றல் துறை சார்ந்த சரியான புரிதல் இல்லாத காரணத்தால் இந்தத் துறைசார் வாய்ப்புகள் குறைந்துள்ளது. புனேவைச் சேர்ந்த 18 வயதாகும் சுஹானி தட்பாலே இதை கவனித்தார்.
வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் மாணவர்கள் இந்தத் துறையில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சுஹானி
என்கிற தளத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்தத் தளம் கலைஞர்கள், தொழில்முனைவோர், புத்தாக்க சிந்தனையாளர்கள் போன்றோருக்கு உதவுகிறது.புனேவைச் சேர்ந்த Sangam India, 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 14-24 வயது வரையிலுமுள்ள 32 பேர் கொண்ட குழு இங்கு பணியாற்றுகிறது. இந்தியா முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் இணைந்துள்ளனர். இந்நிறுவனம், ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் கலைஞர்களும் தொழில்முனைவோர்களும் தங்களது திறன்களை வெளிப்படுத்தி வணிகங்களை விரிவாக்கம் செய்து பலனடைகின்றனர்.
தொடக்கம்
சுஹானி அனைவரையும் போலவே கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்க ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தார். இன்ஸ்டாகிராம் தளத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது கலைஞர்களும் உள்ளடக்கம் உருவாக்குபவர்களும் இந்தத் தளத்தின் மூலம் பலனடையலாம் என்பதை உணர்ந்து உற்சாகமானார்.
“வீட்டில் முடங்கியிருந்த சமயத்தில் ஏதேனும் ஒரு நடவடிக்கையில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என நினைத்தேன். எனக்கு சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவதிலும் கலை நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் அதிகமிருந்து வந்தது. இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் ஏதேனும் செய்யலாம் என யோசித்தேன். அப்போதுதான் மக்கள் தங்களது படைப்பாற்றல் திறனையும் கலைத்திறனையும் வெளிப்படுத்த உதவும் தளம் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தேன்,” என்கிறார்.
ஆரம்பத்தில் Sangam சமூக வலைதள பக்கமாக இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்டது. இதில் சுஹானியும் அவரது நண்பர்களும் கலை சார்ந்த வீடியோக்களை பதிவிட்டனர். குறிப்பாக கலைஞர்கள் தங்களது அனுபவங்களைக் கதைகளாக பகிர்ந்துகொண்டார்கள்.
சுஹானி ஆரம்பத்தில் தனியாக இதில் ஈடுபட்டிருந்தார். இரண்டு மாதங்களில் மூன்று பேர் கொண்ட குழுவாக செயல்பட்டனர். படிப்படியாக இந்தப் பிரிவில் ஆர்வமும் சுஹானியின் நோக்கத்தில் நம்பிக்கையும் கொண்ட பலர் இணைந்துகொண்டனர்.
”நாங்கள் பதிவிடத் தொடங்கியதும் பலர் தங்களது கலை வடிவம் குறித்து பகிர்ந்துகொள்ள எங்களைத் தொடர்பு கொண்டனர். அப்போது சோதனை கட்டத்திலேயே இருந்தோம். அதனால் பலரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்களது கலைத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பளித்தோம்,” என்கிறார் Ashoka Young Changemakers உறுப்பினரான சுஹானி.
விரிவாக்கம்
2020ம் ஆண்டு இறுதியில் இக்குழுவினர் நேரலை நிகழ்ச்சி (open mic space), இசை விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கினார்கள். டிஜிட்டல் நிகழ்வுகள் ஜூம், கூகுள் மீட், இன்ஸ்டாகிராம் லைவ் போன்றவற்றின் மூலம் நடத்தப்பட்டன.
“இத்தனை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் Sangam முயற்சியை எப்படி வளர்ச்சியடையச் செய்வது, குழுவின் செயல்பாடுகள், கூட்டு முயற்சி, பணம் ஈட்டும் நடவடிக்கை போன்றவற்றில் தெளிவாக இருக்கிறேன். இந்தப் பிரிவில் பணம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் இல்லாததால், இந்தியாவில் இன்றளவும் கலை என்பது ஆடம்பர கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. இந்த கண்ணோட்டத்தை மாற்றி கலைஞர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்க வழிவகுக்கவேண்டும் என்று விரும்பினேன்,” என சுஹானி விவரித்தார்.
இன்ஸ்டாகிராம் மூலம் கவிஞர்கள், இசைக் கலைஞர்கள், பாடகர்கள் போன்றோருடன் இணைய வாய்ப்பு கிடைத்துள்ளது.
“இன்ஸ்டாகிராமில் மட்டும் எங்களுக்கு 2,800 ஃபாலோயர்கள் இருக்கின்றனர். ஆனால், எங்கள் அக்கவுண்ட் 18,000 முதல் 40,000 பேர் வரை சென்றடைந்திருக்கிறது,” என்கிறார்.
கலைஞர்களுக்கு வருமானம் கிடைக்க உதவுவதுடன் Sangam இளம் திறமைசாலிகளுக்கு இலவச பயிற்சிகளையும் பயிற்சி பட்டறைகளையும் வழங்குகிறது. டிசைன் மாணவியான சோஹா ஷிண்டே Sangam மூலம் பலனடைந்துள்ளார். அவர் கூறும்போது,
”நான் வளர்ந்த சமூகத்தில் கலை என்கிற வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. என் பெற்றோர் என் முடிவுகளுக்கு ஆதரித்தார்கள், இருப்பினும் கலை சம்பந்தப்பட்ட துறையை கேரியராக தேர்வு செய்வது குறித்து நான் யோசித்ததில்லை. Sangam எனக்கு ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்கியது. கலையில் எனக்கிருக்கும் ஆர்வத்தையும் திறமையையும் கொண்டு டிசைனர் ஆக காத்திருக்கிறேன்,” என்கிறார்.
Sangam தொடங்க சுஹானியின் அப்பா ஆரம்பகட்ட முதலீட்டை வழங்கியிருக்கிறார். ஒரு நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் லாபத்தை மீண்டும் முதலீடு செய்து வளர்ச்சியடைந்து வருகிறது.
முதல் ஆன்லைன் நிகழ்ச்சியை சுஹானி நினைவுகூர்ந்தபோது,
“2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் நாங்கள் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் கலை விழா நடத்த முடிவு செய்தோம். பல கலைஞர்கள் எங்களுடன் இணைய ஆர்வம் காட்டினார்கள். கலை மூலம் எப்படி வருமானம் ஈட்டமுடியும் என்கிற அனுபவத்தை அவர்களுக்கு காட்ட விரும்பினோம். நான்கு நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில் இந்தத் துறைசார்ந்த பல்வேறு பேச்சாளர்கள் பங்கேற்றனர்,” என்றார்.
இன்று Sangam India ஆஃப்லைன் நிகழ்வுகளை முக்கியமாக புனே, மும்பை ஆகிய பகுதிகளில் நடத்துகிறது. நாட்டின் மற்ற பகுதிகளில் விரிவடைய திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், இந்த முயற்சி அத்தனை எளிதாக இந்த இடத்தை வந்தடையவில்லை. அவர் இளம் வயதினர் என்பதால் படிப்பில் செலுத்துமாறும் Sangam முயற்சியைக் கைவிடுமாறும் பலர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சுஹானி தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
“சந்தையில் இருக்கும் இடைவெளியை நிரப்பி அனைத்து வகையான கலை வடிவங்களையும் ஊக்குவிக்க முயற்சி செய்கிறோம். எந்த ஒரு ஸ்டார்ட் அப்’பையும் தளத்தையும் எங்கள் போட்டியாளராக நாங்கள் கருதவில்லை. ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பாகவே கருதுகிறோம்,” என்கிறார் சுஹானி.
தற்போது Sangam நடத்தியபடியே சுஹானி புனேவில் இருக்கும் கோகலே இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் பிஎஸ்சி பொருளாதாரம் படித்து வருகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா
கிராமத்து மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி எட்டாக்கனியா? விடாமுயற்சியுடன் வென்ற ஆசிரியையின் கதை!