கிராமத்து மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி எட்டாக்கனியா? விடாமுயற்சியுடன் வென்ற ஆசிரியையின் கதை!
இந்த வாரம் சர்வைவர் தொடரில், புஷ்பா பன்வார் என்ற பள்ளி ஆசிரியையின் கதையை நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம், கொரோனா லாக்டவுன் காலத்தில் தனது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க புதிய வழியை கண்டுபிடித்து வெற்றி கண்டுள்ளார்.
இந்த வாரம் சர்வைவர் தொடரில், புஷ்பா பன்வார் என்ற பள்ளி ஆசிரியையின் கதையை நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். கொரோனா லாக்டவுன் காலத்தில் தனது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க புதிய வழியை கண்டுபிடித்து வெற்றி கண்டுள்ளார்.
என் பெயர் புஷ்பா பன்வார், எனக்கு 40 வயதாகிறது. நான் ஹிம்மோத்தனில் சமூக தன்னார்வலர் மற்றும் பாரா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். இது உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக், ஹிம்மோத்தான் சந்திரபுரி கிளஸ்டரில் உள்ள பௌஷால் கிராமத்தில் உள்ள டாடா டிரஸ்ட்டின் முயற்சியாகும்.
நான் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியை செய்து வருகிறேன். கோவிட் லாக்டவுனின் போது ஹிம்மோத்தன் வழங்கிய இந்த வாய்ப்பு எனக்கு பல வழிகளில் பயனுள்ளதாக அமைந்தது.
எனது பள்ளி கேதார்நாத் யாத்திரை பாதையில் உள்ளது, அங்கு பெரும்பாலும் ஆண்கள் வேலைக்குச் செல்பவர்களாகவும், பெண்கள் இல்லத்தரசிகளாகவும் இருந்து வருகின்றனர். கொரோனா லாக்டவுன் காலத்தில் இங்குள்ள குழந்தைகளுக்கள் கல்வி கற்கும் வாய்ப்பை முற்றிலும் இழந்தனர்.
“இந்த காலகட்டத்தில், பௌஷால் கிராமத்தில் சமுதாய வகுப்புகளை நடத்துவது தொடர்பாக ஹிம்மோத்தன் அமைப்பில் இருந்து என்னை அணுகினார். எனது கிராமத்தில் ஆன்லைன் வசதிகள் ஏதும் இல்லாததால் ஆரம்ப நாட்கள் மிகவும் சவாலானதாக இருந்தது. கொரோனா காலக்கட்டத்தில் வெளியே செல்ல முடியாது என்பதால், கிராமத்திற்கு நேரில் சென்று, சமூக இடைவெளியுடன் வகுப்புகளை நடத்துவது என்பதும் மிகப்பெரிய சவாலாக இருந்தது.”
இருப்பினும், ஹிம்மோத்தன் அமைப்பின் ஆதரவுடன், நாங்கள் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான ஆன்லைன் கற்றல் தளத்தை நிறுவினோம். மடிக்கணினிகள், ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள சிலரது செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்து தருவது போன்ற செயல்கள் மூலமாக ஹிம்மோத்தன் குழு எங்களுக்கு உதவியது.
ஹிம்மோத்தனைச் சேர்ந்த நூலக வசதியாளர்களான சஞ்சய் சிங் மற்றும் ரன்வீர் கதை ஆகியோரின் உதவியுடன் கிராமத்தில் ஒரு இடத்தில் புத்தகம் வாசிப்பதற்கான இடத்தை அமைக்க உதவினர். இது பெளஷால் கிராம குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அருகேயுள்ள பல்வேறு கிராமக் குழந்தைகளும் இங்கு வந்து படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கான பல்வேறு புத்தக அடிப்படையிலான செயல்பாடுகளை நாங்கள் ஏற்பாடு செய்தோம்.
நவம்பர் 2020க்குப் பிறகு, கிராமங்களில் ‘வாசிப்பு மேளா’ மற்றும் சமூக நூலகம் போன்ற சில புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டன. அரசின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை உத்தரவு காரணமாக சமுதாய நூலகம் பள்ளி வளாகத்தில் தொடங்காமல் கிராமத்தில் தொடங்கப்பட்டது. எனவே, இந்த நூலகத்தின் மூலமாகவும், குழந்தைகளின் உதவியுடனும், பொதுவெளியில் செயல்பட முடிவெடுத்தோம்.
பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், சமுதாய நூலகத்தை பள்ளி வளாகத்திற்கு மாற்றினோம். நாங்கள் கிராமத்தில் ஓய்வில்லாமல் வேலை செய்வதைப் பார்த்து, எஸ்எம்சி (பள்ளி மேலாண்மைக் குழு) எங்களுக்கு உதவ முன் வந்தது. இப்போது, ஒவ்வொரு மாதமும் நடைபெறும் SMC கூட்டத்தில், பெற்றோர்கள் மற்றும் SMC உறுப்பினர்களும் சமூக நூலகத்தில் நாங்கள் அமைந்துள்ள ரீடிங் கார்னரில் அமர்ந்து புத்தகங்களைப் படிக்கிறார்கள்.
இதன் மூலம் கொரோனா தொற்றுநோய் பரவலால் குறைந்தபட்சம் ஒரு நல்ல விஷயம் அரங்கேறியுள்ளதாக நான் கருதுகிறேன். இதனை சாத்தியமாக்கிய அரசுப் பள்ளிகள் மற்றும் ஹிம்மோத்தன் போன்ற தன்னார்வலர் அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
முழு நேரமும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்துவதில் சிரமப்படும் சமயத்தில், பள்ளிகள் மற்றும் ஹிம்மோத்தன் போன்ற நிறுவனங்கள் சமூகத்தில் எவ்வாறு மிகவும் இன்றியமையாத கவனிப்புப் பாத்திரத்தை வகிக்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆசிரியர்களுக்கு பெற்றோர்களின் பாராட்டும் நன்றியும், மாணவர்களின் நல்வாழ்வில் அவர்கள் ஆற்றும் விலைமதிப்பற்ற பங்கும் உயர்ந்துள்ளன.
தமிழில் - கனிமொழி