Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்கிறதா மத்திய அரசு?

2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடரில், 63 ஆண்டுகள் பழமையான வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய நேரடி வரி சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்கிறதா மத்திய அரசு?

Monday January 20, 2025 , 3 min Read

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் உரையுடன் வருகிற 31 ஆம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத பல புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதில் முக்கியமானதாக, 63 ஆண்டுகள் பழமையான வருமான வரிச்சட்டத்தை மாற்றுவதற்கான புதிய மசோதாவும் ஒன்றாக இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Income Tax

புதிய வருமான வரிச் சட்டம்

63 ஆண்டுகள் பழமையான வருமான வரிச்சட்டத்தை தான் நாம் இதுவரை பின்பற்றி வந்தோம். இந்த வருமான வரிச் சட்டத்தை மாற்றுவதற்கான புதிய சட்ட விதிகள் குறித்து நிபுணர்கள் குழு தீவிர ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நிதி அமைச்சகம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கடந்த 8 வாரங்களாக தீவிர ஆலோசனை செய்து புதிய விதிகளை உருவாக்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரி செலுத்தக்கூடிய சாமானியர்கள் சட்ட விதிகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் புதிய விதிகளை அமைக்க வேண்டும் என குழுவிடம் மத்திய அரசு வலியுறுத்தியதாகவும், அதன் அடிப்படையில், வரி செலுத்துவோர் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில், புதிய நேரடி வரிச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ள விதிகளை எளிதாக்குவது, தேவையில்லாதவற்றை நீக்குவது மற்றும் பொது மக்களுக்கு எளிய வரிமுறையை அறிமுகப்படுத்துவதை நோக்கமாக இந்த புதிய விதிகள் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

எப்போது அறிமுகம்?

PTI தகவலின்படி, சட்ட அமைச்சகத்தின் மறுஆய்வின் இறுதி கட்ட வரைவுச் சட்டத்தை நெருங்கி வருவதாகவும், ஜனவரி 31 முதல் ஏப்ரல் 4 வரை திட்டமிடப்பட்டுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் பிற்பகுதியில் சமர்ப்பிக்கப்படும், என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், பார்த்தால்,

இந்த புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி அல்லது 2-வது பாதியில் அறிமுகப்படுத்தப்படலாம், எனத் தெரிகிறது.

ஆனால், PTI அறிக்கையின்படி, 63 ஆண்டுகால வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டுமா என்பதை சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் ஒரு குழு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. பொதுமக்களின் கருத்துக்களுக்காக வரைவுச் சட்டத்தை வெளியிடுவதற்கு அரசாங்கம் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த நிலையில், சிக்கலான வரிச் சட்டங்கள் மீதான விமர்சனங்களுக்கு மத்தியில் இப்போது மிகவும் உறுதியான அணுகுமுறையை எடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மசோதா முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, இறுதி செய்யப்படுவதற்கு முன், வரி செலுத்துவோர் மற்றும் நிபுணர்களின் உள்ளீட்டின் அடிப்படையில் மாற்றங்களை அரசு ஆலோசிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அரசு தரப்பில் இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

22 சிறப்பு துணைக் குழுக்கள்

கடந்தாண்டு தனது பட்ஜெட் உரையின் போது, தற்போதைய வரி செலுத்தும் சிக்கல்களை தீர்க்க ஆறு மாதங்களுக்குள் விரிவான மறுமதிப்பீடு செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, ஐடி சட்டம், 1961ன் விரிவான மறுஆய்வுக்கு திட்டமிட்ட சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, மறுஆய்வு செயல்முறையை மேற்பார்வையிட CBDT ஒரு உள் குழுவை அமைத்தார். அந்தக் குழு, இந்த சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது சர்ச்சைகள், வழக்குகள் ஆகியவற்றைக் குறைக்கவும், வரி செலுத்துவோருக்கு சரியான வரி உறுதியை வழங்கவும் உதவும். கூடுதலாக, சட்டத்தின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய 22 சிறப்பு துணைக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.

6,500 பரிந்துரைகள்

இந்த புதிய மசோதா தொடர்பாக நான்கு முக்கிய பகுதிகளில் பொதுமக்களின் கருத்து மற்றும் ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளன. அதில், மொழியை எளிமையாக்குதல், வழக்கைக் குறைத்தல், இணக்கத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தேவையற்ற/காலாவதியான விதிகளைக் கண்டறிதல் மற்றும் இன்றுவரை, வருமான வரித்துறை இந்தச் சட்ட மறுஆய்வு குறித்து பங்குதாரர்களிடமிருந்து 6,500 பரிந்துரைகளைப் பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வருமான வரிச் சட்டத்தில் உள்ள பல பிரிவுகள், பல ஆண்டுகளாக நீக்கப்படாமல் உள்ளன. அவை தேவையற்றவை என்பதால் இம்முறை விலக்கப்படுகின்றன. மேலும், இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், சட்டத்தை எளிமையாக்குவதும், தெளிவாகவும் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்து, அதன் அளவை ஏறக்குறைய 60% வரை குறைக்கப்பதே என தகவல்கள் வெளியாகி உள்ளன.

income tax

முதன்முறையல்ல...

புதிய வருமான வரிச் சட்டத்தை கொண்டுவரும் முயற்சி இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு, 2010, 2017, 2024-ம் ஆண்டுகளிலும் இந்த முயற்சி நடந்துள்ளது.

2010-ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் அரசு புதிய நேரடி வரி மசோதாவை அறிமுகப்படுத்தியது. ஆனால், அதில் இருந்த சில குளறுபடிகளால் நிறைவேற்றப்படவில்லை. 2017-ம் ஆண்டு, மோடி அரசு, இது சம்பந்தமான குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு தங்களது அறிக்கையை நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைந்திருந்தது. அதன் பின், இதுக்குறித்து வேறு எந்த நகர்வும் இல்லை.

2024-ம் ஆண்டு பட்ஜெட்டின் போது, வருமான வரி சட்டத்தை எளிமைப்படுத்துவது தொடர்பாக அறிவித்திருந்தார், நிர்மலா சீதாராமன். மேலும், குழு ஒன்றையும் அமைத்தார். அதன் தொடர்ச்சியாகத்தான், இப்போது கடைபிடிக்கப்படும் மசோதாவில் மாற்றம் அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வருமான வரிச் சட்டத்தில் இந்த முறையாவது மாற்றம் வருமா? அல்லது 2010, 2017 மற்றும் 2024ம் ஆண்டுகளைப் போல், இந்த 2025ம் ஆண்டு பட்ஜெட்டும் கடந்து போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.