19 வயதில் ‘புல்லட் மெக்கானிக்’ - அசர வைக்கும் கேரள கல்லூரி மாணவி!
19 வயதில் கேரளாவின் ‘இளம் பெண் புல்லட் மெக்கானிக்’ என்ற பெருமையை பெற்றுள்ளார் கல்லூரி மாணவியான தியா ஜோசப்.
என்னதான் விமானம் ஓட்டும் அளவிற்கு பெண்கள் முன்னேறினாலும், இப்போதும் சாலையில் யாராவது பெண்கள், ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஓட்டும் பைக்குகளை ஓட்டிச் செல்வதைப் பார்த்தால், அனைவருக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
அதிலும், புல்லட் என்றால் கேட்கவே வேண்டாம். அதனாலேயே சினிமாவில் ஒரு பெண் தைரியமானவள் எனக் காட்டுவதற்கு பெரும்பாலும் அவர் ஒரு பைக்கை கெத்தாக ஓட்டி வருவதாக ஒரு காட்சியை மறக்காமல் வைத்து விடுகிறார்கள்.
சரி, புல்லட் ஓட்டுவதற்கே இப்படி என்றால், அந்த புல்லட்டை அக்குவேறு ஆணிவேறாக கழட்டி, ரிப்பேர் பார்க்கும் அளவிற்கு ஒரு பெண் மெக்கானிக்காக இருக்கிறார், அதுவும் 19 வயது இளம்பெண் என்றால் கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?
ஆம், அந்த இளம்பெண்ணின் பெயர் தியா ஜோசப். கேரளாவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
பைக்கைப் போலவே ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் விரும்பி எடுக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்து, கல்லூரியில் தனது வகுப்பில் சக மாணவர்களுக்கு இடையில் ஒரே ஒரு மாணவியாக தனித்துத் தெரிகிறார் தியா. இந்த இளம் வயதில் கை தேர்ந்த புல்லட் மெக்கானிக்காக வலம் வரும் இவர், கேரளாவின் 'இளம் பெண் புல்லட் மெக்கானிக்' என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
“என் அப்பா ஜோசப் புல்லட் மெக்கானிக்காக உள்ளார். கோட்டயத்தில் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே சொந்தமாக மெக்கானிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதன்முதலில் எனக்கும் பைக்குகளை ரிப்பேர் பார்க்கும் ஆர்வம் வந்தது. என் அப்பா ஒரு கடினமான உழைப்பாளி. அவர் வேலை பார்ப்பதைப் பார்த்துதான், நாமும் ஏன் அப்பாவுக்கு உதவி செய்ய, இந்த மெக்கானிக் வேலையைக் கற்றுக் கொள்ளக் கூடாது எனத் தோன்றியது. என் ஆசையை என் அப்பாவுக்குத் தெரியப் படுத்தினேன். அவரும் மறுப்பு சொல்லாமல், எனக்கு மெக்கானிக் வேலையைக் கற்றுக் கொடுத்தார்."
முதலில் வண்டியைத் துடைப்பது மாதிரியான சின்னச் சின்ன வேலைகளைத்தான் கற்றுக் கொடுத்தார். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வேலைகளையும் நான் கற்றுக் கொண்டேன்.
ஒரு கட்டத்தில் மெக்கானிக் வேலைகள் அனைத்தும் அத்துப்படியாக, நாம் ஏன் இதையே நம் தொழிலாகத் தேர்வு செய்யக்கூடாது என முடிவு செய்தேன். அதன் தொடர்ச்சியாகத்தான் பிளஸ் டூ முடித்ததும், மெக்கானிக்கல் இன் ஜினியரிங் பாடப்பிரிவில் சேர்ந்தேன், என தான் மெக்கானிக்கான கதையை விவரிக்கிறார் தியா.
உடலளவில் பெண்கள், ஆண்களைவிட பலவீனமானவர்கள் என்ற கண்ணோட்டம் சமூகத்தில் உள்ளது. அதனாலேயே முரட்டுத்தனமான வேலைகள் ஆண்களுக்கானது என்றும், அதிக உடல் உழைப்பில்லாத டீச்சர், ஐடி போன்ற வேலைகள் பெண்களுக்கானது என்றும் பலர் கருதுகின்றனர். இந்த கண்ணோட்டத்தை உடைத்து, வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர்ந்ததாக தியா கூறுகிறார்.
“பெரும்பாலும் கல்லூரிகளில் மெக்கானிக் ஒர்க் எடுத்து என் அப்பா வேலை பார்ப்பார். அப்படி ஒரு முறை ஒரு கல்லூரிக்கு மெக்கானிக்கல் வேலைக்காகச் சென்றிருந்தபோது, நானும் உடன் சென்றிருந்தேன். அங்கு ஒரு பைக்கில் கிளச் கேபிள் போய் இருந்தது. அதை மாற்ற வேண்டும். என்னையே அந்த கிளச் கேபிள் மாற்றும் வேலையை முழுவதுமாகச் செய்யச் சொன்னார் அப்பா."
"முதலில் தயங்கினாலும், அப்பா கொடுத்த சப்போர்ட்டால் அந்த வண்டியின் கிளச் கேபிளை நானே முழுவதுமாக மாற்றினேன். அப்போது அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலர் நான் வேலை செய்வதை ஆச்சர்யமாகப் பார்த்துச் சென்றனர். ஒரு பெண் இப்படி அநாயசமாக பைக் ரிப்பேர் பார்ப்பது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. அந்த அனுபவம் எனக்கு வித்தியாசமாக இருந்தது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் அது,” என்கிறார் தியா.
முதலில் தியா இந்தத் துறையில் ஈடுபடுவதை அவர் அம்மா அவ்வளவாக விரும்பவில்லையாம். பெண்கள் எப்படி இந்தத் துறையில் நீடிக்க முடியும் என்பதுதான் அவரது பெரும் கவலையாக இருந்திருக்கிறது. இதனால் தன் மகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என அவர் பயந்திருக்கிறார்.
அதோடு, கல்லூரியிலும் மெக்கானிக்கல் பிரிவில் தியா மட்டுமே ஒரே ஒரு மாணவி என்பது தெரிந்து மேலும் அவர் கவலையாகி இருக்கிறார்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல தியாவுக்கு இந்தத் துறையில் இருந்த ஆர்வத்தைப் பார்த்த அவருக்கு தியா மீது நம்பிக்கை வந்து விட்டது. இப்போது அப்பாவைப் போலவே, தியாவின் கனவிற்கு அவரது அம்மாவும் உறுதுணையாக இருக்கிறாராம்.
வீட்டில் சப்போர்ட் கிடைத்தாலும், தியாவிற்கு கல்லூரி வாழ்க்கை அவ்வளவு சுலபமாக இருந்துவிடவில்லை. ஆண்கள் மட்டுமே பயிலும் கல்லூரியில் ஒரே ஒரு மாணவியாக மெக்கானிக்கல் பிரிவில் தியா சேர்ந்ததும், மற்ற மாணவர்கள் அவரிடம் பேசக் கூச்சப்பட்டு, விலகி விலகிச் சென்றுள்ளனர். தியாவிற்குமே அந்த தயக்கம் இருந்துள்ளது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த ஆண், பெண் என்ற பேதம் விலகி, அனைவரும் மாணவர்கள் என்றத் தெளிவு உண்டாகி, இப்போது அவர்களுமே தியாவிற்கு பெரும் சப்போர்ட்டாக உள்ளார்களாம்.
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பது போல், விளையாட்டாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த புல்லட் மெக்கானிக் வேலையில் இப்போது கை தேர்ந்த நிபுணராகி விட்டார் தியா. கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டே, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று புல்லட் வரை அவர் ரிப்பேர் செய்து விடுகிறாராம். தியாவின் கனவிற்கு சப்போர்ட் செய்வது போல், அவரது பிறந்த நாளுக்கு ’ராயல் என்பீல்டு தண்டர்பேர்ட்டை’ (Royal Enfield Thunderbird) வாங்கி பரிசளித்துள்ளனர் அவரது பெற்றோர்.
”இந்தத் துறையில் மேற்கொண்டு என்ன சாதிக்கப் போகிறேன் என்றெல்லாம் இப்போது நான் திட்டம் எதுவும் வைத்திருக்கவில்லை. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் எதிர்காலத்தில் இந்தத் துறையில் இருந்து விலகிச் சென்றுவிடக் கூடாது என்ற உறுதி மட்டும் உள்ளது. நன்றாக படித்து, இந்தத் துறையிலேயே என் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆசை, கனவு எல்லாம்..” என நம்பிக்கையுடன் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தெளிவு மிளிரப் பேசுகிறார் தியா.
‘எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண்' - தன் சிறுவயது கனவை முத்தமிழ்ச்செல்வி நினைவாக்கியது எப்படி?