‘எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண்' - தன் சிறுவயது கனவை முத்தமிழ்ச்செல்வி நினைவாக்கியது எப்படி?
எவரெஸ்ட் சிகத்திரத்திற்கும் தனக்குமிருந்த 8,849 மீட்டரை எட்டித்தொட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனை படைத்துள்ளார் முத்தமிழ்ச்செல்வி.... யார் இவர்??... இந்த சாதனை படைக்க அவர் கடந்து வந்த சோதனைகள் என்னவென விரிவாக பார்க்கலாம்....
எவரெஸ்ட் சிகத்திரத்திற்கும் தனக்குமிருந்த 8,849 மீட்டரை எட்டித்தொட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனை படைத்துள்ளார் முத்தமிழ்ச்செல்வி....
யார் இவர்??... இந்த சாதனை படைக்க அவர் கடந்து வந்த சோதனைகள் என்னவென விரிவாகப் பார்க்கலாம்....
யார் இந்த தமிழ்ச்செல்வி?
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. சிறு வயது முதலே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவரான இவருக்கு, உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தை அடைய வேண்டும் என்ற கனவு இருந்து வந்துள்ளது. ஆனால், முத்தமிழ்ச்செல்வியின் பெற்றோர் இதற்கு ஒருபோதும் அனுமதித்தது கிடையாது.
"எனது பெற்றோர் பள்ளிக்குச் சென்றதில்லை. அவர்களால் விளையாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, தடகளத்திலும், மலையேற்றத்திலும் எனக்கிருந்த ஆர்வத்தை தொடர முடியவில்லை,” என்கிறார்.
காலங்கள் உருண்டோடின, முத்தமிழ்ச்செல்வி படித்து முடித்து சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுநராக பணிக்குச் சேர்ந்தார். திருமணமாகி முத்தமிழ்ச்செல்விக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தாகிவிட்டது. இருப்பினும், அவருக்கு எவரெஸ்ட் சிகரத்தை எட்டித்தொட வேண்டும் என்ற கனவு மட்டும் குறையாவே இல்லை.
மீண்டெழுந்த எவரெஸ்ட் கனவு:
எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடிவெடுத்த முத்தமிழ்ச்செல்வி, ஏசியன் ட்ரெக்கிங் என்ற தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனம் முத்தமிழ்ச்செல்விக்கு இரண்டு ஆப்ஷன்களைக் கொடுத்துள்ளது. அதாவது, ஒன்று மலையேற்றம் தொடர்பான படிப்பை படித்து முடிக்க வேண்டும் அல்லது 5,500 மீட்டர் சிகரத்தில் ஏற வேண்டும். அப்போது தான் அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி கிடைக்கும்.
இதில் இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்த முத்தமிழ்ச்செல்வி, லடாக்கில் உள்ள காங் யாட்சேவை 6,496 மீட்டர் சிகரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தகுதி பெற்றார். உடலளவில் மலையேற்றத்திற்கு தயாரான முத்தமிழ்ச்செல்வி முன்பு, அடுத்ததாக எவரெஸ்ட் சிகரத்தைப் போலவே மிகப்பெரிய பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
நிதி பற்றாக்குறை:
முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து வரலாற்று சாதனை படைக்க 45 லட்சம் ரூபாய் செலவாகும் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் 20 லட்சம் ரூபாய் அரும்பாடுபட்டு திரட்டியுள்ளார்.
மீதமுள்ள 25 லட்சம் ரூபாயை திரட்ட முத்தமிழ்ச்செல்வி எவ்வளவோ முயன்றும், அவர் அனைத்து முயற்சிகளும் தோல்வியைத் தழுவியது. பயணத்திற்கு சரியாக ஒருவாரம் மட்டுமே இருந்த நிலையில், முத்தமிழ்ச்செல்வியின் இந்த சாதனை பயணம் குறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு சென்றது.
உடனடியாக மாநில விளையாட்டுத் துறை சார்பில், 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதில் 10 லட்சம் அரசு நிதியிலிருந்தும், 15 லட்சம் ஸ்பான்சர்களிடமிருந்தும் வழங்கப்பட்டது.
"நம் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் கிரெடிட் கொடுக்க வேண்டும். நான் நேபாளம் செல்ல ஐந்து நாட்கள் இருந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்தேன். அவர் அவசரம் புரிந்து ஸ்பான்சர்களை ஏற்பாடு செய்தார்,” என்கிறார்.
எவரெஸ்ட் பயணம்:
கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி எவரெஸ்ட் சிகரம் நோக்கிய தனது பயணத்தை முத்தமிழ்ச்செல்வி தொடங்கினார். சுமார் 400 பேர் கொண்ட குழுவில் அவரும் ஒருவர். தனது பயணத்தின் 51வது நாளான்று எவரெஸ்ட் சிகரத்தின் 8,849 மீட்டர் உயரத்தை எட்டித்தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனை படைத்துள்ளார்.
தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கனவை நனவாக்கிய முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,
“#Everest உச்சியைத் தொட்டுத் திரும்பியுள்ள சாதனைப் பெண்மணி திருமிகு. முத்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு வாழ்த்துகள்! எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே 'முதல்' என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடைந்திடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, புகழின் உச்சிக்குச் செல்ல, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஜோகில்பட்டியைச் சேர்ந்த திருமிகு.முத்தமிழ்ச்செல்வி அவர்கள்!
எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை நோக்கி 7200 மீட்டர் உயரத்தைக் கடந்து பயணிக்கும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தொலைபேசி வாயிலாகப் பகிர்ந்தேன். எட்டிவிடும் தூரத்தில் இருக்கும் சாதனை அவருக்கு வசப்படட்டும்! இன்னும் பல பெண்கள் சாதனை படைத்திட அவர் ஊக்கமாக விளங்கட்டும்! என பதிவிட்டுள்ளார்.
அதன்பின், மே 26ம் தேதி முத்தமிழ்ச்செல்வி, வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது குறித்து மீண்டும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டார். அதில்,
Everest உச்சியைத் தொட்டுத் திரும்பியுள்ள சாதனைப் பெண்மணி திருமிகு. முத்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு வாழ்த்துகள்!
எந்த ஒரு சாதனைக்கும் யாராவது முதுகெலும்பாக இருக்க வேண்டும். எனது இந்த பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு எனது இந்த சாதனையை சமர்ப்பிக்கிறேன் எனக்கூறியுள்ளார்.
'நான் உயிருடன் உள்ள வரை விளையாடி பதக்கங்கள் வெல்வேன்’ - 95 வயது ‘தடகள பாட்டி’