நொய்யலை மீட்போம்: 'சிறுதுளி’ அமைப்பின் நிறுவனர் வனிதா மோஹன்
நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்காவிடினும், இயற்கையிலிருந்து மாறுபட்ட வாழ்வைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. சுட்டெரிக்கும் வெயில், உறைய வைக்கும் குளிர் போன்றவை பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் மோசமான விளைவுகள் தான் என உணர்ந்தாலுமே, அதைப் பற்றி துயருர மட்டுமே நம்மால் முடியும்! ஆனால், வெகு சிலர் மட்டுமே களத்தில் இறங்கி தீர்வு காண முயற்சிப்பர். அப்படித் தொடங்கப்பட்ட லாப நோக்கமற்ற அமைப்பு தான் ‘சிறுதுளி’.
கோவையின் பாரம்பரிய நீர் மேலாண்மை முறையைக் கொண்டே, அதன் நீர்நிலைகளை மீட்டெடுப்பது; நிலத்தடி நீரின் அளவை உயர்த்துவது; ஏரிகளையும் குளங்களையும் உயிர்பிப்பது - என செயல் படும் ‘சிறு துளியின்’ நிறுவனர், வனிதா மோஹனின் ஈடுபாடு பாராட்டுதற்குரியது. சமீபத்தில், அகரம் ஃபவுண்டேஷன், ‘தி இந்து’ மற்றும் புதிய தலைமுறை இணைந்து நடத்திய, ‘யாதும் ஊரே’ திட்டத்தின் தொடக்க விழாவாக நடந்த ‘சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு’ கருத்தரங்கில், ‘நொய்யல் ஆறு மீட்பு, நீர் மேலாண்மை’ குறித்து பேசியிருக்கிறார் வனிதா மோஹன்.
நீர் மேலாண்மை குறித்தும், மழை நீர் சேமிப்புக் குறித்தும் தமிழ் யுவர்ஸ்டோரி வனிதா மோஹனோடு கலந்துரையாடியதன் சிறப்புத் தொகுப்பு...
சமீபத்திய சென்னை மழையின் போது, பல டி.எம்.சி நீர் கடலில் கலந்து வீணானது என வந்த செய்திகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மிகச் சுலபமாக அந்த நீரை அறுவடை செய்து வைத்திருக்கலாம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிவரம் பகுதிகளில் ஏரிகள் அந்தக் காலத்து பல்லவ மன்னர்கள் இப்படி வரும் வெள்ளத்தைத் தடுக்க உருவாக்கியது தான். அந்த ஏரிகளில் இருந்த நீரின் காரணமாக நிலத்தடி நீர் நல்ல அளவில் இருந்தது. மக்களும், செழிப்பாய் வாழ்ந்தார்கள். ஆனால், இன்று எல்லா வேளையும் சென்னையில் தண்ணீர் பஞ்சம். பக்கத்து மாநிலங்களில் இருந்து, மாவட்டங்களில் இருந்து லாரிகளில் தண்ணிர் கொண்டு வந்து இறக்குகிறார்கள். இது ‘கையில் நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணெய் தேடி அலைவது போலிருக்கிறது. இப்போது, இவ்வளவு பெய்த மழையை தேக்கி வைத்திருந்தால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. மழை வரும் போது செயல்படாமல் அது இல்லாமல் போனபிறகு வருந்துவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது?
ஒரு பக்கம் தண்ணீர் பஞ்சம், மறுபக்கம் வீடுகளுக்குள் வரும் மழை வெள்ளம். இதற்கெல்லாம் யார் காரணம் என நினைக்கிறீர்கள்?
நாம் தான். அரசை குறை சொல்லவே முடியாது. என் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு ஏரி இருக்கிறது. அந்த ஏரியில் ஒருக் கட்டிடம் கட்டும் போது, அதை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அந்த ஏரி எதற்காக உருவாகியிருக்கிறது என்பது எனக்கு தெரியும், அந்த ஏரியில் தண்ணீர் இருந்தால் தான் என் போர் வெல்லில் தண்ணீர் வரும் என்றும் எனக்குத் தெரியும். ஆனால், நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். வேளச்சேரியில் முழுதும் கட்டிடங்கள் வந்த போது, நாம் பார்த்துக் கொண்டும் பேசாமல் இருந்தோம். பிறகு, வெள்ளம் வந்ததென்றால், அது எங்கே போகும்? அரசு தான் அனுமதி கொடுத்தார்கள் என்றால், அரசு செய்யும் தவறை நாம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா? முதல் முறையாக தவறு நடக்கும் போது அதை நாம் கண்டித்திருந்தால், இவ்வளவு ஆக்கிரமிப்புகள் வந்திருக்காது.
கோயம்புத்தூரில், பல நீர்நிலைகளை மீட்கும் பணியில் கடந்த பதின்மூன்று வருடங்களாய் ஈடுபடுகிறோம். அதற்கு முன்னரும் ஆக்கிரமிப்புகள் வந்துக் கொண்டிருந்தன. ஆனால், எப்போது நாங்கள் இந்தப் பணியைத் தொடங்கினோமோ, அதற்குப் பிறகு ஒரு ஆக்கிரமிப்பு கூட வரவில்லை. ஆக்கிரமிப்பு இருந்ததையும் கூட நாங்கள் அரசிடம் பேசி, சமரசம் செய்து, மாற்று இடம் ஏற்பாடு செய்துக் கொடுத்து, அவர்களை அப்புறப்படுத்தியிருக்கோம். அதனால், இந்த அளவு கொள்ளளவு உருவாகியிருக்கிறது.
அந்த காலத்தில் ஏரி இருந்தது, தேவையான அளவு தண்ணீர் இருந்தது. வெள்ளம் வந்த போது ஏரிகளில் சென்று தண்ணீர் நிறைந்தது. மக்கள் தொகையும் பெரிதாய் இல்லை. இன்று, மக்கள் தொகை பத்து மடங்கு இருபது மடங்கு அதிகமாய் இருக்கிறது. தண்ணீர் தேவையும் அதிகம். இப்படியிருக்கையில், நாம் இருக்கும் ஏரிகளையும் மூடினால், எங்கிருந்து தண்ணீர் வரும்? தண்ணீரை எங்கே தேக்கி வைப்பது? அரசு மட்டுமே அல்ல, நாம் அனைவருமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
சிறுதுளி அமைப்பின் சாதனை என எதை சொல்வீர்கள்?
வறட்சியும், தண்ணீர் பஞ்சமும் நிலவும் ஒரு பகுதியில், ஆயிரம் அடிக்கு கீழும் தண்ணீர் ஊறாத ஒரு பகுதியில், குடிநீருக்கு என்ன செய்வது என மக்கள் கவலைப் படும் ஒரு பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியது தான் சிறுதுளி அமைப்பின் சாதனை எனச் சொல்வேன்.
இன்று, மக்கள் நீரை எப்படி பரமாரிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
‘காசை தண்ணி போல செலவு செய்யக் கூடாது’ எனச் சொல்வார்கள். இன்று, தண்ணீரைக் காசு போல செலவு செய்ய வேண்டும். ஒரு சின்ன குண்டுமணி தங்கம் நம்மிடம் இருந்தால் அதை எப்படி பாதுகாப்போமோ, அதே போலத் தான் தண்ணீரையும் செலவு செய்ய வேண்டும்.
கோவையில் மட்டும் தான் இயங்குகிறீர்களா?
ஆமா, எங்க ஊரு நாங்க பண்றோம் (சிரிக்கிறார்).
ஆனால் நாங்கள் பகிர்ந்துக் கொள்ளத் தயாராயிருக்கிறோம். நீங்கள் சென்னையில் இருந்தால், நீங்கள் தான் சென்னைக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள், எங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வோம். பதிமூன்று வருடங்களில் நாங்கள் என்னவெல்லாம் செய்தோம், எங்களுக்குச் நேர்ந்த இடையூறுகள், அதை எல்லாம் எப்படி சமாளித்து வந்தோம் என எல்லாவற்றையும் சொல்லித் தர தயாராக இருக்கிறோம். ஆனால், பொறுப்பேற்று, திட்டமிட்டு அதை செயல் படுத்த, ஒவ்வொரு நகரை சேர்ந்த குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
நாங்கள் ஒப்பந்தம் போட்டு வேலை செய்வதில்லை. சமூக பொறுப்பு என்ற ஒரு காரணத்தினால் மட்டும் தான் இதை செய்கிறோம். எங்கள் ஊரை, எங்கள் நீர்நிலைகளை காக்க எங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. அதனால் தான் எங்களுக்கு இருக்கும் வேலைகளில் இருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டு சமூக ரீதியாக செயல்படுகிறோம். இது ஒரு தொழிலோ, வேலையோ கிடையாது. மதுரை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என எந்த ஊராக இருந்தாலுமே, ஒரு குழு, இதே நோக்கோடு முன் வந்தால், அவர்களோடு அமர்ந்து என்னவெல்லாம் செய்ய வேண்டும் என திட்டமிட நாங்கள் தயார்.
நொய்யல் நதி மீட்பு பற்றி..
நொய்யல் நதியை மீட்டெடுக்க வேண்டும். திருப்பூர், ஈரோடு வழியாகச் சென்று காவிரியில் கலக்கிறது நொய்யல். கிட்டத்தட்ட உயிரிழந்த ஒரு நதி அது. 160 கிலோமீட்டர் நதி, அதில் முப்பத்து நான்கு ஓடைகள் இருக்கிறது. அதில் நான்கு ஓடைகள் மட்டும் தான் உயிர்த்து இருக்கிறது மற்றவை எல்லாம் வறண்டு விட்டது. அவற்றை எல்லாம் உயிர்ப்பித்து, நொய்யலை மீட்க வேண்டும். பிறகு, கோவையில் விழும் ஒவ்வொரு மழைத்துளியையும் சேமித்து வைக்க வேண்டும். இங்கே விழும் மழை நீர் நிச்சயம் குளத்திற்கு போக வாய்ப்பில்லை, ஏனெனில் எல்லாம் முற்றிலும் கட்டிடங்கள் ஆகிவிட்டது. அதனால், தண்ணீர் நிலத்திற்கு சென்று சேர வாய்ப்பில்லை. இவை இரண்டு தான் எங்களுடைய சமீபத்திய லட்சியம்.
நம் ஒவ்வொருவரின் கடமைக்கும் பொறுப்பேற்று இயற்கையை கொண்டாடுகிறது,‘சிறுதுளி’ அமைப்பு. ‘சாத்தியமே இல்லை’ என பலர் நம்பிக்கை இழக்கும் இலக்குகளை நோக்கி பயணிக்கும் ‘சிறுதுளி’ அமைப்பு மற்றும் அதன் நிறுவனர் வனிதா மோஹனின் பணிகள் தொடர வாழ்த்துக்களும், தமிழ் யுவர்ஸ்டோரியின் சார்பாக மலர்கொத்தும் !
(புகைப்படங்கள் : வனிதா மோஹனின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து)