12ம் வகுப்பில் தோல்வி, ஆட்டோ ஓட்டி, பிச்சைக்காரர்களுடன் படுத்துறங்கி; யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த மனோஜ் சர்மா!
கல்வி ஒருவரை எப்படிப்பட்ட நிலையில் இருந்து எப்படிப்பட்ட நிலைக்கு முன்னேற்றும் என்பதற்கு முன்னூதாரணமாக இருக்கிறது மனோஜ் சர்மாவின் கதை...
கல்வி ஒருவரை எப்படிப்பட்ட நிலையில் இருந்து எப்படிப்பட்ட நிலைக்கு முன்னேற்றும் என்பதற்கு முன்னூதாரணமாக இருக்கிறது மனோஜ் சர்மாவின் கதை...
பொதுத்தேர்வில் தோல்வியடைவது என்பது மாணவர்களுக்கு கெட்ட கனவாக மாறிவிடுகிறது. 12ம் வகுப்பில் தோல்வியடைந்தாலும் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் போராடி ஐபிஎஸ் ஆக தேர்ச்சி பெற்ற மனோஜ் சர்மாவின் கதை உத்வேகமூட்டுவதாக அமைந்துள்ளது.
யுபிஎஸ்சி இந்தியாவின் கடினமான தேர்வாக பலரால் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் UPSC தேர்வில் லட்சக்கணக்கான இந்தியர்கள் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் முயற்சித்தாலும், அவர்களில் சில நூறு பேர் மட்டுமே வெற்றி பெற முடிகிறது. சிலர் விடாமுயற்சியுடன் போராடி இரண்டாவது அல்லது 3வது முறையில் வெற்றி பெற்றுள்ளனர்.
யார் இந்த மனோஜ் சர்மா?
ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் சர்மா, மத்திய பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தைச் சேர்ந்தவர். மனோஜ் சர்மாவிற்கு சின்ன வயதில் இருந்தே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தார். இவர் படிப்பில் படுசுட்டியாக இல்லை என்றாலும், 9 மற்றும் 10 வகுப்பு தேர்வுகளில் சுமாரான மதிப்பெண்களையாவது பெற்று தேர்ச்சியடைந்திருந்தார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தாய்மொழியான இந்தியைத் தவிர அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார். இதனால் மனோஜின் கனவுகள் மட்டுமின்றி தன்னம்பிக்கையும் சுக்கு நூறாக உடைந்தது.
எப்படியாவது மீண்டும் முயற்சித்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், தனது கலெக்டர் கனவை எட்டித்தொட வேண்டும் என மனோஜ் நினைத்தார். ஆனால், அவரது குடும்பத்தில் நிலவிய வறுமை பெரும் தடையாக அமைந்தது. இதனால் ஆட்டோ ஓட்டிக்கொண்டே படிக்க ஆரம்பித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக தெருவில் படுத்துறங்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் பிச்சைக்காரர்களுடன் கூட படுத்துறங்கியுள்ளார்.
அதன் பின்னர், டெல்லி நூலகம் ஒன்றில் உதவியாளராக மனோஜுக்கு வேலை கிடைத்துள்ளது. அங்கு தான் ஆபிரகாம் லிங்கன் முதல் முக்த்போத் வரை பல சாதனை மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிக்க நேர்ந்துள்ளது. இதனால் புது உத்வேகம் பெற்ற மனோஜ், நூலத்தில் பணியாற்றியபடியே தனது யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகியுள்ளார்.
ஒன்றல்ல, இரண்டல்ல, 4 முறை முயன்று... யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மனோஜ் சர்மா, 121வது ரேங்க் எடுத்து, 2005ம் ஆண்டு கேடரில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியானார்.
தற்போது காதல் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் மனோஜ் சர்மா, ஐஏஎஸ் என்ற லட்சியத்தை எட்டித்தொட முடியாவிட்டாலும் அதற்கு நிகரான ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.
மேலும், கலெக்டர் ஆக வேண்டும் என்றாலே அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என தவறான புரிதல் கொண்ட மாணவர்களுக்கு சிறந்த உதாரணமாக மாறியுள்ளார்.
தகவல் உதவி: டிஎன்ஏ
‘பஸ் வசதியே இல்லாத குக்கிராமத்தின் முதல் ஐஏஎஸ்’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற விவசாயி மகள்!