நன்றி சொல்ல உனக்கு... 'தேங்க்ஷிப்' உண்டு எனக்கு!
"சமூக சேவை என்பதே நன்றி பாராட்டாத பணி என்பது அனைவருக்கும் தெரியும். சமூகப் பணிகளுக்கு ஊக்கம் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம். இந்த நிலையை மாற்ற விரும்பினோம். சமூக மாற்றங்களுக்காக பணிபுரிவோர் போற்றப்பட வேண்டும் என்று விரும்பி களமிறங்கினோம்" என்கிறார் அஜய் சாகர்.
நல்லது செய்வதும், பிறரிடம் அன்பு செலுத்துவதும், அக்கறை காட்டுவதும் நிபந்தனையற்ற எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட செயல்கள்தான். அதேநேரத்தில், அவ்வாறு நன்மை செய்வோரை கொஞ்சம் ஊக்கப்படுத்தினால், அவர்கள் மென்மேலும் நன்மை செய்வதைத் தொடர்வார்கள் தானே. இதைத்தான் தேங்க்ஷிப் (Thankship) செய்கிறது.
விரும்பி அறம் செய்வோரைப் பரந்த மனதுடன் பாராட்டவும், சிலரது நற்பணிகளைப் பரிந்துரைக்கவும் வழிவகுக்கும் சமூகத் தளமாக தேங்க்ஷிப் விளங்குகிறது. நல்ல பணிகளைச் செய்து வருவோரைப் பாராட்டுவதுதான் இவர்களின் முக்கிய நோக்கம். தேங்க்ஷிப்பை சகோதரர்கள் இருவர் நிறுவினர். லலித் சாகரும் அஜய் சாகரும் தங்களது தொழில்முனைவுப்பயணத்தை டிசம்பர் 25, 2014-ல் தொடங்கினர். தற்போது பீட்டா நிலையில் மினிமம் வேல்யூ புராடக்ட் எனப்படும் எம்.வி.பி.யை மேம்படுத்தியுள்ள இவர்களது தளத்தை 150-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
"நற்பணிகளைச் செய்வோரைப் பரிந்துரைத்துப் பாராட்டும் வகையில், நன்றிகளைச் சொல்வதற்கு ஆன்லைன் டூல்களையும், சான்றிதழ்களையும் தேங்க்ஷிப் வழங்குகிறது" என்கின்றனர் இருவரும்.
ஃபேஸ்புக், லிங்கிடுஇன் தளங்களில் இல்லாத சிறப்பு
சமூக மற்றும் மனிதநேயப் பணிகளை மட்டுமே வகைப்படுத்தி உரியவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதே தேங்க்ஷிப்பின் தனித்தன்மை. ஆனால், ஃபேஸ்புக்கில் மக்களின் அன்றாட வாழ்க்கை, சமூக சேவை எனை அனைத்தும் கலவையாக முன்வைக்கப்படுகிறது.
அதேபோல், லிங்கிடுஇன் தளத்தை எடுத்துக்கொண்டால், அது ஒருவரின் தொழில் / வேலை ரீதியிலான புரொஃபைலை முன்னிலைப்படுத்தி சில பரிந்துரைகளைச் செய்கிறது. இந்தச் சூழலில், உங்களின் நன்றி கடிதங்கள், அங்கீகாரங்கள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தையுமே ஒரே இடத்தில் வெளிக்காட்ட வகை செய்கிறது தேங்க்ஷிப். பேட்ஜ்கள், மெடல்கள், சான்றிதழ்கள் மூலம் டிஜிட்டலில் பதியப்படும் அங்கீகாரங்கள் மூலம் ஒருவர் தன் நற்பணிகளை தொடருவதும், அதைப் பின்பற்றி மற்றவர்களும் நற்பணிகளில் ஈடுபட தூண்டுகோலாய் இருப்பதுமே இதன் குறிப்பிடத்தக்க அம்சங்கள். "நீங்கள் சற்றே தளர்வாக இருக்கும் சூழலில் மட்டுமின்றி, நீங்கள் நினைத்த நேரத்தில் பதிவுகளை இட்டு, அவற்றை மீண்டும் படிப்பது, நண்பர்களுடன் பகிர்வது என உற்சாகமாக இயங்கலாம்" என்கிறார் லலித்.
தேங்க்ஷிப் தளமானது சமூக மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான புத்தம் புதிய தனித்துவ திட்டமாகவே செயல்பட்டு வருகிறது. தற்போது உள்ள சமூக வலைதளங்களில் எதுவுமே தனிப்பட்ட நபர்களின் சமூகப் பணிகளை கொண்டாடுவதற்கான பிரத்யேக தளமாக எங்களை போல் செயல்படவில்லை என்பது தெளிவு. சமூகத்தில் நற்பணிகளைச் செய்வோரை அடையாளம் கண்டு, அவர்களை உலகம் அறியச் செய்வதுடன், மிகப் பெரிய வலைப்பின்னலையும் உருவாக்கும் சக்தியாகவும் இது செயல்படத் தொடங்கியிருக்கிறது.
"தேச அளவிலும் சர்வதேச அளவிலுமான விருதுக் குழுக்களின் கவனத்தைப் பெரும் வகையில், சமூகப் பணியாளர்கள் தங்களது சேவைப் பணிகளைப் பரப்புவது என்பது எளிதானது அல்ல. பல நேரங்களில் ஊக்கமின்மை காரணமாகவும், சரியான அங்கீகாரம் இல்லாததாலும் சமூகத்துக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணமே கொல்லப்படுகிறது. இந்த நிலையை மாற்றும் வகையில், சமூகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க களம் அமைக்கும் தேங்க்ஷிப், சமூக மாற்றத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை உலகுக்குச் சொல்லிட வழிவகுக்கிறது. அதன்மூலம் அவர்களது கதைகள் பலரைச் சென்றடையும். ஒரு சிறிய நன்றிக் குறிப்பு மூலம் ஒரு நல்ல காரியத்தைப் பாராட்டுவது, அதுபோன்ற நற்செயல்களைத் தொடர்ந்து செய்திடுவதற்குத் தேவையான நேர்மறை எண்ணத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்" என்கிறார் அஜய்.
யாரெல்லாம் இலக்கு?
ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் எதிர்மறைக் கருத்துகளைக் குவித்து, யாரை வேண்டுமானாலும் குறிவைத்து நோகடிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆனால், தேங்க்ஷிப்பில் நேர்மறைக் கருத்துகளும், பரிந்துரைகளும், பாராட்டுகளும் மட்டுமே பதிவாகின்றன. எவர் ஒருவரும் நல்ல சம்பவங்களையும் நற்பணி செய்தவர்கள் பற்றியும் எழுதலாம். அதுபோன்ற பதிவுகளைப் படிக்கலாம். அத்துடன், அவை அனைத்தையும் நம் நண்பர்களுடன் பகிரலாம். எந்த ஒரு சமூக வலைதளத்தில் இருந்துகொண்டும் பயனாளிகள் நன்றிக் குறிப்புகளை எழுதலாம். தற்போது ஜி-மெயில், ட்விட்டரில் ஒருங்கிணைந்தும், ஃபேஸ்புக்கில் பின்தொடர்வதன் மூலமும் தேங்க்ஷிப் செயல்பட்டு வருகிறது. இந்தத் தளங்களைப் பயன்படுத்தி, ஒரு பயனாளிகள் மற்ற பயனாளிகளுக்காக எழுத அனுமதிக்கப்படுகிறது.
சமூகப் பணியாளர்களை ஒருவர் பின்தொடர்ந்து, அவர்களது சமீபத்திய பணிகளை சுவர் மூலம் அறியலாம். அதில், 'பேட்ஜஸ்' மூலம் பாராட்டுக் குறிப்புகளும் இடம்பெற்றிருக்கும். அந்த பேட்ஜ்கள் மூலமாக தங்களுக்குப் பிடித்தமானவர்களை உதவிக்கரம் நீட்டுபவர், தலைமைப் பண்பாளர், படைப்பாற்றல் மிக்கவர் என வகைப்படுத்திக்கொள்ளலாம்.
பல்வேறு தரப்புகளுக்கும் மிகுந்த பயன் தருவதால், தேங்க்ஷிப் மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. நல்ல காரியங்களைச் செய்து வரும் தங்கள் குடும்பத்தினரையோ அல்லது நண்பர்களையோ நன்றி பாராட்டலாம்; தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், சக நிறுவனர்கள், வர்த்தகர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் கூறலாம்; அலுவலகத்தில் சக பணியாளர்களின் கடின உழைப்பையும் போற்றிப் பாடலாம். இப்படி பலவிதமாக பயன்படுகிறது இந்தத் தளம்.
"தேங்க்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு நாட்களில் என் நண்பர்கள் சிலரது பரிந்துரைகளின் அடிப்படையில் சமூகப் பணியாளர்கள் சிலரைப் பாராட்டி பதிவுகள் இடப்பட்டது. அதில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்த அஷுதோஷ். அவர் குளிர்காலத்தில் வீடற்ற ஏழைகளுக்கு கம்பளிப் போர்வைகளை நன்கொடையாக வழங்கியது பற்றி சிலாகித்து எழுதப்பட்டது. என் நண்பர்களிடம் இருந்தும், அவரிடம் இருந்தும் தொலைபேசி அழைப்பு வந்தது. 'என்னுடைய சமூகப் பணியை எவரேனும் கண்டுகொள்ளக் கூடும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனக்கு கிடைத்த பாராட்டுகள் ஆச்சரியமூட்டின. இனி, ஆண்டுதோறும் இப்பணியைத் தொடருவேன். என்னைக் கண்டு பெருமிதமாகவும் ஊக்கமாகவும் இருப்பதாக என் நண்பர்கள் கூறியதை மறக்க முடியாது' என்று வியப்பு மேலிடச் சொன்னார் அஷுதோஷ்" என்று நினைவுகூர்கிறார் அஜய்.
புதிய பாதை
தற்போது தேங்க்ஷிப்பில் உள்ள வசதிகளுடன், மக்கள் பணப் பரிசை பகிர்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதே சாகர் சகோதரர்களின் முக்கிய இலக்காக உள்ளது. அத்துடன், இணையதளத்துக்கும், வலைப்பதிவு எழுதுவோருக்கும் பார்வையாளர்கள் நன்றி சொல்லும் வகையில் ட்விட்டர், ஃபேஸ்புக் போல இணையதளங்களுக்கான இணைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், கார்ப்பரேட்டுகள் நிர்வகிக்கக் கூடிய முழுக்க முழுக்க நிறுவனம் சார்ந்த பாராட்டு - அங்கீகாரத் திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் இவர்கள் யோசித்து வருகிறார்கள்.
"கருணை உள்ளங்களைப் பாராட்டி, சமூக மாற்றத்துக்குப் பங்கு வகிப்பதற்காக, நூறு கோடிக்கும் மேலான மக்களை வசப்படுத்த வேண்டும் என்பதே எங்களது மிகப் பெரிய கனவு. இந்தப் பயணம் எளிதாகவும் இலகுவாகவும் அமையாது என்பது எங்களுக்குத் தெரியும். எனினும், எங்கள் புதிய பாதைக்காக முழுமையாகத் தயாராகி வருகிறோம்" என்கின்றனர் இந்தச் சகோதரர்கள்.