காதுகுத்து முதல் கும்பாபிஷேகம் வரை அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்கும் ’ஹரிவரா’

ஆன்லைன் மூலம் பூஜை, புரோகிதர்கள் மற்றும் சுப நிகழ்ச்சி சேவைகள் வழங்கும் சென்னை தொழில்முனைவு நிறுவனம்!

காதுகுத்து முதல் கும்பாபிஷேகம் வரை அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்கும் ’ஹரிவரா’

Thursday November 02, 2017,

2 min Read

வெற்றி கண்ட எந்தவொரு தொழில்முனைவு நிறுவனத்தையும் அலசினால், நிகழ்கால தேவையை மையப்படுத்துவதோடு எதிர்காலத்தில் இதற்கான அவசியத்தின் புரிதலோடு தீர்வை முன்னெடுத்து செல்வதாகவே நிச்சயம் அமையப்பெற்றிருக்கும்.

ஆஸ்த்ரேலியாவில் இருந்து கொண்டு சென்னையில் வாழும் தனது பெற்றோரின் அறுபதாம் கல்யாணத்தை நேர்த்தியாக கொண்டாடிய ஜெயா முதல், வட இந்தியாவிலிருந்து சென்னையில் அண்மையில் குடியேறிய பூஜாவின் கிரஹப்ரவேசம் வரை அவரவர் சம்பிரதாயத்திற்கேற்ப வீட்டு சுப நிகழ்ச்சிகளை செவ்வனே முடித்து, 360-க்கும் மேற்பட்ட பூஜை சேவைகளையும் வழங்கி வருகிறது சென்னையைச் சேர்ந்த ஹரிவரா Harivara எனும் நிறுவனம்.

தொடக்கம்

முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்த அருண்குமார் ஆசாரமான தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். ஆதலால் இயல்பாகவே பூஜை வழிமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்கள் ஆகியவற்றில் நாட்டம் இருந்ததாக கூறுகிறார். 

"2014 ஆம் ஆண்டு வலைப்பதிவுகள் மூலம் வெவ்வேறு பூஜை முறைகளை பற்றி பகிர ஆரம்பித்தேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய பேர் சந்தேகங்கள் கேட்டதோடு பூஜைகளை செய்து தருமாறும் கேட்டனர். உள்ளடக்க தளத்திலிருந்து மின்வர்தக தளமாக, ஹரிவரா 2015 ஜூன் மாதத்தில் உருபெற்றது,"

என்று தன் தொடக்கத்தை பற்றி விவரித்தார் அருண் குமார்.

ஹரிவரா நிறுவனர் திரு. அருண் குமார்

ஹரிவரா நிறுவனர் திரு. அருண் குமார்


முழு வீச்சில் தொடங்கும் முன்னர், இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று அந்தந்த இடங்களில் பல்வேறு சமுதாயங்களின் பூஜை வழிமுறைகள், சடங்குகள் ஆகியவற்றை அறிந்து கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் எத்தனை புது குடியிருப்புகள் கட்டப்படுகின்றன, எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன போன்ற புள்ளி விவரங்களையும் சேகரித்துள்ளார். 

"மற்ற வர்த்தகம் போல் இதில் அளவீடு இல்லாததால், ஒவ்வொரு புது வீடும், புது ஜனனமும் எங்களுக்கு வாடிக்கையாளராக மாற வாய்ப்பிருந்தது," என்கிறார் அருண்.

சவால்கள்

பிற மொழி சம்பிரதாயங்கள் மற்றும் அவர்கள் மொழியில் உரையாடுவது பெரும் சவாலாக அமைந்ததாக கூறுகிறார் அருண். இதைத் தவிர ஒவ்வொரு புரோகிதரின் பின்னணி சோதனை மேற்கொள்வதிலும் சாவால்கள் இருந்ததாக கூறும் அருண் அதற்கான விளக்கத்தையும் அளிக்கிறார். 

"எங்களுடன் இணையும் புரோகிதர்கள் அனைவரும் மற்ற புரோகிதர்கள் மூலமாக வந்தாலும், பெரும்பாலும் அவர்களிடம் வேதம் பயின்றதற்கான சான்றிதழ்கள் பெறுவது கடினமாக இருந்தது. முழுமையான பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே எங்களின் தளத்தில் இணைய முடியும்," என்கிறார்.

வளர்ச்சி

150 புரோகிதர்களில் ஆரம்பித்த ’ஹரிவரா’ இன்று 2500-க்கும் அதிகமானவர்களை தங்கள் தளத்தில் இணைத்துள்ளதோடு, இது வரை 30000-க்கும் அதிகமான பூஜைகளை மேற்கொண்டுள்ளது. சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் தங்கள் சேவையை தொடங்கிய இந்நிறுவனம் பின்னர் ஹைதராபாத்திலும் கடந்த ஜுலை மாதம் மும்பை, பூனே, புதுடில்லி ஆகிய நகரங்களிலும் விரிவுப்படுத்தியுள்ளது.

image


தற்போது 16 ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனம் பல மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது. 10 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழில்முனை நிறுவனத்தில் சென்னை ஏஞ்சல்ஸ் குழுமத்தின் லஷ்மி நாராயணன் அவர்கள் முதலீடை பெற்றுள்ளது.

எதிர்காலம்

தற்போது தமிழ் தவிர மூன்று பிராந்திய மொழிகளில் சேவை அளிக்கும் ஹரிவரா இந்த மாத இறுதிக்குள் மராத்தி மொழியையும் சேர்க்கவுள்ளனர். ஒரு வருடம் மேல் தங்களுடன் இணைந்து பணியாற்றும் புரோகிதர்களுக்கு காப்பீடு, வீட்டுக்கடன் பெறும் வசதியையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது ஹரிவரா. அடுத்த வருடம் இரண்டாம் கட்ட நகரங்களிலும், சர்வதேச நாடுகளிலும் விரிவுப்படுத்தும் முனைப்பில் உள்ளதாக தெரிவிக்கிரார் அருண்குமார்.

இந்தியா பலதரப்பட்ட மொழிகள், பழக்கவழங்கக்கள் கொண்ட நாடு. அதே போல் வழிபாடு முறைகளும் மாறுபட்டே காணப்படுகின்றன. மாறி வரும் வாழ்க்கை முறை, அரிதாகி வரும் சம்பிராதய புரிதல்கள் ஆகியவை ஹரிவரா போன்ற தொழில்முனை நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்பதில் ஐயப்பாடில்லை.

வலைதள முகவரி: Harivara