Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரிட்டையர்டு பேங்கர் டு விவசாயி - டிராகன் பழச்சாகுபடியில் சீசனுக்கு ரூ.10 லட்சம் வருவாய்...!

கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கியாளரான கே.எஸ்.ஜோசப், தரிசாக இருந்த 4 ஏக்கர் நிலத்தை டிராகன் பழ சாகுபடி மூலம் மீண்டும் உயிர்ப்பித்துள்ளார். இன்று, இந்த அயல்நாட்டு பழத்தின் மூலம் ஒரு சீசனுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்.

ரிட்டையர்டு பேங்கர் டு விவசாயி - டிராகன் பழச்சாகுபடியில் சீசனுக்கு ரூ.10 லட்சம் வருவாய்...!

Friday January 10, 2025 , 3 min Read

கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கியாளரான கே.எஸ்.ஜோசப், தரிசாக இருந்த 4 ஏக்கர் நிலத்தை டிராகன் பழ சாகுபடி மூலம் மீண்டும் உயிர்ப்பித்துள்ளார். இன்று, இந்த அயல்நாட்டு பழத்தின் மூலம் ஒரு சீசனுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்.

2017ம் ஆண்டு வங்கியாளர் பதவியிலிருந்து ரிட்டெயர்ட் ஆகினார் கே.எஸ்.ஜோசப். இது ஒரு சகாப்தத்தின் முடிவாக இருந்த அதே வேளை, வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கான தொடக்கமாகவும் இருந்தது. ஆம், ரிட்டெயர்ட்மென்ட் வாழ்க்கையை காலாற அமர்ந்து கழிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. சும்மா இருக்கும் நேரத்தில் ஏதாவது செய்து, அவரது வாழ்க்கையின் இறுதிக் கட்ட வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக கடக்க எண்ணினார்.

K S Joseph

இயற்கை எழில்மிகு பகுதிக்கு நடுவே வாழ விரும்பிய அவர், வருமானம் ஈட்டக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். அதன்படி, கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள அத்திக்காயம் என்ற அழகிய மலை பகுதியில் 4 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அங்கு விவசாயமும் செய்யத்தொடங்கினார்.

தொடக்கத்தில், உள்ளூரில் விளையும் பழங்களை சாகுபடி செய்யத் தொடங்கினார். ஆனால், சரியான மண்வளம் இல்லாததால் அவை நிலைத்திருக்கவில்லை. என்னசெய்வது என்பது அறியாது திகைத்த ஜோசப், அப்பகுதியின் மண்வளம் குறித்தும், அதற்கு ஏற்ற பயிர் சாகுபடி எது? மண்வளத்தை புதுப்பிப்பது எவ்வாறு? என தீர விசாரிக்க ஆரம்பித்தார். பலரது ஆலோசனையை பெற்றார்.

இந்த நீண்ட முயற்சியில் அவருக்கு அறிமுகமாகியதே டிராகன் பழம். கற்றாழை குடும்பத்தைச் சேர்ந்த அயல்நாட்டு மிளிரும் பழம், பாறைகள் நிறைந்த நிலப்பரப்பிலும் நன்றாக வளரக்கூடியது. இன்று அவரது நான்கு ஏக்கர் நிலத்தில் 12,000 டிராகன் பழச்செடிகளை வளர்த்து அதன் மூலம் பருவகாலத்தில் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.

"பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ரப்பர் சாகுபடி செய்ததன் காரணமாக நிலம் பாழாகிவிட்டது. எனவே, குறைந்த பராமரிப்பு தேவைப்படும் மற்றும் கடுமையான நிலைமைகளைத் தக்கவைக்கக்கூடிய ஒரு பயிரை சாகுபடி செய்வதன் மூலம் நிலத்தை புதுப்பிக்க வேண்டியிருந்தது," என்று பெட்டர் இந்தியாவிடம் அவர் பகிர்ந்தார்.
K S Joseph
65 வயான ஜோசப், 4 பேரை பணிக்கு அமர்த்தி பண்ணையை பராமரித்து வருகிறார். 4 ஏக்கரில் 12,000 டிராகன் பழக்கன்றுகளுடன் பருவக்காலத்தில், 300 முதல் 500 கிலோ வரை டிராகன் பழம் உற்பத்தி செய்கிறார். தாவரங்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய காலாண்டு அடிப்படையில் மாட்டு சாணத்தை நிலத்தில் தெளிக்கின்றனர். அதே போல், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் கோழி சாணம் உரம் தயாரித்து தெளிக்கிறார்கள்.

டிராகன் பழத்தின் நன்மைகள் மற்றும் மிகவும் இலாபகரமான உற்பத்திக்காக நுகர்வோர் மற்றும் விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. அதிக அளவு நார்ச்சத்து மற்றும் தண்ணீரால் நிரம்பியுள்ளது. மேலும், அதை உட்கொள்வதால் கரோனரி தமனி நோய்கள் மற்றும் மேம்பட்ட செரிமானம் ஏற்படுவதைக் குறைக்கிறது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இளஞ்சிவப்பு நிற டிராகனின் தோல் போன்ற வெளிப்புறத்திலிருந்து மெல்லிய வெள்ளைநிற பழம் எடுக்கப்படுகிறது. இது பழுத்தவுடன் தொடுவதற்கு சற்று மென்மையாக இருக்கும். மேலும் இது சுவையான சாலட்களில் அலங்காரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பழத்தின் பிரபலத்தைப் பற்றி, லெமன் ட்ரீ ஹோட்டல்களின் செஃப் ஆகாஷ் சதா கூறுகையில்,

"2000-களின் முற்பகுதியில், இந்தியச் சந்தையில் இந்தப் பழம் புதியதாக இருந்தது. எனவே, சந்தையில் சென்டர் ஆஃப் அட்ரக்‌ஷனாக இருந்தது. எங்களின் அனுபவத்தில், வாடிக்கையாளர்கள் அதன் புதிரான தோற்றம் மற்றும் ஊட்டச்சத்தின் காரணமாக இப்போதும் அதை விரும்பி புசிக்கின்றனர். இனிப்பு சுவைக்கு என்றுமே டிமாண்ட் ஜாஸ்தி என்பதால், பழத்தின் தேவை அதிகமாக இருந்தது. மேற்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், நம்மூரிலே அதன் சாகுபடி அதிகரித்துள்ளது," என்றார்.
K S Joseph

சந்தையில் பழத்தின் தேவை அதிகரித்தன் காரணமாக, பல விவசாயிகளும் டிராகன் பழங்களை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சாகுபடியாளர் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ள ஜோசப், டிராகன் பழம் விவசாயிகளுக்கு ஒரு சிறந்த முதலீடாக இருப்பதற்கான மற்றொரு காரணத்தையும் பகிர்ந்தார்.

"வறட்சியை எதிர்கொள்ளும் சூழலில் இந்த தாவரங்கள் சிறந்தத் தேர்வாக அமையும். இந்த தாவரங்களுக்கு குறைந்தபட்ச நீர்ப்பாசனமே தேவைப்படுகிறது. அதனால், நீர் பாசனத்திற்கு ஆகும் செலவு சேமிக்கப்படுகிறது. பயிர் சாகுபடி செய்யும் ஆரம்பகாலத்தில் செய்யப்படும் பண முதலீடு, நீண்ட காலத்திற்கு மதிப்புள்ளதாக ஆகுகிறது. தொடக்கத்தில் சுமார் 200 மரக்கன்றுகளை நிலத்தில் நட்டோம். இதற்காக, தரையில் ஒட்டிய குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டிகளின் திறந்த கட்டமைப்பை அமைத்தோம். ஒவ்வொன்றிலும் நான்கு செடிகள் வரை வைத்திருக்க முடியும்.

"முதல் ஆண்டு செடிகள் மற்றும் அதன் நடவு செலவு உட்பட, மொத்த நிலையான மூலதனமாக ரூ.2 லட்சம் முதலீடு செய்தோம். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஆறு மாதங்கள் பழங்கள் காய்க்கும் பருவமாகும். இந்த சமயத்தில், ஒரு கிலோ பழங்களை 200 ரூபாய்க்கு விற்கிறேன்," என்றார்.