பதிவர் முதல் பேச்சாளர் வரை: இணைய தளத்தை ஏணியாக்கிய ஈரோடு கதிர்!
"என்னிடம் எழுத்துத் திறன் இருக்கிறது என்று நம்புகிறேன். என் தாய்மொழியான தமிழில் எழுதவும் செய்கிறேன். ஆனால், என் எழுத்தை வாசகர்களுக்கு எப்படிக் கொண்டுபோய் சேர்ப்பது? அதற்காக நான் யாரை எப்படி நாடுவது..?"
எழுத்தார்வம் உள்ள பலரிடமும் இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் எழுவதுண்டு. பத்திரிகைகளை அணுகுவதா? பதிப்பகங்களிடம் போவதா? அல்லது பிரபல இணைய இதழ்களுக்கு மெயில் அனுப்புவதா?
இவை எதையும் செய்ய வேண்டாம். உங்களிடம் ஆர்வமும் அர்ப்பணிப்புமிக்க ஈடுபாடும் மட்டும் இருந்தால் போதும், எவருடைய துணையுமின்றி இணையத்தில் வலைப்பதிவு (Blog) எழுதுவதன் மூலமும், சமூக வலைதளங்களில் பதிவுகளை இடுவதன் மூலமும் கவனிக்கத்தக்க எழுத்தாளராக உருவெடுக்க முடியும். இதற்கு நம் கண்முன்னே முன்னுதாரணமாக நிற்கிறார் எழுத்தாளரும் பேச்சாளருமான ஈரோடு கதிர்.
இளங்கலை கணினி அறிவியல் பட்டதாரியான இவர், ஒரு கணினி வடிவமைப்பு மற்றும் அச்சகத்தில் தொடங்கிய சமூக வாழ்க்கை, இன்று பேச்சாளராகவும் நிறுவனங்களுக்கான மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளராகவும் வளர்ந்திருக்கின்றது. இவர், விவசாயமும் பார்க்கிறார். பிரபல பத்திரிகைகளில் பத்திகளும், இணைய ஊடகங்களில் கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதிவரும் இவர், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு பயிலரங்குகளையும் நடத்தி வருகிறார்.
இந்த மகத்தான வெற்றிப் பாதைக்கு வித்திட்டது, இணைய எழுத்துதான். யாரையும் சார்ந்திருக்காமல், இணையத்தில் வலைப்பதிவு ஒன்றை உருவாக்கி, அதில் தன் அனுபவங்கள், சமூகக் கட்டுரைகள், சுய முன்னேற்ற ஆக்கங்கள், இலக்கியம் என பற்பல பிரிவுகளில் தீவிரமாக எழுதத் தொடங்கினார். இணைய வாசகர்களை மட்டுமின்றி, தமிழின் பிரபல ஊடகங்களின் கவனத்தையும் பெற்றார்.
தற்போது உள்நாடு, வெளிநாடுகளில் பயிலரங்குகள் தொடங்கி தொலைக்காட்சி சேனல் கருத்து - விவாத நிகழ்ச்சிகள் வரை தீவிரமாக இயங்கி வந்தாலும், தனக்கு ஏணிப்படியாக இருந்த கசியும் மெளனம் என்ற பெயரிலான வலைப்பதிவில் இணைய எழுத்தை தொடர்ந்து பற்றிக்கொண்டு தன் வாசக வட்டத்தையும் விரிவாக்கி வருகிறார்.
கலை - இலக்கிய ஆர்வத்துக்கு தங்களுக்குத் தாங்களே தளம் அமைத்துக்கொள்வது மட்டுமின்றி, அதன் மூலம் உரிய பலன்களையும் பெற விரும்பும் இளம் தமிழ் ஆர்வலர்கள் ஊக்கம் பெறும் வகையில் இதோ தனது மொழி நடையில், ’தமிழ் யுவர் ஸ்டோரி' மூலம் தன் அனுபவத்தைப் பகிர்கிறார் ஈரோடு கதிர்....
யார் நீ எனும் கேள்விக்கான மிக எளிய அறிமுகம், 'நகரத்தில் பாய்ந்த கிராமத்து வேர்' என்பதுதான்!
வாழ்வின் பசுமரத்தாணியாய் இருக்கும் நினைவுகள் எதுவெனக் கேட்டால், பால்ய காலம் தொடங்கிய முதன் பதினைந்து ஆண்டுகள்தான். கிராமத்துக்கான அத்தனை இலக்கணங்களும் கொண்டிருந்த கிராமத்து வாழ்க்கை. அதிலும் ஊருக்குள் வசிக்காமல், கூப்பிடு தொலைவு வரை வீடுகள் இல்லாத வயல்களுக்கு மத்தியிலிருந்த தனித்த வீடு. அதனால் குடும்ப உறவுகள் தவிர்த்து, எப்போதாவது வந்துபோகும் மிக நெருங்கிய உறவுகள் தவிர்த்து, சக மனிதர்களோடு புழங்க வாய்ப்புகள் குறைந்திருந்த வாழ்க்கை. அதனால் மிக நெருங்கிய நட்பு என்ற ஒரு நட்பின் சுவையே அறியாத பால்யம் அது. மேல்நிலைப் பள்ளி கல்விக்காக உடுமலைப்பேட்டை அருகே விடுதியில் தங்கிய இரண்டு வருடங்களில்தான் அந்நியர்களாய் வந்தவர்களிடம் அண்மிக்கும் வரம் கிட்டியது.
முதல் பதினைந்து ஆண்டுகளில் கிட்டாமல்போன நட்பை, இரண்டாம் மூன்றாம் பதினைந்து ஆண்டுகளில் தேடித்தேடி சேர்த்து வருகிறேன் எனச்சொல்லலாம். ஒரு விவசாயக் குடும்பத்தின் வேராய் நகரத்திற்குள் நுழைந்த என்னை முதலில் எடுத்தணைத்துக் கொண்டது ஜேஸீஸ் எனும் ஜூனியர் சேம்பர் இயக்கம்தான். கால் நூற்றாண்டைக் கடந்திருந்த நிலையில் தலைமைப்பண்பின் கூறுகளையும், மனிதவளத்தை மேம்படுத்தும் பயிற்சிகளையும் இங்குதான் கண்டறிந்தேன். கற்றுக்கொண்டேன். கற்றுக் கொண்டதை செயல்படுத்தினேன். பதினெட்டு முதல் நாற்பது வயது வரை பதவி வகிக்கலாம் எனும் ஜேஸீஸ் அமைப்பில் இருபத்தேழு வயதில் இந்திய அளவில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மண்டலத்தின் தலைமைப் பொறுப்பேற்று, வடமேற்கு தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்குள் ஓர் ஆண்டு வலம் வந்தபோதுதான் விதவிதமான மனிதர்களை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அது முதலே மனிதர்கள் குறித்து ஆழ்ந்து சிந்திக்கவும் ஆரம்பித்தேன். அங்கு பயிற்சியாளனாக, பேச்சாளனாக, தலைவனாக என்னை நானே ஆச்சரியங்களோடு அணுகத் தொடங்கினேன். இயக்கம் நன்கு வளர்த்தெடுத்தது. இயக்கம் என்பது ஒரு ஒழுங்குக்குள் வரும் ரத்தமும் சதையுமான மனிதர்கள்தானே!
பத்து முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான காலத்தில் காதல் மற்றும் சமூகப் பித்தில் வரிகளை மடித்து மடித்து எழுதி அவற்றிற்கு கவிதையெனப் பெயரிட்டுக்கொண்டது தவிர்த்து எழுத்தில் எவ்விதப் பரிச்சயமுமில்லை. "இதுவும் சிலகாலம் என" தலைவர் பொறுப்பு, பயிற்சியாளன் மற்றும் பேச்சாளன் ஆகியவற்றில் அலுப்புணர்ந்த ஒரு கணத்தில் அவையாவிலிருந்தும் வெளியேறி என்னை நானே ஒரு கூட்டிற்குள் அடைத்துக்கொண்டேன். விபரீதமான சில வியாபார ஆர்வங்கள் என்னை என்னிலிருந்து முற்றிலும் விலக்கிப்போட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் கோர்வையாய் ஒரு வரி கூட எழுதியதாய் நினைவில்லை.
2008-ம் ஆண்டின் இறுதி மாதங்களில் இணையத்தில் எதையோ தேடிக் கொண்டிருக்கும்போது, வலைப்பக்கங்கள் (Blogs) என ஒன்றிருப்பதையும், அதில் தமிழில் எழுத முடியும் எனக் கண்டறிந்ததையே என் வாழ்நாளின் ஆகச் சிறந்த சாதனை அல்லது கண்டுபிடிப்பு என நானே மெச்சிக் கொள்ளலாம். விளையாட்டுத்தனமாய் ஒரு வலைப்பக்கம் துவங்கி, வார்த்தைகளைக் கோத்து, வாக்கியங்களாக்கி, பத்திகளாக்கி என எழுத்தினை பழகத் தொடங்கினேன்.
முதல் ஒரு மாதத்தில் ஏதோ ஆர்வத்தில் கொஞ்சம் கிறுக்கியிருந்த எனக்கு அடுத்த நான்கைந்து மாதங்கள் மீண்டும் ஒரு மௌனவெளி. ஒரு சொல்லும் மனதில் உதித்து விரல் வழியே உதிராத சூன்யக்காலம். 2009-ம் ஆண்டு பிற்பாதியில் மனிதர்களை நோக்கி, மனிதர்கள் சார்ந்து எழுதத் துவங்கியது இன்றுவரை அலையில் மிதக்கும் தக்கைபோல மேலும் கீழுமாய் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், 2009, 2010, 2011-ம் ஆண்டுகளில் நண்பர்கள் இணைந்து ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்ற அமைப்பின் மூலமாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர்களை ஒன்று திரட்டி மூன்று முறை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தினோம்.
புதிய கதவுகளைத் தேட விரும்புவோருக்கு அழகியதொரு வாய்ப்பு இந்த சமூக வலைதளங்கள் எளிமையான ஒரு சாளரம். சமரசம் ஏதுமின்றி என்னால் சமூக வலைதளங்களைக் கொண்டாட முடிகிறது. ”எல்லா மாற்றங்களுக்குமான ஒரே நல்ல ஆயுதம் கல்வி” என மண்டேலா சொல்வது போல, நல்ல பல மாற்றங்களுக்கு இந்த சமூக வலைதளங்கள் ஒரு சிறந்த ஆயுதம்தான். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், இது ஒரு சக்திவாய்ந்த, தரமான கத்தி போன்றதே. இதனை எவ்விதம், எதன்பொருட்டு பயன்படுத்துகிறோம் என்பது நம் முடிவு மற்றும் விருப்பம். ஒற்றைச் சொடுக்கில் உலகம் முழுவதும் பார்க்கவும் வகையில் நமக்காக அமைக்கப்பட்டிருக்கும் சாளரம்.
வலைப்பக்கத்தில் துவங்கி ஃபேஸ்புக், ட்விட்டர் என அன்றாடங்கள் குறித்து நான் எழுதியவை தொடர்ந்து எல்லைகளை மாற்றி, புதிய நண்பர்களை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. இந்த ஆறு ஆண்டுகளில் கனவாய் இருந்த பல மேடைகளில் ஏறியிருக்கிறேன். நான்கு நாடுகளுக்கு பயணித்திருக்கிறேன். இந்தியா மற்றும் இலங்கையில் பன்னாட்டு மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களில் பயிலரங்குகள் நடத்தி வருகிறேன். குறிப்பிடத்தகுந்த இதழ்களில் கவிதை கட்டுரைகள் வந்துகொண்டிருக்கின்றன. பிரபலமான உள்நாட்டு, வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் உரை, பேட்டி, விவாதம், கவிதை ஆகிய நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கிறேன். இதுவரை வலைப்பக்கத்தில் எழுதியதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு "கிளையிலிருந்து வேர் வரை" எனும் புத்தகமாக வெளியீடு கண்டுள்ளது. இவையாவும் சமூக ஊடகங்களாலேயே எனக்கு சாத்தியமானது என்பதில் மறுப்பேதுமில்லை.
எவரும் தம் அன்றாடங்களை தமக்குத் தெரிந்த மொழியில் தொடர்ந்து பதிவு செய்வது அவசியம் எனக் கருதுகிறேன். அந்த வகையில் நான் ஊக்குவித்ததில் தமக்கான எழுத்தை அடையாளம் கண்டு குறிப்பிடத்தகுந்த உயரத்திற்குச் சென்றவர்களும் என் அருகில் உண்டு. சமூக வலைதளங்களை இன்னும் பயனுள்ளதாக இளைய தலைமுறை கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போதைய ஓயாத பெருங்கனவு. அது சாத்தியம் என்பதற்காக அவர்கள் முன் நான் ஓர் எளிமையான உதாரணமாக இருக்கிறேன் என்பதை ஒவ்வொரு கணத்திலும் பகிர்வதில் பெருமையும், மகிழ்வும் எய்துகிறேன்."
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
'பெண்களை மதிக்கும் சமூகமே உயர்ந்த நிலையை அடையும்'- எழுத்தாளர் அனு சுப்ரமணியன்
'வேற்றுமைகளின் கொண்டாட்டமாகவே கலாசாரத்தைக் காண்கிறேன்'- ஜெயந்தி சங்கர்