1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய்: ஜியோவிற்கு தண்ணிகாட்டும் பெங்களூரு நிறுவனம்!
அடுத்த பில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சுலபமான இணைய வசதியை மலிவான விலையில் கொடுக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.
இன்டர்நெட் மற்றும் வைஃபை ஆகிய இரண்டு வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் தத்து எடுத்த வார்த்தைகள் போல் ஆகிவிட்டன. அனைவரின் வாழ்விலும் ஒரு நாளில் ஒரு முறையாவது இந்த வார்த்தைகள் பயன்படுகிறது. தற்பொழுது உலகை இணைக்கும் கரன்சியாக இன்டர்நெட் பார்க்கப்படுகிறது.
இணைய உதவியுடன் நீங்கள் கற்கலாம், ஒரு வேலை பெறலாம், உணவுத் தேவை என ஆர்டர் செய்யலாம், உங்கள் பொருட்களை விற்கலாம் அல்லது இணையம் மூலம் சேவைகள் வழங்கலாம். இருந்தாலும் இந்தியாவில் இணையத்தின் விலை என்பது இன்னமும் அதிகமாகவே உள்ளது.
ஷுபெந்து ஷர்மா மற்றும் கரம் லக்ஷ்மன் இருவரும் இணைந்து 2016ல் ‘வைஃபை டப்பா’ (Wifi Dabba) துவங்கினர். மலிவான விலையில் நல்ல வேகத்தில் இணைய சேவை வழங்குவது இவர்கள் எண்ணம். இதைத் தேடிதான் இந்தியாவில் பெரும் ஜனத்தொகை காத்து நிற்கின்றனர். நிறுவனத்தின் சிஓஓ ஷுபெந்து ஷர்மா கூறுவது,
"அடுத்த பில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சுலபமான இணைய வசதியை மலிவான விலையில் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்கிறார்."
வைகாம்பினேட்டர் மற்றும் சில முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி பெற்று பெங்களுருவில் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் ஹாட்ஸ்பாட் அமைத்துள்ளனர். 2 ரூபாய்க்கு 200 எம்பி வழங்குகின்றனர். மேலும் பெங்களுருவில் உள்ள 10,000 மேற்பட்ட கோ-லிவ்விங் இடங்களுக்கு இணைய வசதி கொடுக்கின்றனர். இவர்கள் வாடிக்கையாளர்கள் முன்பணம் கட்டும் வசதி மற்றும் வைஃபையில் ரோமிங் வசதியும் உள்ளது.
துவக்கம் :
வேறு ஒன்றை தேடும் பொழுது, நாம் நினைத்துப் பார்க்காத ஒன்று நமக்குக் கிடைக்கும். இந்த அனுபவம் தான் வைஃபை டப்பா நிறுவனர்களுக்கும் கிடைத்தது. அவர்கள் வடிவமைத்த ‘ஸ்டெப்னி’ என்ற செயலியில் டாக்சி ஓட்டுனர்களை இணைக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சரியான இணையச் சேவைகள் இல்லாத காரணத்தால், ஓட்டுனர்கள் இவர்கள் செயலியை பயன்படுத்தவில்லை என்பது இவர்களுக்கு தெரியவந்தது.
"சரியான இணையச் சேவை இல்லாத நிலை மற்றும் அதன் அதிகப்படியான விலை காரணத்தால் எங்கள் செயலியை ஓட்டுனர்கள் பயன்படுத்தவில்லை என்பது எங்களுக்குப் புரிந்தது. அதனால் நம்பகமான ஒரு இயந்திரம் மூலம் அந்த சிக்கலை தீர்க்க நாங்கள் முடிவுசெய்தோம்," என்கிறார் கரம்லக்ஷ்மன்
டப்பா என்றால் ஹிந்தியில் பெட்டி என்று பொருள். இதனை வைஃபை பெட்டி என்று பொருள் படும் வகையில் இந்த பெயர் வைத்தோம் என்கிறார்.
2016ல் தேநீர் கடைகள் மற்றும் பான் கடைகளில் வைஃபை சேவை வழங்கியது வைஃபை டப்பா. அப்பொழுது 2 ரூபாய்க்கு 200 எம்பி வழங்கியது. அதற்கு அந்த கடைகளில் இருந்து ஒரு டோக்கன் பெறவேண்டும். அதற்கு கால அளவு 24 மணிநேரம். 2017ல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 2 ரூபாய்க்கு 1 ஜீபீ டேட்டா வழங்கினர்.
மேலும் 2018ல் விளம்பரங்கள் உதவியோடு இலவச வைஃபை சேவையையும் பரிட்சித்து பார்த்தனர். ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு விளம்பரத்தை பார்ப்பதன் மூலம் ஒருவர் தொடர்ந்து வைஃபை பயன்படுத்த முடியும். அல்லது பணம் செலுத்தியும் அவர்கள் இணையச் சேவை பெறமுடியும்.
மக்கள் தொகை அதிகம் உள்ள ஹூப்லி நகரத்திலும் கடந்த 3 மாதங்களில் 5 லட்சம் மக்களுக்கு இவர்கள் சேவை வழங்கியுள்ளனர். 2019ல் தொலைவு காரணமாக எழும் சிக்கலை தீர்க்கும் முயற்சியுடன், லேசர் பயன்படுத்தி இணையச் சேவை வழங்கும் ஒரு சூப்பர் நோட் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியுள்ளனர்.
இந்த லேசர் கண்களை பாதிக்காது, ஒரு நொடிக்கு 100ஜிபி வேகம் வரை கொடுக்கும், மேலும் ஃபைபர் இல்லாமல் 20 கிலோமீட்டர் வரை இதன் பரப்பளவு இருக்கும்.
2020ல் என்ன திட்டம்?
"2020ல் நகரம் முழுவதும் சூப்பர் நோடுகளை பொறுத்தப் போகிறோம். மேலும் இல்லங்கள், கடைகள் மற்றும் தொழில்நிலையங்களுக்கு வைஃபை இணைப்புகளை கொடுக்க உள்ளோம். வீடு மற்றும் கடைகளில் இந்த சூப்பர் நோடுடன் இணையும் வகையில் ஒரு வைஃபை பாக்ஸ் ஜிகா ரவுட்டர் வைக்கவுள்ளோம்," என்றார் ஷுபெந்து ஷர்மா.
இதற்கு மேல் விளம்பரங்கள் பார்த்து அதன் மூலம் இணைய வசதி பெரும் வாய்ப்பு இல்லை எனவும், அதற்குப் பதிலாக சிறிய புதிர்கள் போன்ற படங்களை தீர்ப்பதன் மூலம் அவர்கள் இணைய வசதி பெறலாம் அல்லது 1ஜிபி டேட்டாவிற்கு 1.20 ரூபாய் செலுத்தி பெறலாம் என்று கூறுகின்றனர்.
"தொழிற்சாலைகள் அவர்களுக்கு என ஒரு சூப்பர் நோட் பெறலாம். அதன் மூலம் 20ஜிபிபிஎஸ் வேகம் பெறலாம். இது அவர்ககளுக்குச் சாதகமானது என்கிறார்."
முதலில் பெங்களுருவில் தங்கள் அமைப்பை நிறுவி பின்னர் இந்தியா முழுவதும் செல்வதற்கான வேலையில் இறங்க உள்ளனர்.
பயனர்கள் தங்கள் வீடுகளுக்கு, அலுவலகங்கள், அல்லது தொழிற்கூடங்களுக்கு வைஃபை வேகன் வேண்டும் என முன்னதாக பணம் செலுத்தலாம். அவர்கள் பெரும் ஒவ்வொரு இணைப்புக்கும் ஒரு வைஃபை டப்பா ஜிகா ரவுட்டர் கிடைக்கும். ஒரு தொலைபேசி எண் மற்றும் ஒரு முறை கடவுச்சொல் கொண்டு யார் வேண்டுமானாலும் இந்த அமைப்பில் இணையலாம். ஒரு அலைபேசி எண் மூலம் பல கருவிகளை இணைக்கலாம்.
வைஃபை டப்பா அணி :
ஷுபெந்து மற்றும் கரம் இருவரும் ஐஐஎம் அஹமதாபாத்தில் 2010ல் சந்தித்தனர். அன்று முதல் இவர்கள் இருவரும் 33 தொழில்களில் பல அளவுகளில் வெற்றிகளை கண்டுள்ளனர். தொழில்முனைவுகளின் தொழில்நுட்ப வேலைகளை கரம் பார்த்துக்கொள்ள, ஷுபெந்து தொழிலை பார்த்துக்கொள்கிறார். வைஃபை டப்பாவில் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், வலைதள கட்டுமானப் பொறியாளர்கள், கள நிர்வாகிகள் என 40 பேர் பணிபுரிகின்றனர்.
நிறுவனத்தின் எதிர்காலம் :
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 450 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள் உள்ளனர், 20 மில்லியன் பிராட்பேண்ட் பயனாளர்கள் உள்ளனர். சந்தையில் தற்பொழுது தேவை உள்ள நிலையில், இத்தனை குறைவான பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.
“இந்த நிலையை, விலையைக் குறைப்பதன் மூலம் சரிக்கட்ட முயலுகிறோம். உள்ளூரில் தயாராகும் பொருட்களைக் கொண்டு நாங்கள் தொழில் செய்து மற்றவர்களிடம் இருந்து எங்களை தனித்து நிறுத்திக் கொள்கிறோம். மற்றவர்கள் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு விற்பனையாளரைக் கொண்டுள்ளனர். நாங்கள் அனைத்தையும் நாங்களே தயாரிக்கிறோம்."
இந்த நிறுவனத்தின் வருமானம் பற்றி கேட்டபொழுது, இப்பொழுதும் வளரும் நிலையில் தான் உள்ளோம். எனவே வருமானம் என்பதை பெரிதாக எண்ணவில்லை என்கின்றனர்.
தமிழில் : கெளதம் தவமணி