ரூ.105 கோடிக்கு கையகப்படுத்தப்பட்ட கிளவுட் சேவை நிறுவனத்தை உருவாக்கிய திருப்பூர் தொழில் முனைவர்!
சிறிய அளவில் சிவா துவங்கிய கிளவுட் சேவை ஸ்டார்ட் அப், எல்&டி நிறுவனத்தால் ரூ.105 கோடிக்கு கையகப்படுத்தும் அளவிற்கு வளார்ச்சி அடைந்த வெற்றிக் கதை.
தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த எஸ்.சிவா, புத்தகத்திற்கு அட்டை போட பழுப்பு காகிதம் வாங்க முடியாததால், செய்தித் தாள் காகிதத்தை பயன்படுத்தினார். புத்தகங்களுக்கு அவரே சொந்தமாக லேபிள்களும் தயார் செய்வார். அதன் வடிவமைப்பால் கவரப்பட்ட வகுப்புத் தோழர்கள் அதை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி இருக்கின்றனர்.
சிறு வயதில் உண்டான இந்த தொழில்முனைவு ஆர்வம், பொறியியல் பட்டம் பெற்ற பிறகு உற்சாகமான பயணமாக அமைந்தது.
சிவா, நான்கு ஆண்டுகளுக்கு முன் சொந்த நிதியில் துவக்கிய ’பவர்அப் கிளவுட்’ ஸ்டார்ட் அப் நிறுவனம், அக்டோபர் மாதம் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தால் 15 மில்லியன் (ரூ.105 கோடி) டாலருக்கு வாங்கப்பட்டது.
பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவல் படி, பவர்அப் கிளவுட், 2018 நிதியாண்டில் 3.5 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. இது இந்த ஸ்டார்ட் அப்புக்கு அதன் வருவாயை விட ஐந்து மடங்கு மதிப்பு அளிக்கிறது. எளிய துவக்கம்
“பன்னாட்டு நிறுவனம் அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் பாதுகாப்பான வேலையில் சேர வேண்டும் என விரும்பியதால் என பெற்றோர்கள் நான் சொந்தமாக எந்த தொழிலும் துவங்குவதை விரும்பவில்லை,” என்கிறார் சிவா.
ஆனால், அவரது வாழ்க்கையில் வேறுவிதமாக நடந்தது. அவர் நல்ல சம்பளம் அளித்த பெரிய நிறுவனங்களில் பணி புரிந்தாலும், அவர் சொந்தமாக தொழிலில் இறங்கவே செய்தார். பணியாற்றிக்கொண்டிருந்த போது கிளவுட் சேவை அடுத்த பெரிய விஷயமாக இருக்கப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டார். இந்தத் துறையில் நேரடி அனுபவம் பெறுவதற்கான கிளவுட் சேவையில் ஈடுபட்டிருந்த சிறிய நிறுவனங்களில் பணியாற்றினார்.
2015ல், சிவா தனது முன்னாள் சகா அங்கித் கார்குடன் இணைந்து, ஆலோசனை, மைக்ரேஷன், நேட்டீவ் அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட கிளவுட் சார்ந்tண்ட் சேவைகளை வழங்க, பவர்அப் கிளவுட் நிறுவனத்தை துவக்கினார். அடிப்படைகளில் கவனம் செலுத்தி நிறுவனத்தை நடத்துவது என்பதிலும் உறுதியாக இருந்தனர்.
துவக்கத்தில் சிவாவின் அம்மா தனது நகைகளை அடமானம் வைத்து பணம் கொடுத்தார். மேலும் நிறுவனர்களின் மனைவி தங்கள் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
“எங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை, வாடிக்கையாளர்களுடனான ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் மூலமான தொகையில் தான் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்,” என்கிறார் சிவா.
இரண்டு படுக்கயறைக் கொண்ட குடியிருப்பில் தான் நிறுவனம் துவங்கியது. அப்போது பர்னீச்சர்கள் கூட கிடையாது. முதல் வாடிக்கையாளர் வந்த போது, அருகாமையில் இருந்த கடைக்குச்சென்று பர்னீச்சரை எடுத்து வந்தனர்.
அடிப்படை அம்சங்கள்
செலவுகளை குறைப்பதற்காக, பவர்அப் கிளவுட், இளம் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டது. அனுபவம் வாய்ந்த பொறியாளர்களுக்கான சம்பளம் கொடுக்க முடியாததோடு, அவர்களும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்ற தயாராக இல்லை. ஆனால், பெரும்பாலான இளம் பொறியாளர்கள் நிறுவனத்துடனே இருந்தனர் என்கிறார் சிவா.
தானும், இணை நிறுவனரும் ஒரு சில வாழ்வியல் மாற்றங்களை செய்து கொண்டதாகவும் சிவா கூறுகிறார்.
“நிறுவனர்கள் புதிய கார் அல்லது நகை வாங்குவதில்லை என தீர்மானித்தோம். வெளிநாட்டு பயணங்களும் கூடாது என முடிவு செய்தோம்,” என்கிறார்.
மேலும், சிறிது காலத்திற்கு ஊதிய உயர்வும் எடுத்துக் கொள்வதில்லை என தீர்மானித்தனர். கூடுதலாக வந்த பணத்தை எல்லாம், புதியவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதில் செலவிட்டனர்.
“நிறுவனம் கையகப்படுத்தப்படும் போது நிறுவனத்தின் அதிக சம்பளம் வாங்கும் 25வது ஊழியராக நான் இருந்தேன்,” என்கிறார் சிவா.
வர்த்தக வளர்ச்சி
நிறுவனத்தின் வர்த்தக இலக்கு தெளிவாக இருந்தது. முன்னணி கிளவுட் சேவை நிறுவனங்கள், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகியவற்றின் வலுவான பார்ட்னராக இருக்க வேண்டும். அதற்கேற்ப குறுகிய காலத்தில், இந்த மூன்று நிறுவனங்களின் விரும்பப்படும் பார்ட்னராக பவர்அப் கிளவுட் நிறுவனம் உருவானது.
நிறுவனம் வாடிக்கையாளர்களுடன் ஆண்டு பராமரிப்பு, ஆலோசனை, நிர்வாக சேவைகள் என பலவிதமான முறைகளில் சேவை வழங்கியது. மூன்று போட்டி கிளவுட் சேவைகளுடன் தொடர்பில் இருந்த போதும் பவர் அப் கிளவுட், வாடிக்கையாளர்கள் மற்றும் பார்ட்னர்களுடன் நல்ல சமன் கொண்டிருந்தது. இரு தரப்பினருடன் நம்பகமான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையே இதற்குக் காரணமாக அமைந்தது.
இது நல்ல பலனை அளித்ததால் பவர் அப் கிளவுட் நிறுவனம் இரண்டே ஆண்டுகளில் 80 பேர் கொண்ட நிறுவனமாக வளர்ந்தது. அதன் வருவாய் 2017 ல் 0.96 மில்லியன் டாலராக இருந்தது, 2018 ல் 1.7 மில்லியனாக அதிகரித்து 2019 ல் 3.5 மில்லியன் டாலராக உயர்ந்தது.
முதல் இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சி அதற்கே உரிய சவால்களையும் கொண்டு வந்தது.
“அதிர்ஷ்டவசமாக, இரண்டு வழிகாட்டிகளிடம் இருந்து கிடைத்த ஆலோசனை, வர்த்தகம் மற்றும் நிதி நோக்கில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவியது,” என்கிறார் சிவா.
சேவையில் இருந்து பிராடக்ட்
வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் சேவைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது, பிராடக்டையும் உருவாக்க வேண்டும் என நிறுவனம் புரிந்து கொண்டது. இதன் விளைவாக நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மூன்று பிராடகட்களை உருவாக்கியது. இவை சந்தையில் நல்ல வாய்ப்பை அளித்தன.
பிராடக்ட்கள் எங்களுக்கு சாதகத்தையும் மேம்பட்ட மதிப்பையும், சிறந்த வெளியேற்ற வாய்ப்பையும் அளித்தன. வெளியேறும் வாய்ப்பு எங்கள் மனதில் இருக்கவில்லை. வாடிக்கையாளர்களை எப்படி கவர்ந்திழுப்பது என்பதில் தான் கவனம் செலுத்தினோம்” என்கிறார் சிவா.
தனது பயணத்தில் பவர்அப் கிளவுட் நிறுவனம் பலரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனம், இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் பொறியியல் நகரங்களுக்கு வெளியே திறமைகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தியது. பிட்சா டெலிவரி செய்பவர்கள், மெக்கானிக் போன்ற பின்னணியைச் சேர்ந்தவர்கள் கிளவுட் நுட்பத்தை கற்றுக்கொண்டு நிறுவனத்தில் பணியாற்றி முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
கையகப்படுத்தல்
இந்த ஆண்டு அக்டோபர் மாதம், லார்சன் நிறுவனத்திடம் இருந்து கையகப்படுத்தல் வாய்ப்பு வந்தது.
“நிறுவனம் துவக்கிய 9 மாதங்களிலேயே கையகப்படுத்தல் வாய்ப்பு வந்தாலும், மதிப்பு சரியாக அமையவில்லை. லார்சன் வாய்ப்பில், கலாச்சாரம், பரஸ்பர உறவு சிறப்பாக இருந்ததோடு, மதிப்பும் சரியாக இருந்தது,” என்கிறார் சிவா.
இதற்கு முன்னர் நிறுவனத்தை விற்றிருந்தால், எங்களுக்கு பணம் கிடைத்திருக்கும். ஆனால் எங்கள் ஊழியர்களுக்கு எதுவும் கிடைத்திருக்காது. எனவே சரியான வாய்ப்பிற்கு காத்திருந்தோம்,” என்கிறார் சிவா.
தங்கள் நான்கு அண்டு அனுபவம் பற்றி பேசும் போது ,
“வாடிக்கையாளர்கள் தான் எப்போதும் எங்கள் முதலீட்டாளர்கள். அவர்களை பெற்றுவிட்டால், வெளியில் இருந்து பணம் தேவையில்லை,” என்கிறார் சிவா. வாடிக்கையாளர்கள் உதவுவார்கள் என்பதால் நிதி பற்றி கவலை இல்லை என்றும் சொல்கிறார்.
மேலும், சரியான வழிகாட்டிகளை பெற்றிருப்பது மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் என்கிறார். “உங்கள் பரிவர்த்தனைகளில் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியம். இல்லை என்றால், ஒரு நாள் அது உங்களை பாதிக்கும்’ என்கிறார்.
ஆங்கிலத்தில்: திம்மையா புஜாரி | தமிழில்; சைபர்சிம்மன்