5 உயிர்களைக் காப்பாற்றிய 20 மாதக் குழந்தை- இந்தியாவின் இளைய ஆர்கன் டோனர்!
மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த 3 நாட்களில் குழந்தைக்கு மூளை சாவு!
வாழ்க்கை எப்போதும் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருபதில்லை. பல்வேறு கடினமான சூழல்களை எதிர்கொள்ள அது கற்றுக்கொடுக்கிறது. அதேபோலத்தான் இருந்தது அந்த பச்சிளங்குழந்தையின் பெற்றோருக்கு.
டெல்லியைச் சேர்ந்த பிறந்து 20 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை தனிஷ்தா. முதல் மாடியில் உள்ள வீட்டு பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்தாள் தனினிஷ்தா. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து தவறி விழுந்தார். இதை அறிந்த பெற்றோர் உடனே பதறி அடித்துக்கொண்டு அருகிலுள்ள ஸ்ரீ கங்காராம் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த 3 நாட்களில் குழந்தைக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சியளித்தனர். இந்த செய்தி அவரது பெற்றோருக்கு இடியாக இறங்கியது. இதனையடுத்து தங்கள் குழந்தையின் உறுப்புகளை தானம் கொடுக்க அவர்கள் முன்வந்தனர். தங்கள் குழந்தையின் உறுப்புகள் மூலம், கஷ்டப்படும் மற்றவர்களை வாழ வைக்க முடியும் என அவர்கள் நம்பினர்.
”நாங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது, உறுப்புகள் தேவைப்பட்ட பல்வேறு நோயாளிகளைச் சந்தித்தோம். அவர்களுக்கு உறுப்பை தானம் செய்வது மூலம் நாங்கள் எங்கள் மகளை இழந்திருந்தாலும், அவள் தொடர்ந்து வாழ்கிறாள் என்ற உணர்வை தரும். மேலும் அவள் ஒருவருக்கு வாழ்க்கையை தருகிறாள் அல்லது அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறாள் என்ற எங்களுக்குள் திருப்தி கிடைக்கும்,” என்று அந்த குழந்தையின் தந்தை ஆஷிஸ்குமார் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மகளின் நிலை மாற்ற முடியாதது என்று மருத்துவர், குடும்பத்தினருக்கு தெரிவித்தவுடன், மற்ற நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அவரது உறுப்புகளைப் பயன்படுத்த முடியுமா என்று அவரது பெற்றோர் கேட்டார்கள். தனிஷ்டாவின் உறுப்புகள் நல்ல நிலையில் உள்ளன என்பதை அறிந்ததும், அவரது பெற்றோர்கள் உறுப்பு மாற்று தானம் செய்ய முடிவு செய்தனர்.
தனிஷ்தாவின் உறுப்புகள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்ததால், அவரது இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரு கார்னியாக்களும் ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் மீட்கப்பட்டு, ஐந்து நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று தானம் செய்யப்பட்டது.
சிறுநீரகங்கள் ஒரு பெரியவருக்கும், இதயம் மற்றும் கல்லீரல் இரண்டு குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. கார்னியா சேமிக்கப்படுகிறது. இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம், குழந்தை தனிஷ்தா 20 மாத வயதில் ஐந்து உயிர்களைக் காப்பாற்றிய இந்தியாவின் இளைய நன்கொடையாளராகவும் திகழ்கிறார்.
பெற்றோரின் முடிவைப் பாராட்டிய சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா கூறுகையில்,
“ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 5 லட்சம் இந்தியர்கள் உறுப்புகள் இல்லாததால் இறக்கின்றனர். குடும்பத்தின் இந்த உன்னத செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது, மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும்.”
ஒரு மில்லியனுக்கு 0.26 என்ற அளவில், உறுப்பு தானத்தில் மிகக் குறைந்த விகிதத்தில் இந்தியா உள்ளது. சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் இந்தியர்கள் உறுப்பு பற்றாக்குறை காரணமாக இறக்கின்றனர், என்று தெரிவித்துள்ளார்.
தமிழில்: மலையரசு