‘இதயம் உட்பட என் உடல் உறுப்புகள் விற்பனைக்கு’ - உருக்கத்துடன் அறிவிப்பு வெளியிட்ட தாய்!
ஏழ்மை காரணமாக தனது ஐந்து குழந்தைகளின் மருத்துவச் செலவு மற்றும் கடன்களை அடைக்க, கேரளாவில் ஒரு தாய் தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருவில் இருக்கும் போதே முகம் தெரியாத தன் குழந்தைக்காக எல்லா வலியையும் சந்திக்க தயாராகி விடுகிறாள் தாய். அதனால் தான் தாயன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை, தாயிற் சிறந்த கோவிலுமில்லை எனக் கூறுகின்றனர். பணம் இருந்தால் எதையும் விலை கொடுத்து வாங்கி விடலாம் எனக் கூறப்படும் இந்தக் காலத்திலும், தன் குழந்தைகளுக்காக தாய் எந்தவித தியாகமும் செய்யத் தயங்க மாட்டாள் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த தாய் ஒருவர்.
கேரள மாநிலம் வராப் புழையை சேர்ந்தவர் 44 வயதான சாந்தி. இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடைசி மகனைக் கருவுற்றிருந்த போது, இவரது கணவர் குடும்பத்தை நிர்கதியாக விட்டு விட்டு எங்கோ சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தன் ஐந்து குழந்தைகளையும் தனது வருமானத்திலேயே வளர்த்துள்ளார் சாந்தி.
ஆரம்பத்தில் ஓட்டுநர் பள்ளி ஒன்றில் பணிபுரிந்துள்ளார் சாந்தி. அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் தன் ஐந்து குழந்தைகளையும் கவனித்து வந்துள்ளார். சாந்தியின் நான்கு மகன்களில் ஒருவருக்கு பிறவியேலே மனவளர்ச்சி இல்லாததால், அவருக்கான மருத்துவச் செலவிற்காக கடன் வாங்க ஆரம்பித்துள்ளார்.
பட்ட காலிலேயே படும் என்பது போல், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திடீரென சாந்தியின் மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நரம்பு பிரச்சினையால் கண் பார்வைக் குறைபாடு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மகளை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் சாந்திக்கு ஏற்பட்டது. எனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, கடன் வாங்கி மகளின் மருத்துவச் செலவு மற்றும் குடும்பச் செலவுகளை சமாளித்து வந்துள்ளார்.
தாய் படும் கஷ்டங்களைப் பார்த்த அவரது மூத்த மற்றும் மூன்றாவது மகன் வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். ஆனால் திரும்பவும் விதி அவர்களது வாழ்க்கையில் விளையாடியது. கடந்தாண்டு விபத்து ஒன்றில் சிக்கினார் சாந்தியின் மூத்த மகன். மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே மேற்கொண்டு வேலைக்குச் செல்ல முடியவில்லை. அவரது மருத்துவs செலவுக்கும் சாந்தி கடன் வாங்கினார்.
அந்தப் பெரிய குடும்பமே சாந்தியின் மூன்றாவது மகனின் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்க, இம்முறை கொரோனா ரூபத்தில் மீண்டும் விதி சதி செய்தது. கொரோனா பிரச்சினையால் வேலை இழந்தார் சாந்தியின் மூன்றாவது மகன். குடும்பத்திற்கு இருந்த ஒரே வருமானமும் நின்று போனது.
உடல் நலமில்லாத இரண்டு மகன்கள், ஒரு மகள், வேலையில்லாத ஒரு மகன், பள்ளிக்குச் செல்லும் ஒரு மகன் என சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார் சாந்தி. கடனும் ரூ.20 லட்சத்திற்கு மேல் உயர்ந்து கழுத்தை நெரிக்கத் தொடங்கியது. சாப்பாட்டிற்கே கஷ்டம் எனும் போது, வாடகை எப்படி தர முடியும்? வாடகை தர வழியில்லாததால் குடியிருந்த வீட்டைக் காலி செய்தார் சாந்தி. எர்ணாகுளம் பகுதியில் முளவு காடு சாலையோரத்தில் சாக்கினால் கூடாரம் போன்று அமைத்து அதில் தன் குடும்பத்தை தங்க வைத்தார்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை என்பதை உணர்ந்த சாந்தி, குடும்பத்தைக் காப்பாற்ற துணிந்து ஒரு முடிவெடுத்தார். கருவில் இருந்த போதே, தன் ரத்தத்தைப் பாலாக்கி குழந்தைகளுக்கு உணவாகத் தந்தவர் என்பதால், மீண்டும் தன் குழந்தைகளைக் காப்பாற்ற தன் உடல் உறுப்புகளையே விற்பனை செய்ய முடிவெடுத்தார்.
கனமழையையும் பொருட்படுத்தாமல், பெற்ற குழந்தைகளின் மருத்துவs செலவுக்காக இருதயம் உட்பட உடல் உறுப்புகளை விற்பனை செய்யத் தயார் என அறிப்பை எழுதி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
“குழந்தைகளுக்கு மருத்துவ வசதிக்காகவும் கடன்களை அடைக்கவும், தாயின் உடல் உறுப்புகள் விற்பனைக்கு (இதயம் உட்பட)” என எழுதி வைக்கப்பட்ட பதாகையுடன் கொட்டும் மழையில் தன் குழந்தைகளுடன் சாந்தி போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாந்தியின் சோக நிலையை எடுத்துக்காட்டுவதாய் இருந்த அந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கேரள அரசின் கவனத்திற்கும் சென்றது.
வி.டி. சதீசன் எம்.எல்.ஏ, சாந்தியை நேரில் சந்தித்து, அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். அதன் தொடர்ச்சியாக சாந்தியின் குடும்பத்தை காப்பகத்திற்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதோடு, சாந்தியின் மகன்கள் மற்றும் மகளின் மருத்துவச் செலவை மாநில அரசாங்கம் கவனித்துக்கொள்வதாக உறுதி அளித்துள்ளது.
இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சில தன்னார்வ தொண்டு செய்யும் அமைப்புகளும், இளகிய உள்ளம் கொண்ட பொதுமக்களும் சாந்திக்கு தங்களது உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர். இதனால் அரசு காப்பாத்தில் இருந்து மீண்டும் ஒரு வாடகை வீட்டிற்கு குழந்தைகளுடன் குடியேறியுள்ளார் சாந்தி. இனி வரும் நாட்களில் வறுமையின் வடுக்கள் சாந்தியை விட்டு மெல்ல மெல்ல விலகும் என எதிர்பார்க்கலாம்.
கட்டுரை மற்றும் படங்கள் உதவி: புதிய தலைமுறை, இந்தியன் எக்ஸ்பிரஸ்