உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாளறிவன்!
10மீ ஏர் ரைபில் உலகக்கோப்பை இறுதிச் சுற்றில் தனது சீனியரும் இந்தியா வீராங்கனை அஞ்சும் உடன் போட்டியிட்டு தங்க வென்றுள்ளார் கடலூரை பூர்வீகமாகக் கொண்ட 20 வயதே ஆன இளவேனில்!
புதன்கிழமை அன்று பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார் தமிழக வீராங்கனை இளவேனில் வாளறிவன். கடலூரைச் சேர்ந்த இவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன்பு நடந்த ரியோ டி ஜெனிரோ உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த அபுர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே தங்கம் வென்றுள்ளனர். இப்பொழுது அவர்களை முறியடித்து சாதனைப் படைத்து வென்றுள்ளார் இந்த 20 வயது இளம் வீராங்கனை.
தகுதிச் சுற்றில் 629.4 புள்ளிகளை எடுத்து நான்காவது இடத்தைப் பிடித்த இளவேனில் வாளறிவன் தனது சீனியர் அஞ்சும் உடன் இறுதிப் போட்டியில் இணைந்தார். 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றனர்.
இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். தற்போது சீனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார்.
கடலூரில் பிறந்தாலும், சிறு வயதிலே குஜராத் மாநிலத்தில் குடியேறி தன் பள்ளிப்படிப்பை அங்கேயே தொடர்ந்துள்ளார் இவர். பொழுதுபோக்கிற்காக தனது 13 வயதில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுப்பட்ட இவருக்கு பின் அதுவே லட்சியமாக மாறியது.
2013ல் பள்ளிகளுக்கிடைய நடந்த போட்டியில் முதல் முதலாக பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் இன்னும் ஆர்வம் ஏற்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டார். பயிற்சிக்காக தினமும் 60 கிமீ வரை பயணம் செய்தும், பள்ளி படிப்பையும் விடாமல் தொடர்ந்தார் இளவேனில். தனது பயிற்சியால் ஜூனியர் மற்றும் சீனியர் உலகக்கோப்பை இரண்டிலும் தங்கம் வென்றுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மற்றும் பாரா பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மானசி ஜோஷி தங்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்த நிலையில், தற்போது மேலும் ஒரு இந்திய வீராங்கனை குறிப்பாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வீராங்கனை தங்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இளவேனிலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்,
நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் தனது வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதே போல் பிரபல இந்திய ரைபில் ஷூட்டரும் இளவேனிலின் பயிற்சியாளருமான ககன் நரங், இந்திய விளையாட்டு தினத்தன்று கிடைத்த இனிப்பான செய்தி என சுட்டிக்காட்டி, இளவேனிலின் வெற்றியை புகழ்ந்து அவரது ஷூட்டிங் வீடியோ உடன் ட்வீட் செய்தார்.
வாழ்த்துக்கள் இளவேனில்... மேலும் பல வெற்றிகள் கிடைத்திட ஆல் தி பெஸ்ட்!