உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து!
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் பி.வி. சிந்து.
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் பி.வி. சிந்து.
சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் 25வது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுஹராவை எதிர்த்து ஆடினார் சிந்து. துவக்கத்தில் இருந்தே தன் சிறப்பான ஆட்டத்தை காட்டிய சிந்து,
முதல் சுற்றில் 21-7 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். அதன்பின் இறுதிச்சுற்றில் மீண்டும் நோசோமியை 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம், உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக சாதனை படைத்தார் பி.வி. சிந்து.
முன்னதாக 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய சிந்து இரண்டாம் இடமே பிடித்தார். இன்று மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து உலக அரங்கில் தடம் பதித்து இந்தியர்களை பெருமைப் படுத்தியுள்ளார்.
வெற்றிக்குப்பின் பேசிய சிந்து,
"இந்த பதக்கத்தை இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்," என தெரிவித்தார்.
2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரர் ஸ்பெயினைச் சேர்ந்த கரோலினா மெரினுக்கு எதிராக இறுதி வரை போராடிய சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார்.
கடந்தாண்டு நடைப்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார். ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மின்டன் பிரிவில் இந்திய வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வென்றது அதுவே முதல்முறை. இன்று மீண்டும் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்துள்ளார் இவர்.
சிந்துவின் வெற்றியை பாராட்டி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நேர்ந்திர மோடி சிந்துவின் அர்ப்பணிப்பை பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருந்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார், ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது... என தெரிவித்தார் அவர்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்தார்.
இன்னும் பல பிரபலங்களும், ரசிகர்களும் சிந்துவிற்கு பாராட்டுகளை அள்ளி குவித்துக் கொண்டு வருகின்றனர்.