கொரோனா வைரஸ் பீதியால் '2020 மொபைல் கண்காட்சி' ரத்து
பத்துக்கும் மேற்பட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் விலகிக் கொண்டதை அடுத்து ஸ்பெயினில் நடைபெற இருந்த மொபைல் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய மொபைல் கண்காட்சியான, ’மொபைல் வேர்ல்டு கான்கிரஸ்’, சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை நடத்தி வரும் அமைப்பாக ஜி.எஸ்.எம்.ஏ, இம்மாதம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற இருந்த மொபைல் கண்காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
”கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம், பயண பீதி மற்றும் இதரச் சூழல் காரணமாக, இந்த கண்காட்சியை நடத்துவது சாத்தியம் இல்லை,” என ஜி.எஸ்.எம்.ஏ அமைப்பின் சி.இ.ஓ ஜான் ஜாப்மன் தெரிவித்துள்ளார்.
பத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்பதில் இருந்து விலகியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், நோக்கியா, வோடோபோன், பிரிட்டனின் பிடி ஆகிய நிறுவனங்கள் விலகுவதாக அறிவித்தன.
எரிக்சன், சோனி, அமேசான், இண்டெல், எல்ஜி உள்ளிட்ட நிறுவங்கள் ஏற்கனவே விலகுவதாக அறிவித்துள்ளன. ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பைக் காரணம் காட்டி இந்த நிறுவனங்கள் விலகுவதாக தெரிவித்தன.
மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் கண்காட்சியை ரத்து செய்ய வேண்டும் எனும் நெருக்கடி அதிகரித்த நிலையிலும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டபடி கண்காட்சியை நடத்த முயன்றனர். ஆண்டுதோறும் நடக்கும் இந்த கண்காட்சியில், 200 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்கள் பங்கேற்பது வழக்கம். சீனாவில் இருந்தும் அதிகம் பேர் வருகை தருவார்கள்.
உலக வயர்லெஸ் வர்த்தக அமைப்பான, ஜி.எஸ்.எம்.ஏ, வைரஸ் சூழ்நிலையை கூர்ந்து கவனித்து வருவதாகவும், சர்வதேச மற்றும் ஸ்பெயின் நாட்டு சுகாராத வல்லுனர்களுடனும் கலந்தாலோசித்து வருவதாக தெரிவித்திருந்தது.
இதனிடையே, வைரஸ் தொடர்பான சூழலை முழுவதும் பரிசீலித்த பிறகு, மொபைல் கண்காட்சியில் இருந்து விலக முடிவு செய்ததாக நோக்கியா தெரிவித்தது.
ஊழியர்களின் நலனும், ஆரோக்கியமும் மிகவும் முக்கியம் என்றும், கண்காட்சியில் பங்கேற்காமல் இருப்பதே புத்திசாலித்தனமானது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. வோடோபோன் நிறுவனமும் ஆழமான பரிசீலனைக்குப்பிறகு விலகுவதாக தெரிவித்தது. பிரிட்டனின் பிடி நிறுவனமும் இவ்வாறு தெரிவித்திருந்தது.
நோக்கியா மற்றும் எரிக்சன் ஆகிய நிறுவனங்கள் விலகியதை அடுத்து, சீனாவின் ஹுவேய் நிறுவனம் மட்டுமே முக்கிய ஸ்பான்சராக எஞ்சி நின்றது. இந்நிலையில், திட்டமிட்டபடி கண்காட்சியை நடத்தினால், பொதுமக்களின் கோபத்துக்கு இலக்காவது அல்லது கண்காட்சியை ரத்து செய்தால் நஷ்டத்தை சந்திப்பது ஆகிய வாய்ப்புகளை பரிசீலித்ததாக கூறப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் நிலைமைய சமாளித்து இந்த கண்காட்சியை திட்டமிட்டபடி நடத்த முயற்சி மேற்கொண்டனர். இந்த கண்காட்சியில் ஸ்பெயின் நாட்டுக்கு, 516 மில்லியன் டாலர் வருவாயை அளிப்பதோடு, 14,000 பகுதி நேர வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
”பார்சிலோனா அமைந்துள்ள கேட்டலானியா பகுதியில் கொரோனா வைர்ஸ் பரவ குறைந்த வாய்ப்புகளே உள்ளன. இவற்றை கண்டறிந்து தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்,” என்று கேட்டலான் பிராந்திய சுகாதார அதிகாரி அல்பா வெர்ஜஸ் கூறியிருந்தார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்