சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பாதிப்பா?
கொரோனா வைரஸால் சீனாவில் போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி பாதிப்பு, இந்திய ஸ்மார்ட்போன் துறை மீது தாக்கம் செலுத்தி வருகிறது.
போன் உதிரிபாகங்கள், துணைப் பொருட்களுக்காக சீனாவை சார்ந்திருக்கும் இந்திய ஸ்மார்ட்போன் துறை, கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, போன் தயாரிப்பில் நெருக்கடியை உணரத் துவங்கியுள்ளதாக சந்தை நோக்கர்கள் கருதுகின்றனர்.
சீனாவிடல் மூடப்பட்ட ஆலைகள் வரும் நாட்களில் மீண்டும் திறக்கப்படுமா என்பதை ஸ்மார்ட்போன் துறையினர் எதிர்நோக்கியுள்ளனர்.
“ஆம் ஏற்கனவே பாதிப்பை உணர்ந்து வருகிறோம். ஒரு சில மாடல்கள் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட சில ஆலைகள் படிப்படியாக திறக்கப்பட உள்ள நிலையில், இப்போதைக்கு உறுதியாக எதையும் கூற முடியாது,” என்கிறார் இந்திய செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக் சங்க (ஐசி.இ.ஏ) தலைவர் பங்கஜ் மொகிந்த்ரூ.
குறிப்பாக எதையும் தெரிவிக்க மறுத்தவர், “இந்த வாரம் முழுவதும் காத்திருந்து கவனிக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்க உள்ளோம்,” என்றும் கூறினார்.
ஸ்மார்ட்போன்களுக்கான உதிரிப்பாகங்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்து வருவதால் களத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக சந்தை நோக்கர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சந்தையிலும் தேக்க நிலை இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
இ-மெயில் மூலம் தொடர்பு கொண்ட போது, ரியல்மீ நிறுவனம், தனது சப்ளை செயின் பாதிக்கப்படவில்லை என்றும், நிறுவன உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
“75,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் ஊழியர்கள், 50க்கும் மேற்பட்ட உள்ளூர் சப்ளையர்களுடன், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ரியல்மீ ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. லாஜிஸ்டிக்ஸ் சிக்கல்கள் மற்றும் சீனாவில் வைரஸ் பாதிப்புக் காரணமாக பணிகள் பாதிப்பு போன்றவற்றால் சிறிதளவு தாக்கம் இருந்தாலும், எங்கள் எதிர்காலத் திட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை,” என்று நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.
ஸ்மார்ட்போன் துறை மீதான பாதிப்பையும் உன்னிப்பாக கவனித்து வருதாக தெரிவிக்கிறது. ஒப்போ, ஜியோமி, விவோ மற்றும் போகோவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இ-மெயில்களுக்கு இதுவரை பதில் வரவில்லை.
இதனிடையே, சீனாவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த உற்பத்தி நிறுவனம் தயாரிப்பு பணிகளை மீண்டும் துவக்கியிருப்பதாகவும், ஆனால், குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிகை 1,016 ஆக உயர்ந்துள்ளது. மோசமாக பாதிகப்பட்ட ஹுபே மாகாணத்தில், 42,638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கு வெளியே, 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்கில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ், விரைவில் நடைப்பெற உள்ள மொபைல் உலக மாநாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பார்சிலோனாவில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இருந்து விலகுவதாக, எரிக்சன், அமேசான் மற்றும் சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
செய்தி: பிடிஐ | தமிழில்:சைபர்சிம்மன்