2021: இந்தியா முழுவதும் இணையத்தில் தீயாய் பரவிய டாப் 10 வைரல் வீடியோக்கள்!
தங்களது ஆரோக்கியம், சந்தோஷம், வருத்தம், ஏமாற்றம் என பலவகையான உணர்வுகளையும் மீம்ஸ் மற்றும் வீடியோக்களாக கலந்து கட்டி வெளியிட்டு, ஹிட் அடித்தனர். இப்போது நாம் பார்க்கப்போகிற சில வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட மற்றும் பகிரப்பட்டவை. அதில் சில உங்களை சிரிக்க வைக்கும், சில உணர்ச்சிபூர்வ
2020ம் ஆண்டைப் போலவே 2021ம் ஆண்டிலும் கொரோனா 2வது அலை காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொரோனா அச்சத்தால் வீட்டிற்குள் முடங்கினாலும் மக்கள் சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக தான் செயல்பட்டார்கள்.
தங்களது ஆரோக்கியம், சந்தோஷம், வருத்தம், ஏமாற்றம் என பலவகையான உணர்வுகளையும் மீம்ஸ் மற்றும் வீடியோக்களாக கலந்து கட்டி வெளியிட்டு, ஹிட் அடித்தனர். இப்போது நாம் பார்க்கப்போகிற சில வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட மற்றும் பகிரப்பட்டவை. அதில் சில உங்களை சிரிக்க வைக்கும், சில உணர்ச்சிபூர்வமானதாக இருக்கும், சில நம்முடைய மனதை துண்டில் போட்டு சுண்டியிழுக்கும்.
2021ம் ஆண்டில் இந்தியாவின் இணையதளங்களை ஒரு கலக்கு கலக்கிய வீடியோக்கள் இதோ...
1. பவ்ரி ஹோ ரஹி ஹை:
2021ம் ஆண்டின் மிகவும் பிரபலமான வைரல் வீடியோ நிச்சயமாக 'பவ்ரி ஹோ ரஹி ஹை' தான். பாகிஸ்தானைச் சேர்ந்த சோசியல் மீடியா பிரபலமான தனீர் மொபீன் தனது நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடுவதையும், தனது காரையும் ரசிகர்களுக்கு காண்பித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில்,"யே ஹுமாரி கார் ஹை, அவுர் யே ஹம் ஹை. அவுர் யே ஹுமாரி பாவ்ரி ஹோ ரஹி ஹை". இதற்கு அர்த்தம் என்னவென்றால் இது எங்கள் கார், இது என் நண்பர்கள், இங்கு நாங்கள் பார்ட்டி வைத்திருக்கிறோம் என ஸ்டைலாக பேசியதை இசைக்கலைஞர் யஷ்ராஜ் முகதே என்பவர் மியூசிக் பீட்டாக மாற்றினார். இதனையடுத்து, ‘பவ்ரி ஹோ ரஹி ஹை’ என்ற வார்த்தை இணையத்தில் தாறுமாறு வைரலானதோடு, இந்த வீடியோவும் யூடியூப்பில் 72 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஹிட்டடித்தது.
2. சத்தீஸ்கர் சிறுவனின் ரீமீக்ஸ் பாடல்:
சத்தீஸ்கரைச் சேர்ந்த சஹ்தேவ் டிர்டோ என்ற சிறுவன் இந்தியில் பிரபலமான ‘பச்பன் கா பியார்’ பாடலை பாடியது சோசியல் மீடியாவில் வைரலானது. இதனையடுத்து அந்த பாடலின் முழு பதிப்பையும் சிறுவனை பாடவைத்து அந்த பாடலை எழுதியவரே காட்சிப்படுத்தினார்.
ஆஸ்தா கில் மற்றும் ரிகோ ஆகியோருடன் சிறுவன் சஹ்தேவ் டிர்டோ பாடிய பாடல் இணையத்தை மீண்டும் தாறுமாறு வைரலானது. சத்தீஸ்கர் பூபேஷ் பாகேல் உட்பட ஒட்டுமொத்த மாநிலமே இந்த பாடலைக் கொண்டாடி தீர்த்தது. யூடியூப்பில் மட்டுமே இந்த பாடல் 33 கோடிக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3. நேரலையில் மனைவியிடம் திட்டி வாங்கிய மருத்துவர்:
கணவன், மனைவி சண்டை தொடர்பான காமெடி வீடியோக்கள் என்றாலே சோசியல் மீடியாவில் வைரலாகும், அதுவும் அவர்கள் பிரபலமானவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) முன்னாள் தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால், சோசியல் மீடியாவில் நேரலையில் கொரோனா தடுப்பூசி குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அவர் மனைவியிடம் இருந்து போன் வர, அதையும் பேச ஆரம்பிக்கிறார். அப்போது அவர் மனைவி தனக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாதது குறித்து அகர்வாலை திட்டி, தீர்க்கிறார். இந்த வீடியோ ட்விட்டரில் தாறுமாறு வைரலானது.
4. ஜூம் காலில் கணவருக்கு முத்தம் கொடுத்த முயன்ற மனைவி:
கடந்த ஆண்டு வெளியான வீடியோக்களிலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது இந்த வீடியோவாக தான் இருக்கும். ஜூம் வீடியோ காலில் அலுவலக மீட்டிங்கில் இருந்த கணவருக்கு, மனைவி முத்தம் கொடுக்க முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து பலரும் வீட்டிலிருந்து பணி செய்து வந்தனர். இதனால் அலுவலக கலந்துரையாடல்கள், மீட்டிங் போன்றவையும் ஜூம், கூகுள் உள்ளிட்ட வீடியோ கான்ஃபெரன்ஸ் தளங்கள் வாயிலாகவே நடைபெற்று வந்தன.
அப்படி வீட்டிலிருந்தே ஜூம் செயலி வழியாக அலுவலக மீட்டிங்கில் கலந்து கொண்டிருக்கும் கணவரை நெருங்கி வந்த, மனைவி மீட்டிங் நடந்து கொண்டிருந்ததை அறியாமல் அவருக்கு முத்தமிட முயல்கிறார். உடனடியாக மனைவியிடம் இருந்து திடுக்கிட்டு விலகும் அந்த கணவர், அலுவலக மீட்டிங் சென்று கொண்டிருப்பதை கண் ஜாடையிலேயே காட்ட, மனைவி வெட்கத்தில் தலைகுனிந்து கொள்கிறார். இந்த வீடியோவை பிரபலங்கள் பலரும் பதிவிட்டதன் மூலம் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட வியூஸ்களை பெற்றது.
5. ஆன்லைன் வகுப்பில் ஏடாகூடமாய் ஆன் ஆன மைக்:
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்துமே மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அப்படி ஆன்லைன் கிளாஸின் போது மாணவ, மாணவிகள் அடித்த லூட்டிகள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. டெல்லியில் ஆன்லைன் கிளாஸில் மைக் ஆன் செயப்பட்டிருப்பது தெரியாமல் ஸ்வேதா என்ற மாணவி, சக தோழியிடம் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்தது தொடர்பாக பேசினார்.
இந்த காதல் அனுபவங்கள் தொடர்பான கலந்துரையாடல் எல்லை மீறி செல்லவே ஆன்லைனில் இந்த சக மாணவ, மாணவிகள் ‘ஸ்வேதா யூவர் மைக் இஸ் ஆன்’ என பலமுறை கதறிய பிறகே அமைதியாகிறார். இந்த வைரல் ஆடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து ஸ்வேதா என்ற பெயரை வைத்து பல மீம் கன்டென்ட்டுகள் உருவாக்கப்பட்டு இணையத்தில் இஷ்டத்துக்கு வைரலானது குறிப்பிடத்தக்கது.
6. கேரள மருத்துவ மாணவர்களின் நடனம்:
இந்த வைரலான நடன வீடியோ கேரளாவில் உள்ள திருச்சூர் மருத்துவக் கல்லூரியின் நடைபாதையில் படமாக்கப்பட்டது, இரண்டு மருத்துவ மாணவர்கள் போனி எம் இன் 1978 ஆம் ஆண்டு ஹிட் பாடலான ’ராரா ரஸ்புடினின்’ மியூசிக்கிற்கு நடனமாடினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் லைக்குகளைப் பெற்றது.
7. கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்திய வாரியர்ஸ்:
குஜராத்தின் வதோதராவில் உள்ள பருல் சேவாஷ்ரம் மருத்துவமனையின் ஊழியர்கள் நடனமாடி கோவிட் நோயாளிகளை உற்சாகப்படுத்தினர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிபிஇ கிட் அணிந்து உடற்பயிற்சி செய்வது போல் நடனமாடிய வீடியோ வைரலானது. இதுபோல கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை கொடுப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
8. நடன இயக்குநரை ஷாக்கிய நெட்டிசன்:
கொரோனா மருந்து தொடர்பாக மக்களிடையே எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் ரெம்டெசிவர் மருந்து கிடைக்காத கோபத்தில் கொந்தளிக்கும் இளைஞர் ஒருவர், ரெம்டெசிவிர் என்பதற்கு பதிலாக பிரபல நடன இயக்குநரும், தயாரிப்பாளருமான ரெமோ டி’சோசா’ தவறுதலாக கூறிய வீடியோ வைரலாக பகிரப்பட்டது. இந்த வீடியோவை ரெமோ டி’ சோசாவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர பார்வையாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக ஏறியது.
9. சரக்குக்காக லைனில் நின்ற பெண்மணி:
டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இதனையடுத்து குடிமகன்கள் பலரும் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நின்றனர். அப்போது நடுத்தர வயது பெண்மணி ஒருவரும் ஆண்களுடன் போட்டி, போட்டி சரக்கு வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் செய்தியாளர் எடுத்த பேட்டியில் ‘சரக்கு மட்டுமே சரியான மருத்து, தடுப்பூசி எல்லாம் தேவையில்லை’ என பதிலளித்தார். பெண்மணியின் இந்த பதில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கன்டென்டாக மாறி வைரலானது.
10. கொரோனாவுடன் போராடிய சிங்கப்பெண்:
கொரோனா 2வது அலையின் தீவிரத்தைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பு மருந்து கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோர் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர், பலரது உயிரிழப்பு பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் ஒருவர், ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், ‘லவ் யூ ஜிந்தகி’ என்ற பாடலை கேட்டு உற்சாகமாக படுக்கையில் இருந்த படியே நடனமாடிய வீடியோ வைரலானது. அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் விதமாக பெண் மருத்துவர் ஒருவர் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தை கலக்கியது.