2024 லோக்சபா தேர்தலின் 'கேம் சேஞ்சர்' - யார் இந்த ‘கிங் மேக்கர்’ சந்திரபாபு நாயுடு!
அரசியல் பின்னடைவுகள், தோல்வி, அதனால் கிடைத்த அவமானங்கள், புறக்கணிப்புகள், சிறை என பல்வேறு இன்னல்களைத் தாண்டி, ஒரு மாநிலத்தின் முதல்வராக மட்டுமின்றி, நாட்டின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அரசியல் களத்தில் முக்கியமானவராக, தனது பலத்தை வெளிக்காட்டி இருக்கிறார் சந்திரபாபு நாயுடு.
நாட்டின் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் முடிந்து விட்டது. இதில் மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
அடுத்து பிரதமர் நாற்காலியில் அமரப் போவது யார்?
கட்சிகளின் வெற்றி, தோல்வி, சாதனைகள், சரிவுகள் என ஊடகங்கள் ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, இந்தத் தேர்தலின் முக்கிய நாயகனாக சந்திரபாபு நாயுடுவின் பெயர் எல்லாச் செய்திகளிலும் பாகுபலி அளவிற்கு பேசப்பட்டு வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, 2024 சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று, மீண்டும் ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில், அவரது ஒற்றை வார்த்தை பிரதமர் நாற்காலி யாருக்கு என்பதை முடிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. ஆனால், அவை எல்லாவற்றிற்கும் சந்திரபாபு நாயுடு இன்று உரிய விளக்கம் அளித்துவிட்டார்.
பங்குசந்தை பாதிப்பு
நேற்றைக்கு தேர்தல் முடிவுகள் வந்தவுடன், கடுமையான சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையும் கூட, இன்று சந்திரபாபு நாயுடுவின், “என்டிஏ கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன்” என்ற ஒற்றை வார்த்தையால் புத்துயிர் பெற்று, மீண்டும் சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் உயர்வைப் பெற்றுள்ளது.
இப்படி ஒரே நாளில் மாநிலத்தின் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் என இரண்டு முக்கிய பதவிக்கான பேச்சுகளில் இடம்பெற்ற தலைவர் சந்திரபாபு நாயுடுவாகத்தான் இருப்பார். அவரது இந்த வெற்றி, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. ஆலமரமாக பூமிக்குள்ளும் வேரூன்றி, விழுதுகளாகவும் கிளை பரப்பி நிற்கிறது அவரது அரசியல் வாழ்க்கை.
யார் இந்த சந்திரபாபு நாயுடு, விவசாயக் குடும்பத்தில் பிறந்து இன்று அரசியலில் கோலோச்சி அரியணையில் அமர்ந்தது எப்படி? இதோ விரிவாகப் பார்க்கலாம்...
விவசாயக் குடும்பம்
சந்திரபாபு நாயுடுவின் முழுப்பெயர் நர சந்திரபாபு நாயுடு ஆகும். பால் பண்ணைகளுக்குப் பேர் போன ஆந்திர மாநிலம் சித்தூரில், 1950ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பெயர் கார்ஜூர நாயுடு, தாயார் அமனம்மா. மாணவப் பருவத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை ஒவ்வொரு நாளும் 11 கி.மீ. நடந்து பள்ளிக்கு சென்று வந்தார்.
சிறுவயதில் இருந்தே அரசியலில் ஏற்பட்ட தனி ஆர்வத்தால், 1973ம் ஆண்டு, ‘என்ஜி ரங்காவின் பொருளாதார சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பிஎச்டி ஆய்வில் ஈடுபட்டார் சந்திரபாபு நாயுடு. அப்போது அவருக்கு அரசியல் தலைவர்களுடன் ஏற்பட்ட நேரடித் தொடர்பால், ஆய்வுப் படிப்பை பாதியில் கைவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறினார்.
இளம் அமைச்சர்
சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் மாணவர் தலைவராக இணைந்த நாயுடு, 1975ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் தலைவரான சஞ்சய் காந்தி மற்றும் நாரலா சய்கிரின் நெருங்கிய ஆதரவாளராக உயர்ந்தார்.
அவசர நிலையைத் தொடர்ந்து, 1978 ஆம் ஆண்டு, தனது 28வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் நாயுடு. அதே ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சந்திரகிரி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பையே சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், ஜே என் பி யின் கொங்கரா பட்டாபி ராமா சௌத்ரியை 2500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் தொழில்நுட்ப கல்வி மற்றும் ஒளிப்பதிவு அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். அமைச்சரவையிலேயே இளம் அமைச்சர் என்ற பெருமையையும் சந்திரபாபு நாயுடு பெற்றார்.
என்.டி.ஆர். மகளுடன் திருமணம்
இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே, 1980ம் ஆண்டு என்.டி.ஆரின் மகளை மணந்தார் நாயுடு. 1982ம் ஆண்டில் என்.டி.ஆர். தெலுங்கு தேசம் கட்சியை (டி.டி.பி.) உருவாக்கிய போதும், தொடர்ந்து காங்கிரஸிலேயே இருந்து வந்த நாயுடுவிற்கு, 1983ம் ஆண்டு தேர்தல் தோல்வியைத் தந்தது. சந்திரகிரியில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் வெங்கடராமனா நாயுடு மெடசானியிடம் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் நாயுடு. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்து வெளியேறிய அவர், என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் கட்சியிலேயே இணைந்தார்.
முதல்வர் பதவியிலிருந்து என்டி ராமாராவை அகற்ற காங்கிரஸ் முயற்சித்தபோது அதை நாயுடு முறியடித்தார். அதன் பிறகு, என்டிஆரின் முழு நம்பிக்கையையும் பெற்றவராக நாயுடு உயர்ந்தார். அதன்பலனாக அவருக்கு 1984ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கூடவே, 1985ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கு தேசம் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், அவருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதோடு, 1984 முதல் 1989 வரை அவருக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் அளிக்காமல் என்.டி.ஆர். வைத்திருந்தார்.
1989ம் ஆண்டு குப்பம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு பி.ஆர்.துரைசாமிக்கு எதிராக 6918 வாக்குகள் வித்தியாசத்தில் நாயுடு வென்றார். இந்த வெற்றி மீண்டும் அவருக்கு கட்சியில் பொறுப்பைப் பெற்றுத் தந்தது. 1989-1994 ஆண்டுகளில் தெலுங்கு தேச கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். மீண்டும் 1994ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் குப்பம் தொகுதியில் போட்டியிட்டு, ஆர்.கோபிநாத்திற்கு எதிராக 56588 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முதல்வராக பதவியேற்பு
இதற்கிடையே, என்.டி.ஆரால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பங்களை தனக்கு அரசியலில் சாதகமாக்கிக் கொண்டார் நாயுடு. 1995ல் அப்போதைய முதலமைச்சராக இருந்த தனது மாமனார் என்.டி.ராமராவுக்கு எதிராக புரட்சி செய்து, ஆந்திராவின் புதிய முதலமைச்சர் ஆனார்.
1999 குப்பம் தொகுதியில் இருந்து சந்திரபாபு நாயுடு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் 65,687 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.சுப்பிரமணிய ரெட்டியை தோற்கடித்து, மீண்டும் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். 2004 வரை அவர் முதலமைச்சராக பணியாற்றினார். இதற்கிடையே, 2003 ஆம் ஆண்டில் குண்டுவெடிப்பில் சிக்கி நாயுடு படுகாயமடைந்தார்.
எதிர்கட்சித் தலைவர்
2004 சந்திரபாபு மீண்டும் குப்பம் தொகுதியில் இருந்து வென்றார். இருப்பினும், 2004ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோற்கடிக்கப்பட்டது. நாயுடு முதல்வர் பதவியிலிருந்து விலகினார். ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். நீண்ட காலமாக சேவை செய்த எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.
2009 மீண்டும் குப்பம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் எம்.சுப்ரமணியம் ரெட்டியை தோற்கடித்தார். 2014 தெலுங்கானா மாநிலம் ஆந்திர பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு நாயுடு மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திர மாநில முதல் முதலமைச்சராக அவர் பதவி ஏற்றார்.
தொடர்ந்து இரண்டு முறை ஆந்திராவின் முதல்வராகப் பதவி வகித்து, ஆந்திராவின் நீண்டகால முதல்வர் என்ற பெருமையைப் பெற்ற நாயுடுவிற்கு, 2019ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வெற்றியைத் தரவில்லை. அந்தத் தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் ஆனார். சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். எதிர்கட்சித் தலைவர் ஆன போதும், நீண்ட நாட்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் என்ற சாதனையையும் நாயுடு படைத்தார்.
நாயுடுவின் சபதம்
சட்டசபையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. 2021ம் ஆண்டு ஆந்திர சட்டசபையில், தன் மனைவி குறித்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸார் அவதூறாகவும் இழிவாகவும் பேசுவதாகக் கூறி சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.
இனி இந்த சட்டப்பேரவைக்குள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டு, கைகளைக் கட்டியவாறே சட்டசபையை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தான் சொன்னபடியே மாபெரும் வெற்றியுடன் ஆந்திர மாநிலத்தில் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.
கைதும், கட்சியின் பின்னடைவும்
இதற்கிடையே, ஆந்திர முதல்வராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் புகார் உட்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்தாண்டு நீதிமன்றக் காவலிலும் இருந்தார் நாயுடு. அப்போது அவருக்கு தொடர்ச்சியாக ஜாமீன் மறுக்கப்பட்டது. சட்டசபைத் தேர்தலை நெருக்கத்தில் வைத்துக் கொண்டு தெலுங்கு தேசம் கட்சி இத்தகைய பிரச்சினைகளில் சிக்கியது, அக்கட்சியின் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த யூகங்களையும், தற்போது தனது வெற்றியால் தகர்த்துக் காட்டி இருக்கிறார் நாயுடு.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி 151 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களையும் வென்றது. எனவே, இந்த சட்டசபைத் தேர்தல் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாழ்வா சாவா என்ற தேர்தலாகக் கருதப்பட்டது. இதில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டால் அந்தக் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியே என்ற நிலை இருந்தது.
ஆனால், எதிர்பார்த்ததைவிடவும் அதிக வாக்குகளைப் பெற்று இந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மொத்தமுள்ள 175 சட்டசபைத் தொகுதிகளிலில் தெலுங்கு தேசம் 134 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. வரும் 9ம் தேதி சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் எனக் கூறப்படுகிறது.
மாநில அரசியலில் மட்டுமின்றி மத்திய அரசியலிலும் சந்திரபாபுவின் வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அனுபவம் மிக்க அரசியல் தலைவரான சந்திரபாபு, கடந்த காலங்களிலும் இதேபோன்று தேசிய அளவிலான அரசியல் சூழல்களில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.
1984 தேர்தலுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சி மக்களவையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. ஒரு கட்டத்தில் மத்தியில் பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் முடிவு செய்யும் அளவிற்கான முக்கிய சக்தியாக அக்கட்சி தன்னைக் கூறிக் கொண்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஹெரிடேஜ் ஃபுட்ஸ்
சினிமா மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்தத் துறைகளைத் தாண்டி மற்றொரு தொழிலிலும் கால் பதிக்க விரும்புவது வழக்கம்தான். அந்தவகையில், 1992ம் ஆண்டில் நாயுடு ஹெரிடேஜ் குரூப்பை நிறுவினார்.
80லட்சம் ரூபாய் முதலீட்டில் நாயுடு ஆரம்பித்த இந்த ‘ஹெரிடேஜ் ஃபுட்ஸ்’, தற்போது தென்னிந்தியாவின் மிகப்பெரிய தனியார் பால் பண்ணை நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிறுவனத்தை தற்போது நாயுடுவின் மருமகளான பிராமணி நிர்வகித்து வருகிறார்.
கொண்டாட்டம்
73 வயதில், அரசியல் பின்னடைவுகள், தோல்வி, அதனால் கிடைத்த அவமானங்கள், புறக்கணிப்புகள், சிறை என பல்வேறு இன்னல்களைத் தாண்டி இன்று வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. ஒரு மாநிலத்தின் முதல்வராக மட்டுமின்றி, நாட்டின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அரசியல் களத்தில் முக்கியமானவராக, தனது பலத்தை வெளிக்காட்டி இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த வெற்றியை அவரது அரசியல் வெற்றியாக மட்டும் பார்க்காமல், அவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சாமர்த்தியம் போன்றவற்றிற்கு கிடைத்த வெற்றியாகவும் சமூகவலைதளப் பக்கங்களில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.