Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பால் வியாபாரம்: தொழில் முனைவர் சந்திரபாபு நாயுடுவின் ரூ.2400 கோடி கதை!

சித்தூர் மாவட்டத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு 80லட்சம் ரூபாய் முதலீட்டில் 1992ஆம் ஆண்டு துவங்கியதே ‘ஹெரிடேஜ் ஃபுட்ஸ்’.

பால் வியாபாரம்: தொழில் முனைவர் சந்திரபாபு நாயுடுவின் ரூ.2400 கோடி கதை!

Monday September 16, 2019 , 4 min Read

ஆந்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரான திரு சந்திரபாபு நாயுடு, பால் பண்ணை அதிகம் இருக்கும் சித்தூர் மாவட்டத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.


1990களில் நாடு முழுவதும் பிரபலபடுத்தப்பட்ட பால் கூட்டுறவால் உள்ளூர் வியாபாரிகளூக்கு ஏற்படும் நெருக்கடிகளைக் கண்டார், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான நாரா சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடு - முன்னால் முதல்வர்

அவர் பால் வியாபாரிகளின் தினசரி சிக்கல்களாக இருக்கும் தினக்கூலி, போக்குவரத்து மற்றும் இதர பால் பொருட்களுக்கு பெருகி வரும் தேவையை கண்டறிந்து, ஏற்கனவே இருக்கும் பால் கூட்டுறவை தொலைநோக்கு பார்வையும், தனியார் நிறுவனத்தின் திறனும் கொண்டு பால் வியாபாரம் செய்ய ஒரு நிறுவனத்தை நிறுவினார்.


இவ்வாறு ’ஹெரிடேஜ் ஃபுட்ஸ்’ 80லட்சம் ரூபாய் முதலீட்டில் 1992ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. திரு சந்திரபாபு நாயுடுவின் மனைவி திருமதி நாரா புவனேஷ்வரி இதற்கு பொறுப்பேற்றார். இந்த வியாபாரத்தை முன்னே கொண்டு செல்லவும் தகுந்த ஆலோசனைகள் வழங்கவும் துறை சார்ந்த திறமையான ஆலோசகர்கள்  சிலர் நிறுவனத்தில் சேர்ந்தார்கள்.


தொடக்கம் முதல் இன்று வரை ஹெரிடேஜ் ஃபுட்ஸ் இந்தியாவில் லட்சக்கணக்கான பால் வியாபாரிகளுடன் இணைந்து இன்று இந்தியாவில் மிகப்பெரிய பால் நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. நமக்கு அளித்த பேட்டியில்,

“2018-19 நிதி ஆண்டில், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் 2482 கோடிக்கு வியாபாரம் செய்து இருக்கிறது. தற்போது மூன்று லட்சம் பால் வியாபாரிகளுடன் 15 மாநிலங்களில் இயங்கி வருகிறது,” என்று கூறுகிறார் ஹெரிடேஜ் ஃபுட்ஸின் நிர்வாக இயக்குனர் ப்ரஹ்மணி நாரா.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் தற்போது ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கர்னாடகா, கேரளா, தமிழ் நாடு, மாஹாராஷ்டிரா, ஒடிஷா, என்சிஆர் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தர் பிரதேசம், குஜராத், உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனது இருப்பை நிலை நிறுத்தியுள்ளது.

ப்ராஹ்மணி - நிர்வாக இயக்குனர் ஹெரிடேஜ் புட்ஸ்

துவக்கக் காலம்

Heritage Foods நிறுவனம் தொடங்குவதற்கு முன், அமுல் பாலகத்தின் கூட்டுறவு முறையை நாடு முழுவதும் பின்பற்றிக் கொண்டிருந்தனர். ஆப்பரேஷன் ஃப்ளட் என்ற இந்த முயற்சி இந்தியாவின் பால் பற்றாக்குறையைத் தீர்த்து பால் உற்பத்தியில் முதன்மை நாடாக இந்தியாவை மாற்றியது.

“ஆனால்  ஆந்திர பிரதேசத்தில்  அந்த கூட்டுறவில் இணைந்து வேலை செய்யும் பால் வியாபாரிகளுக்கு எதிர்ப்பார்த்த வியாபாரம் ஆகவில்லை. திறனற்ற நிர்வாகம், சரியான முறையில் விளம்பரம் செய்யாதது போன்ற குறைபாடுகள் இருந்தன, அந்த நேரத்தில் தனியாருக்கு அந்த துறையில் அனுமதி கிடைத்தது,” என்று கூறுகிறார் ப்ரஹ்மணி.

எனவே, அமுலில் இருந்த சிறப்பு அம்சங்களான இடைத்தரகர்களை நீக்குதல், பாலை நேரடியாக அதன் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தல், அவர்களுக்கு ஏற்ற விலை கொடுத்தல், பாலை பதப்படுத்துதல் மற்றும் அதை வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்பது போன்றவற்றை ஹெரிடேஜ் ஃபுட்ஸ் தக்க வைத்துக் கொண்டது.

இதை நடைமுறைபடுத்த, ஹெரிடேஜ் 1993ல் அதன் முதல் பதப்படுத்தும் ஆலையை துவக்கியது. வியாபாரத்தை மேலும் பெருக்க, 1994ல் நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைந்தது. 54 மடங்கு அதிகப்படியாக அதன் பங்குகள் வாங்கப்பட்டது  என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


பால் கூட்டுறவு முறையில் இருக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள, ஹெரிடேஜ், ‘உறவுப் பண்ணை’ என்ற முறையை கையாளத் தொடங்கியது.

“விவசாயிகள் எங்களுடன் வியாபரம் செய்வதில் அதிக ஈடுபாடு காட்டினர் காரணம், நாங்கள் அவர்களுக்கு தேவையான சம்பளத்தை நேரத்தில் கொடுத்து கடன், காப்பீடு, கால்நடைத் தீவனம் போன்ற சலுகைகளும் அளித்தோம். விவசாய வியாபாரம் போன்று இயங்குவதில்  எங்களுக்கு ஈடுபாடு இல்லை,” என்று ப்ரஹ்மணி விளக்குகிறார்.

பால் மட்டும் அல்லாது, பாலில் இருந்து எடுக்கப்படும் மற்ற பொருட்களில் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் கவனம் செலுத்துவதால் விவசாயிகளூக்கு போதிய சம்பளம் அளிக்க முடிகிறது. தயிர், லஸ்ஸி, பனீர், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களுக்கு பாலை விட அதிக விலை கிடைப்பதால், விவசாயிகளுக்கு அதிக ஊதியம் தருவதில் எந்த சிக்கலும் இவர்களுக்கு இல்லை.

ஹெரிடேஜின் மாடல்

வியாபாரிகளிடமிருந்து நாளுக்கு இரண்டு முறை பாலைக் கொள்முதல் செய்ய, பால் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. காலத்திற்கும் பகுதிக்கும் ஏற்றவாறு, பாலில் எருமைப் பாலும் பசும் பாலும் கலந்து இருக்கும்.


மதிப்புக் கூட்டு  தயாரிப்புகளுக்கு அதிக தரமுள்ள பால் தேவைப்படுவதால் செயல்திறன் மற்றும் உயர்தரம் என்பது ஹெரிடேஜ்  நிறுவனத்தின் நோக்கமாக திகழ்கிறது, என்கிறார் ப்ராஹ்மணி.

“ஏறத்தாழ 100 சதவீதம் பால், விவசாயிகளிடமிருந்து நேரடியாக சேகரிப்பு மையங்கள் வழியாக வருகிறது. அந்த மையங்களில் பாலின் அளவையும் தரத்தையும் அளவிட வெவ்வேறு தொழில்நுட்பங்கள் பொருத்தப் பட்டுள்ளது. பாலின் தரத்தை எவ்விதத்திலும் மாற்ற முடியாமல் இருக்க பால் ஆய்வு இயந்திரங்கள் உள்ளன,” என்று ப்ரஹ்மணி கூறுகிறார்.

சேகரிப்பு மையங்களிலிருந்து, பால் பதப்படுத்தப்படும் இடத்திற்கு (ஹெரிடேஜ்ஜிடம் தற்போது 16 பதப்படுத்தும் இடங்கள் உள்ளன) அனுப்பப்பட்டு, அங்கிருந்து விநியோகஸ்தருக்கோ அல்லது விற்பனையாளருக்கோ அனுப்பப்படுகிறது.

ஹெரிடேஜ் பால் பதப்படுத்தும் இடம்

“பால் உள்ளூரில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு அங்கேயே பதப்படுத்தப்படுகிறது.  இதனால் இந்த செயல் அனைத்தும் 24 மணி நேரத்தில் முடிகிறது. அதனால் பொருட்கள் நீண்ட நாட்கள்  கெடாமல் இருக்கும். ஹெரிடேஜ் ஃபுட்ஸின் வலைதளத்தின்படி பாலை 4°Cல் வைத்திருந்தால், 48 மணி நேரம் கெடாமல் இருக்குமாம்.


பால், மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், 1.2 லட்சம் பாரம்பரிய சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும், 500க்கும் மேற்பட்ட அங்காடிகள் மூலமாகவும், பிக்பாஸ்கெட் போன்ற வலைதளங்கள் மூலமாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.

“அதைத் தவிர  எங்களின் தயாரிப்புகளை மட்டுமே விற்க 1400 பிரத்தியேக பார்லர்கள் திறந்துள்ளோம்,” என்றார்.

புது இடங்களில், ஹெரிடேஜ் பாலின் விலை அங்கு இருக்கும் உள்ளூர் கூட்டுறவு நிர்ணயிக்கும் அடிப்படை விலையை சார்ந்து இருக்கும். ஆனால் குறிப்பிடத்தக்க அளவு ஹெரிடேஜ் வியாபாரம் உள்ள இடங்களில் பாலும் மற்ற தயாரிப்புகளும் சற்று உயர்ந்த விலைக்கு விற்கப்படும்.

“பாலை பொறுத்தவரை நகர்ப்புறத்தில் வாழும் நடுத்தர மற்றும் மேல்தட்டு வாடிக்கையாளர்கள் தான் எங்கள் இலக்கு. மற்ற தயாரிப்புகளான லஸ்ஸி, ஐஸ்கிரீம், போன்றவைக்கு, இளைஞர்கள் எங்கள் இலக்கு.”

எதிர்காலம்

2482 கோடிக்கு வியாபாரம் இருந்தாலும், பல லட்சம் பங்குதாரர்களான விவசாயிகளுடன் வேலை செய்வதில் தனக்கேற்ற சவால்களை ஹெரிடேஜ் சந்தித்து வருகிறது. அந்த சவால்களை எதிர்பார்த்து அதை சரி பார்ப்பதில் தான் ஹெரிடேஜ் முனைப்புடன் செயல்படுகிறது.

“எங்களுடைய பெரிய சவாலே பாலும் அதன் தயாரிப்புகளும் பருவம் சார்ந்த்து. கோடை காலத்தில் அதிகம் விற்கும்போது, பாலின் உற்பத்தி குறைவாக இருக்கும். குளிர்காலத்தில் பால் வியாபாரம் குறைவாக இருக்கும் போது உற்பத்தி மிக அதிகமாக இருக்கும். அதனால், பொருட்களை கொள்முதல் செய்து கெடாமல் பாதுகாப்பதே மிகப்பெரிய சவால். தினசரி கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.”

பால் என்பது அதிக-அளவு, குறைந்த-லாபம் தரக்கூடிய ஒரு வியாபாரம், என்றாலும் இதர தயாரிப்புகளின் மார்க்கெட்டிங்க் மற்றும் விற்பனையின் மூலம் அதை ஈடு கட்ட முடியும் என்று நம்புகிறார் ப்ரஹ்மணி. தற்போது நிலையான முன்னேற்றமும் லாபமும் தரும் இந்த தயாரிப்புகளின் நிலையை சந்தையில் உயர்த்த ப்ரஹ்மணி முயற்சியில் இறங்கி இருக்கிறார்.


அமுலின் பிரபலமான விளம்பரங்கள், கையினால் வரைந்த சின்னம், “அட்டர்லி பட்டர்லி டெலிஷியஸ்” போன்ற கோஷங்கள் போல, ஹெரிடேஜ் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக உரையாடும் யுக்தியை கையாண்டு இருக்கிறார்கள்.

ஹெரிடேஜ் பொருட்கள்

“நீங்கள் குழந்தையாக இருந்த போது உங்களை பால் குடிக்க வைக்க உங்கள் அம்மா சொன்ன “வெள்ளைப் பொய்கள்” என்ன என்ற ஒரு விளம்பரப் போட்டியை  நடத்தினோம். ஐசிசி  கிரிக்கெட் உலகக் கோப்பை 2019ன் போது ஒரு புதிர் போட்டி ஒன்று நடத்தி விளையாடியவர்களுக்கு பரிசுகள் வழங்கினோம்,” எங்கிறார் ப்ரஹ்மணி.


சந்திரபாபு நாயுடுவின் ஹெரிடேஜின் எதிர்காலத் திட்டம் ஆறு லட்சம் விவசாயிகளை சேர்வது. 2024 ஆண்டினை தனது இலக்காகக் கொண்டு இன்னும் பல புதிய தயாரிப்புகளுடன், அதை நோக்கி தனது பயணத்தைத் தொடர்கிறார் ப்ரஹ்மணி.


ஆங்கில கட்டுரையாளர் : பலக் அகர்வால் | தமிழில் : கெளதம்