நம் நாட்டின் பெண் குழந்தைகள் பலர் ஏன் பள்ளிக்குச் செல்வதில்லை?
அதிகளவிலான பெண் குழந்தைகளுக்கு மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. பெண் குழந்தைகளை பாரபட்சத்துடன் நடக்கும் போக்கு உள்ளது. பலருக்கு முறையான கல்வி வழங்கப்படுவதில்லை.
நாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்கிறோம். பிரமிக்கத்தக்க வளர்ச்சியை உலகம் சந்தித்து வருகிறது. சமூக நீதி, மரியாதை, பாலின சமத்துவம் போன்றவற்றிற்கு பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பு உறுதியளித்துள்ளபோதும் உலகம் முழுவதும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் அவர்களுக்கான உரிமை வழங்கப்படுவதில்லை.
இந்தியாவைப் பொருத்தவரை பெண் தெய்வங்கள் வழிபாடு செய்யப்பட்டாலும் பெண்களுக்கு அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை உண்மையில் வழங்குகிறோமா?
பல ஆண்டுகளாகவே பெண்கள் அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் சுரண்டப்படுகின்றனர்.
பெண் குழந்தை பிறந்தால் அதைக் குடும்பங்கள் கொண்டாடுவதில்லை. மாறாக சாபமாகவே கருதுகின்றனர். பெண் குழந்தைகள் சுகாதார பராமரிப்பு, கல்வி, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் போன்றவற்றில் பாலினம் சார்ந்த நிராகரிப்பை சந்தித்து வருகின்றனர்.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி பெண்கள் (65.46 சதவீதம்) மற்றும் ஆண்களின் (82.16 சதவீதம்) கல்வியறிவு விகிதத்தில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இது கிராமப்புறங்களில் மேலும் குறைவாக (58.75 சதவீதம்) காணப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு 21-வது பிரிவின் திருத்தத்தின்படி கல்வி அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படுகிறது. கல்வி உரிமை சட்டம் 2009, 6-14 வயது வரையுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கட்டாயமாக்குகிறது. 2011-ம் ஆண்டு கணக்கெடுக்கின்படி இன்னமும் ஆறு முதல் பதிமூன்று வயது வரையுள்ள 32 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு சென்றதில்லை. இதில் பெரும்பாலானோர் தலித், ஆதிவாசி மற்றும் முஸ்லீம் சமூகத்தினர்.
பெண் கல்விக்கான சட்டம், கொள்கைகள், திட்டங்கள் போன்றவை இருப்பினும் பெண் குழந்தைகள் ஏன் பள்ளிப் படிப்பை பெறுவதில்லை? வறுமை, குழந்தைத் திருமணம், பள்ளிப்படிப்பில் ஆர்வமின்மை, பள்ளி தொலைவில் அமைந்திருப்பது, பள்ளியிலும் பள்ளிக்குச் செல்லும் வழியிலும் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களினால் பெண் குழந்தைகள், குறிப்பாக ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.
சமூக மற்றும் கலாச்சார விதிமுறைகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதனால் பெண் குழந்தைகள் சுதந்திரத்தை அனுபவிக்கமுடியாமல் போகிறது. பெண் குழந்தைகள் வெவ்வேறு விதங்களில் பாகுபாடுகளையும் வன்முறைகளையும் சந்திக்கின்றனர். குடும்பத்தினர் பெண் குழந்தைகளை பாரமாக கருதுகின்றனர். குறிப்பாக பூப்படைந்த பிறகு பாதுகாக்கும் பொறுப்பை சுமையாக பார்க்கின்றனர். இதனால் விரைவாக திருமணம் செய்துவைக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
சமீபத்திய அறிக்கையின்படி அதிகளவிலான பெண் குழந்தைகளுக்கு மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 27 சதவீத பெண்களுக்கு அவர்களது பதினெட்டாவது பிறந்தநாளுக்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் குழந்தைத் திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தபடும் நிலை அதிகரிக்கிறது.
இந்திய கிராமப்புறங்களில் அதிகளவிலான பெண் குழந்தைகள் விவசாய வேலைகளிலும் வீட்டு வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். குறிப்பாக உடன்பிறந்தவர்களை பராமரிக்கும் பணிகளுக்கு பொறுப்பேற்கின்றனர். எனவே அவர்களுக்கு பள்ளிக்குச் செல்வதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த நிலையையும் மீறி பள்ளிக்குச் செல்லும் சிறுமிகள் பாலினம் மற்றும் சாதி சார்ந்த பாகுபாடுகளை பள்ளியில் சந்திக்கும் காரணங்களால் படிப்பில் ஈடுபடமுடிவதில்லை.
ஆசிரியர்களும் ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பாகுபாடு பார்க்கின்றனர். தனியாக ஒதுக்கப்பட்ட இருக்கைகள், சாதி சார்ந்த பாகுபாடு, மேல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் போன்ற வெவ்வேறு வகையான பாகுபாடுகள் பள்ளிகளில் காணப்படுகின்றன.
சில பள்ளிகள், பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளை சுத்தப்படுத்தும் பணிகளிலும் மாணவிகளை ஈடுபடுத்துகின்றன.
ஆசிரியர் பணிக்கான காலியிடங்கள் அதிகம் இருப்பதாலும் ஆசிரியைகளின் சதவீதம் குறைவாக இருப்பதாலும் ஒதுக்கப்பட்ட சிறுமிகளின் தேவைகளுக்கு தீர்வுகாண்பதில் கல்வி அமைப்பு கவனம் செலுத்துவதில்லை. கல்வி உரிமை மன்றம் அறிக்கையின்படி 4.1 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பீஹார், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காலியான பணியிடங்கள் அதிகபட்சமாக உள்ளன.
96 சதவீத குடிமக்களுக்கு ஆரம்ப பள்ளி வசதி இருப்பதாக அரசு தரவுகள் தெரிவிக்கிறது. ஆனால் மாணவிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை உடனடியாக வழங்காத பட்சத்தில் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் அரசின் சமீபத்திய முயற்சியினால் மாணவிகள் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்யும் விகிதம் அதிகரிக்கக்கூடும்.
பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கு பள்ளிகளிலும் சமூகத்திலும் சிறுமிகளை பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்கவேண்டியது கட்டாயமாகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் மழலையர் பராமரிப்பு அல்லது பால்வாடி இருப்பதை உறுதிசெய்யவேண்டும். இதனால் சிறுமிகள் தங்கள் உடன்பிறந்தவர்களை பராமரிக்கும் பணியிலிருந்து விடுபட்டு பள்ளிப்படிப்பைத் தொடரலாம். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களின் தேவைகளுக்கு தீர்வுகாண ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு அமைச்சகம் பயிற்சி அளிக்கவேண்டும்.
ஆங்கில கட்டுரையாளர் : சீமா ராஜ்புத் | தமிழில் : ஸ்ரீவித்யா
(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துகளாகும். எந்தவிதத்திலும் யுவர்ஸ்டோரியின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை.)