சுந்தர்பன் கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவும் 22 வயது ஆர்வலர்!
ஆயுஷ் சர்தா தன்னார்வலர்களுடன் இணைந்து பாலி கிராம மக்களுக்கு திறன் பயிற்சியளித்து குழந்தைகளுக்கு கல்வி உதவியும் வழங்கி வருகிறார்.
சுந்தர்பன் சதுப்புநிலக் காடுகள் நிறைந்த பகுதி. இங்கு 102-க்கும் அதிகமான தீவுகள் உள்ளன. இதில் பெரும்பாலான இடங்களில் மக்கள் வசிப்பதில்லை. 260-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், முதலை, டால்பின், பெங்கால் புலி மற்றும் ஏராளமான தாவரங்களும் விலங்குகளும் வசிக்கின்றன.
அடுத்தடுத்து வரும் புயல் தாக்கத்தால் பல தீவுகள் அழிவதும் புதிதாக உருவாவதும் வாடிக்கையாகிவிட்டது.
பல்வேறு தீவுகள் அடங்கிய இந்தப் பகுதியில் வசிக்கும் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 54 தீவுகளில் வசிப்பவர்கள். இந்தத் தீவுகள் மக்கள் வாழத்தகுந்த இடங்கள். பண்ணை, மீன் பிடிப்பது, தேன் சேகரிப்பு போன்றவையே இவர்களது வாழ்வாதாரம்.
கொரோனா பெருந்தொற்று, ஆம்பன் புயல் ஆகியவை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள் சேதமடைந்தன. ஏற்கெனவே மோசமாக இருந்த இவர்களது நிலை மேலும் மோசமானது.
22 வயதானவர் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆயுஷ் சர்தா. இவர் இந்த கிராம மக்களுக்கு புதிதாக வீடு கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எட்டு கிராமங்களில் 1,200 வீடுகள் கட்ட நன்கொடை வசூலித்தார்.
ஆயுஷ் பள்ளி பருவத்திலேயே தன்னார்வப் பணிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். 2015-ம் ஆண்டு நேபால் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்புவதற்காக ஆயுஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து நிவாரணப் பொருட்கள் சேகரித்தார்.
சுந்தர்பன் கிராம மக்களுடன் பணியாற்றியபோதுதான் சமூக நிறுவனம் தொடங்கும் எண்ணம் தோன்றியுள்ளது. நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டில் ஆயுஷ் எப்போதும் அக்கறைக் காட்டினார்.
இவர் தனது நண்பர்களுடன் இணைந்து திரட்டி அனுப்பும் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து இவரது நண்பர்கள் குழு ஆய்வு செய்தது. ஆண்கள் பணிபுரிவதை நிறுத்திவிட்டு என்ஜிஓ-விடம் கொடுத்த பட்டியலில் அத்தியாவசியமற்ற பொருட்களையும் இணைத்திருந்ததை அவர் தெரிந்துகொண்டனர்.
“அப்போதுதான் சமூக தொழில்முனைவு குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன். ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கினோம். இதனால் நிலையான வருவாய் கிடைக்க வழி செய்யப்பட்டது,” என்கிறார்.
கிராமத்தினர் பாரம்பரியமாக வருவாய் ஈட்டி வந்த தொழிலையே ஊக்குவிக்கும் வகையில் ஆர்கானிக் தேன் பிராண்ட் உருவாக்கினார். இதன் மூலம் கிராமத்தினர் ஹைபிஸ்கஸ் தேன் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். இந்தப் பகுதியில் இந்தச் செடிகள் ஏராளமாக இருந்தன. இதனால் இது சிறந்த வாய்ப்பாகவே அமைந்தது.
உள்ளூர் மக்கள் மரங்களுக்கோ விலங்குகளுக்கோ தேனீக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை. சுந்தர்பன் பகுதியில் பண்ணை மற்றும் தேனீவளர்ப்பு மூலமாகவே 90 சதவீத வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
“கிராம மக்கள் இயற்கையுடன் ஒன்றியே வாழ்கிறார்கள்,” என்றார்.
ஸ்வீட்னஸ் ஆஃப் எதிக்ஸ் (Sweetness of Ethics) என்பது ஆயுஷின் சமூக நிறுவனம். இந்நிறுவனம் தேன் தயாரிப்பை சந்தைப்படுத்துகிறது.
நேபால் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆயுஷ் Ek Packet Umeed என்கிற மாணவர் தன்னார்வக் குழு அடங்கிய என்ஜிஓ தொடங்கினார். இதன் ஒரு பகுதியாகவே ‘ஸ்வீட்னஸ் ஆஃப் எதிக்ஸ்’ என்கிற தனிப்பட்ட முயற்சியைத் தொடங்கினார். தேன் தயாரிப்பை சந்தைப்படுத்த வலைதளம் அமைத்தார்.
விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகையில் 70 சதவீதம் சமூகத்திற்காகவே செலவிடப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீதம் பிராண்டை சந்தைப்படுத்த செலவிடப்படுகிறது.
இதுதவிர அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் மற்ற திட்டங்களிலும் ஆயுஷும் அவரது நண்பர்களுக்கும் பங்களிக்கின்றனர்.
“கங்கை நதி சுந்தர்பன் பகுதியை இரண்டாகப் பிரிக்கிறது. இதில் ஒரு பகுதி தொலைவில் அமைந்திருப்பதால் ஸ்டீமர் பயன்படுத்தியே செல்லவேண்டும்,” என்றார்.
Ek Packet Umeed குழு பாதிப்புகளை மதிப்பிடவும் உள்ளூர் மக்களின் தேவையைப் புரிந்துகொள்ளவும் உள்ளூர் குழு ஒன்றை நியமித்தது.
“மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தன. படகுகள் மூலமாகவும் அங்கு செல்லமுடியவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில் பணிபுரிந்து வந்த என்ஜிஓ-க்களுடன் பேசினோம். அதைத் தொடர்ந்து நாங்கள் அணுகக்கூடிய 15 நிறுவனங்களின் பட்டியலை உருவாக்கினோம்,” என்றார்.
இந்த நிறுவனங்களை நடத்துபவர்களுடன் ஆயுஷ் உரையாடினார். இதிலிருந்து 3 நிறுவனங்களைத் தேர்வு செய்தார். இதில் பிரசேந்ஜித் மண்டல் நடத்தும் சுந்தர்பன் ஃபவுண்டேஷன் நிறுவனமும் அடங்கும்.
மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த விதவைப் பெண்களுக்கு இந்த ஃபவுண்டேஷன் ஆதரவளிக்கிறது. அவர்களுக்கு திறன் பயிற்சி, குழந்தைகளுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, இலவச கண் பரிசோதனை, இலவச கண்ணாடி போன்றவை வழங்கப்படுகிறது.
“அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எங்கள் மையத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பயிற்சியளித்து பாடங்கள் முழுமையாகப் புரிந்துகொள்வதை உறுதிசெய்கிறோம். மாலை நேரங்களில் தொழில்சார் பயிற்சியளிக்கப்படும். கதர் ஆடை நெய்வது, எலக்ட்ரிக்கல் பணி, பிளம்பிங், ஆங்கிலம் பேசுதல் உள்ளிட்டவற்றைக் கற்றுக்கொடுக்கிறோம். இதன் மூலம் அருகிலுள்ள ஹோட்டல்களில் இவர்களுக்குப் பணி கிடைக்க வாய்ப்புண்டு. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக 2,000 மரங்கள் நட்டோம். மா, பலா ஆகியவற்றை வளர்க்கிறார்கள்,” என்றார்.
Ek Packet Umeed சுய உதவிக் குழுக்களை ஆர்கானிக் ஸ்டோர்களுடன் இணைக்கிறது. நியாயமான விலையில் இவர்கள் பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள்.
சுழற்சி முறை பயிர் சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர். இதனால் நிலம் நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருப்பது தவிர்க்கப்படும்.
“எங்கள் முயற்சிகளால் ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு முறையான கல்வி அளிக்கப்பட்டது. இன்று பாலி கிராமத்தினரின் சராசரி வருவாய் 2,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக அதிகரித்துள்ளது,” என்றார்.
இந்த கிராமத்தில் பள்ளி ஒருபுறமும் தொழில்சார் பயிற்சி மையம் மற்றொருபுறமும் இடையில் சுகாதாரம் மையமும் அமைக்க இக்குழு திட்டமிட்டு வருகிறது.
“சில குறிப்பிட்ட அம்சங்களை ஒழுங்கமைத்த பின்னர் அடுத்த கிராமத்தை மேம்படுத்தும் பணியைத் தொடங்க உள்ளோம். அடுத்த பத்தாண்டுகளில் 20-க்கும் அதிகமான கிராமங்களுக்கு உதவ திட்டமிட்டோம்,” என்றார் ஆயுஷ்.
ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா