காணாமல் போன 3,000 குழந்தைகளை குடும்பங்களுடன் சேர்த்து வைத்துள்ள சமூக ஆர்வலர்!
குழந்தைத் தொழிலாளர் முறையையும் மனிதக் கடத்தலையும் முடிவிற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் தொழில்முனைவர், சமூக ஆர்வலரான வினீத் மெஹ்ரா.
இந்தியாவில் இன்றளவும் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சாலையோர உணவகம், சுரங்கம், புகையிலை மற்றும் பட்டாசு தொழிற்சாலை என பல்வேறு இடங்களில் குழந்தைகள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 10.1 மில்லியன் குழந்தைகள் தொழிலாளிகளாக இருப்பதாகவும் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் இது 13 சதவீதம் பங்களிப்பதாகவும் யூனிசெப் தெரிவிக்கிறது. அதாவது இந்தியாவில் உள்ள பத்து தொழிலாளர்களில் ஒருவர் குழந்தைத் தொழிலாளர் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் 14 வயது வரை இலவசக் கட்டாய கல்வியும் மதிய உணவும் அளிக்கப்படவேண்டும் என்கிற சட்டம் இருப்பினும் குழந்தைகள் இவ்வாறு வேலையில் அமர்த்தப்படுகின்றனர்.
ஆக்சம் இந்தியா 2018ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த நிலைமையில் சிறிதளவில் மாற்றம் ஏற்படவில்லை. இன்றளவும் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் குழந்தைகள் குப்பைகளை பொறுக்குவதையும் டீக்கடைகளிலும் சிறு உணவங்களிலும் உணவு பரிமாறுவதையும் சிறு வேலைகளில் ஈடுபடுவதையும் பார்க்கமுடிகிறது.
வினீத் ஜே மெஹ்ரா DOT என்கிற நிறுவனத்தின் நிறுவனர். இவர் பசுமைப் போக்குவரத்து தீர்வுகளை வழங்கி வருகிறார். இவர் இந்த எண்ணிக்கையைக் கண்டு வருந்தினார். இவரால் இதை எளிதாகக் கடந்து சென்றுவிடமுடியவில்லை. இவர் தற்போது குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கடத்தப்பட்டு கட்டாயமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு உதவி வருகிறார்.
வினீத் தனது ஸ்டார்ட் அப்பை வளர்ச்சியடையச் செய்வதில் கவனம் செலுத்துகிறார். அதுமட்டுமின்றி ரைனா குழுமத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் ரோமி ஹவாத் உடன் இணைந்து 2015-ம் ஆண்டு Global Sustainability Network (GSN) இணை நிறுவனர் ஆனார்.
”GSN-ல் ஏழ்மை, மனித உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்குமான நிதிச்சேவை, வேலைவாய்ப்பு இல்லாமை போன்ற முக்கியப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்கிறோம். என்னுடைய பணி காரணமாக வாடிக்கன் மற்றும் அமெரிக்காவில் செயல்பட வாய்ப்பு கிடைத்தது,” என்று வினீத் தெரிவித்தார்.
வினீத் மேலாண்மை மற்றும் நிதிப் பிரிவில் இரண்டு பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். முன்னர் யூகே-வைச் சேர்ந்த முதலீட்டு வங்கியில் பணியாற்றியுள்ளார். இந்த வங்கி ஸ்டீல் மற்றும் தொடர்புடைய பொருட்களின் வர்த்தகம் சார்ந்து செயல்படுகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு
வினீத் முக அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காணாமல் போன சுமார் 3,000 குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் சேர்த்துள்ளார். விமான நிலையங்களில் பயணிகள் அடையாளம் காண்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்படும். இதைத் தவிர்க்க உதவும் வகையில் இதற்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
டெல்லியின் நெரிசல் மிகுந்த சாலைகளில் காணாமல் போன, கடத்தப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களது குடும்பங்களுடன் ஒன்றுசேர்க்க நிகழ்நேர அடிப்படையில் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தமுடியும் என்பதை வினீத் உணர்ந்தார்.
ஜிஎஸ்என் உறுப்பினரான வினீத் மற்றொரு ஜிஎஸ்என் ஆதரவாளர் மற்றும் நோபல் பரிசு வென்றவருமான கைலாஷ் சத்யார்த்தியுடன் ஆலோசனை நடத்தினார். இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு தலைநகரில் துன்புறுத்தப்பட்ட குழந்தைகளைக் கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். டெல்லி காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் 2017-ம் ஆண்டு சோதனை முயற்சியாக நகரில் ஆறு கேமராக்களை நிறுவினார்.
நான்கு நாட்களில் கைலாஷ் சத்யாத்ரியின் குழு ஒரு தகவல் அனுப்பியது. சுமார் 10 முதல் 20 குழந்தைகள் அவர்களது குடும்பங்களுடன் சேர்ந்திருப்பார்கள் என்றே வினீத் எண்ணினார். ஆனால் ஏப்ரல் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலும் 2,930 குழந்தைகள் கண்டறியப்பட்ட செய்தியைக் கேட்டு வினீத் ஆச்சரியமடைந்தார். அந்தக் குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் ஒன்று சேர்க்க உதவுவதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.
”நான்கு நாட்களுக்குப் பிறகு கைலாஷ் சத்யார்த்தி குழுவினர் தகவல் அனுப்பினர். காணாமல் போன குழந்தைகளின் புகைப்படங்களுடன்கூடிய ஹார்ட்டிரைவும் முகத்தை அடையாளம்காணக்கூடிய ஆறு கேமராக்களும் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் ஸ்கேன் செய்யப்பட்டு ஒப்பிட்டப்பட்டது. முக அடையாள தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஜிஎஸ்என் இதை சாத்தியப்படுத்தியது,” என்றார் வினீத்.
குழந்தைத் தொழிலாளர் பிரச்சனைக்குத் தீர்வு
சமூக தொழில்முனைவரின் நிறுவனமான ஜிஎஸ்என் உமிழ்வு தரநிலைகள், கல்வியறிவு, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கப்படுவதை கண்காணிப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறது.
2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) ஆதரித்தது. இவை நிலையான வளர்ச்சியை எட்டுவதற்காக 17 உலகளாவிய இலக்குகளின் தொகுப்பாகும். இதைத் தொடர்ந்து வினீத் தலைமையிலான நிறுவனம் இந்த நோக்கத்திற்காக செயல்படத் தொடங்கியது. இது குறித்து வினீத் கூறும்போது,
“இந்த இலக்குகளை 2030ம் ஆண்டில் எட்டவேண்டும் என 193 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. ஆனால் நாங்கள் அதுவரை காத்திருக்க விரும்பவில்லை. குறிப்பாக மைகா சுரங்கங்களில் குழந்தைகள் ரத்தத்தை சிந்தி உழைக்கின்றனர். பெயிண்ட் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யவே குழந்தைகள் இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தத் தயாரிப்புகள் ஆட்டோமொபைல் நிறுவனங்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இலக்குகளை காரணம் காட்டி நாடுகள் நடைமுறைப்படுத்துவதைத் தாமதப்படுத்தக்கூடாது. மாறாக ஒன்றிணைந்து செயல்படுத்தவேண்டும். பெருநிறுவனங்களை இணைத்துக்கொண்டு பல்வேறு தளங்களின் மூலம் தீர்வுகாணவேண்டும். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை 2030-ம் ஆண்டில் எட்டமுடியும்,” என்றார்.
நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த நோக்கத்திற்கான தீர்வு இன்னும் முழுமையடையவில்லை. குழந்தைத் தொழிலாளி முறையையும் கொத்தடிமை முறையையும் ஒழிக்கவேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வுகாணவேண்டும். இதற்காக முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் வினீத் கவனம் செலுத்துகிறார்.
ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாகவும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகள் மூலமாகவும் இரண்டு மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே வினீத்தின் லட்சியம்.
அவர் கூறும்போது,
“விநியோக சங்கிலி செலவுகளை குறைப்பதன் மூலம் மட்டுமே மதிப்பை உருவாக்காமல் நீண்ட கால நிலையான நடைமுறைகள் மூலம் லாபத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் எங்கள் நிறுவனம் செயல்படுகிறது. இதனால் நிதிநிலை மேம்படுவதுடன் நிறுவனத்தின் சூழலும் மேம்படும். இதன்மூலம் எங்களால் அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கமுடிந்தது,” என்றார்.
இளம் தலைமுறையினரின் பங்களிப்பு
வினீத் குழந்தைத் தொழிலாளர், மனித கடத்தல் போன்ற பிரச்சனைக்கு தீர்வுகாண்பதுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதிலும் கவனம் செலுத்துகிறார். இதற்காக ‘காமிக்ஸ் ஃபார் சேஞ்ச்’ என்கிற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிகழ்வு 2019-ம் ஆண்டு டிசம்பர் 10ம்தேதி மும்பையில் மனித உரிமைகள் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஐக்கிய நாடுகளின் 17 உலகளாவிய இலக்குகளை எட்டுவதிலும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினர் பங்களித்து பொறுப்பேற்க ஊக்குவிக்கப்பட்டனர்.
நகைச்சுவை என்பது பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் கற்பித்தல், திறந்த மனதுடன் உரையாடுதல், ஒன்றிணைதல் ஆகியவற்றை சாத்தியப்படுத்தும் திறன்கொண்டது என்று வினீத் கருதுகிறார். எனவே இந்நிகழ்விற்கு நகைச்சுவையைத் தேர்வுசெய்தார். ‘காமிக்ஸ் ஃபார் சேஞ்ச்’ முயற்சியை உலகளவில் எடுத்துச்சென்று நகைச்சுவை மூலம் கல்லூரி மாணவர்களிடையே நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்ட ஊக்குவிக்கவேண்டும் என்பதே வினீத்தின் அடுத்தகட்ட இலக்கு.
”நகைச்சுவை என்பது உலகளவில் அனைவருக்கும் பொருந்தக்கூடியது. இது சமூகப் பிரச்சனையை மக்களிடையே எடுத்துச்செல்ல உதவும் வலிமையான ஆயுதம்,” என்றார்.
தற்போது மேற்கொண்டு வரும் முயற்சிகள் வருங்காலத்தில் தொடரும் என்றும் தனது சக நண்பர்களிடம் இருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ள இருப்பதாகவும் வினீத் தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வர கைலாஷ் சத்யார்த்தி மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இருந்தும் அதிகம் கற்றுக்கொள்வதாக தெரிவிக்கிறார்.
அவர் கூறும்போது,
“நவீன அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர்கள், பருவநிலை தொடர்பான அவசரகால நடவடிக்கைகள், அகதிகள் பிரச்சனை, வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவின்மை, சமத்துவமின்மை என மனிதர்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வர அதிக முயற்சிகள் தேவைப்படுகிறது. நான் என்னை சுயபரிசோதனை செய்துகொண்டபோது என்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தை மறுபரிசீலனை செய்தேன்.
அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைதல், அனைவருக்குமான வேலைவாய்ப்பு, நவீன அடிமைத்தனம் மற்றும் மனிதக் கடத்தலை முடிவிற்கு கொண்டு வருவது போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ணா ரெட்டி | தமிழில்: ஸ்ரீவித்யா