கை நழுவிய எம்பிஏ: தெருவில் டீ விற்று ரூ.3 கோடி டர்ன் ஓவர் செய்யும் ‘எம்பிஏ சாய்வாலா’
வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், எதுவுமே முடியாததல்ல என்பதற்கு வாழும் உதாரணமாய் பல வெற்றியாளர்கள் நம் முன் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரபுல் பில்லோர் (Prafull Billore).
வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், எதுவுமே முடியாததல்ல என்பதற்கு வாழும் உதாரணமாய் பல வெற்றியாளர்கள் நம் முன் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரபுல் பில்லோர்.
தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தெருவில் டீ விற்பவராக தனது எதிர்காலத்தை துவக்கிய பிரபுல், இன்று தனது 22 வயதில் 'எம்பிஏ சாய்வாலா' 'MBA Chai Wala' என்ற உணவகத்தின் முதலாளியாக, ஆண்டிற்கு ரூ.3 கோடி டர்ன் ஓவர் செய்யும் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார்.
நாடு முழுவதும் பல இடங்களில் இவரது 'எம்பிஏ சாய்வாலா' கடைக்கு நிறைய கிளைகள் உள்ளன. இந்த வெற்றி அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. பல அவமானங்களை, உதாசீனங்களைத் தாண்டி, அவர் எடுத்த துணிச்சலான முடிவுகளால், தெளிவான சிந்தனையால் சாத்தியமாகி இருக்கிறது.
யார் இந்த பிரபுல்? எம்.பி.ஏ சாய்வாலா என்ற சாம்ராஜ்ஜியத்தை அவர் எப்படி உருவாக்கினார் என்று தெரிந்து கொள்ளலாம்.
மத்திய பிரதேசத்திலுள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுல். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை மற்ற இளைஞர்களைப் போல், எதிர்காலத்தை நோக்கிய பயத்தோடு இருந்தவர் தான் இவரும். பி.காம் முடித்ததும், மேற்கொண்டு எம்பிஏ படிக்க விரும்பியுள்ளார். குடும்பத்தாரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, அதற்கான நுழைவுத்தேர்வை எழுதியுள்ளார் பிரபுல். ஆனால், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் அவருக்கு எம்பிஏ படிக்க இடம் கிடைக்கவில்லை.
இதனால், மனமுடைந்து போன பிரபுல், மன அழுத்தத்தைக் குறைக்க இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யத் தொடங்கினார். அப்போது அவருக்கு அகமதாபாத் பிடித்துப் போனது. எனவே, அங்கேயே தங்குவது என அவர் முடிவெடுத்தார்.
“எம்பிஏ படித்தால் நல்ல வேலை கிடைக்கும், கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் தான் அதனை படிக்க விரும்பினேன். கேட் நுழைவுத் தேர்வுக்காக எனது கிராமத்தில் இருந்து சென்று அருகில் இருந்த நகரத்தில் தங்கிப் படித்தேன். ஆனாலும் என்னால் நல்ல மதிப்பெண்களைப் பெற இயலவில்லை. எதிர்பார்த்த கல்லூரிகளில் இடமும் கிடைக்கவில்லை. நான் அகமதாபாத் ஐஐஎம்-இல் படிக்க விரும்பினேன். எனவே அதன் அருகிலேயே தங்குவது என முடிவு செய்தேன்,” என தன் ஆரம்பகால வாழ்க்கை பற்றி பகிர்ந்தார் பிரபுல்.
வருமானத்திற்காக அருகில் இருந்த மெக்.டொனால்ட் கடை ஒன்றில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார் பிரபுல். தினச்சம்பளம் ரூ.200 என்ற கணக்கில் மாதம் ஆறாயிரம் சம்பளமாகக் கிடைத்துள்ளது. அந்தக் கடையில் பணிக்கு சேர்ந்த குறுகிய காலத்திலேயே தனது ஆர்வம் மற்றும் நம்பிக்கையால் கடையின் கணக்காளர் ஆகும் அளவிற்கு பதவி உயர்வு பெற்றார்.
அப்போதுதான் அவருக்கு அந்த யோசனை உதித்துள்ளது. ‘நமது உழைப்பை ஏன் யாரோ ஒருவருடைய வெற்றிக்காக செலவிட வேண்டும்?’ என்ற கேள்வி தான், அவரை மெக்டொனால்ட் கடையில் இருந்து வெளியேற வைத்தது. அதனைத் தொடர்ந்து தனது தந்தையிடம் எம்பிஏ படிக்கப் போவதாகச் சொல்லி ரூ.8 ஆயிரம் கடனாகப் பெற்று, சிறிய அளவில் டீ வியாபாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
“20 வயதில் நான் டீ விற்கிறேன் என்பதைக் கேட்டு, என் பெற்றோர் அதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் எனது எம்பிஏ படிப்பை பாதியில் கைவிட அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் உண்மையைச் சொல்வதென்றால் எம்பிஏ வகுப்பில் கற்றுக் கொள்ள முடியாததைக்கூட , நேரடியாக ஒரு கடையில் கணக்காளராக என்னால் பெற முடிந்தது. அந்த அனுபவம் நிச்சயம் எம்பிஏ மாணவராக இருந்திருந்தால்கூட எனக்குக் கிடைத்திருக்காது,” என்கிறார் பிரபுல்.
தான் கல்லூரியில் படித்த காலத்தில் ஆகட்டும், வேலை தேடிய காலங்களில் ஆகட்டும் டீ தான் பெரும்பாலும் தனக்கு நல்ல உணவாக, தெம்பூட்டுவதாக இருந்ததாகக் கருதிய பிரபுல், அதனையே தனது தொழிலாக செய்ய முடிவெடுத்தார். பெற்றோரிடம் எம்பிஏ படிக்கப் போவதாக பொய் சொல்லியடியே, தனது டீ வியாபாரத்தை அவர் கவனிக்கத் தொடங்கினார்.
“புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது, அதில் முதலீடு செய்வதற்கு தேவையான பணம் என்னிடம் இருக்கவில்லை. முதலில் 10 முதல் 15 லட்ச ரூபாய் முதலீட்டில் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கத்தான் திட்டமிட்டேன். ஆனால் தொழில் நஷ்டமடைந்தால் நான் கடனாளி ஆவேன் என பயந்தேன். எனவே குறைந்த முதலீட்டில், சிறிய அளவில் எனது தொழிலைத் தொடங்க முடிவு செய்தேன். அப்பாவிடம் வாங்கிய பணத்தில் சில பாத்திரங்களை வாங்கி, திறந்தவெளியில் டீ தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினேன்,” என்கிறார் பிரபுல்.
எம்பிஏ ஒரு பக்கம் டீக்கடை மறுபக்கம்
காலை முதல் மாலை வரை மெக்டொனால்டில் வேலை பார்த்த பிரபுல், மாலையில் மட்டும் டீக்கடையை நடத்துவது என முடிவு செய்தார். முதல்நாள் எவ்வளவோ முயற்சி செய்தும் பிரபுல்லால் ஐந்து கப் டீ மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. அதற்கடுத்து வந்த நாட்களிலும் டீ வியாபாரம் சூடு பிடிக்கவில்லை. அப்போது தான் தன் டீயில் என்ன குறை இருக்கிறது என ஆராயத் தொடங்கினார் பிரபுல்.
‘பாலின் தரம் சரியில்லை.. சர்க்கரை கூடுதலாக போடுகிறாய்..’ என வாடிக்கையாளர்கள் விமர்சனம் தெரிவித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக தனது குறைகளை மாற்றி, வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான டீயை கொடுக்க ஆரம்பித்தார் பிரபுல்.
இதனால் அவரது வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. மாதம் ரூ. 15 ஆயிரம் வருமானம் வரும் வகையில் குறுகிய காலகட்டத்திலேயே வளர்ந்தார் பிரபுல். இதற்கிடையே தன் பெற்றோரின் விருப்பத்திற்காக அருகில் இருந்த கல்லூரி ஒன்றில் பகுதி நேரமாக எம்பிஏ சேர்ந்தார். ஆனால் அதில் அவரால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. மீண்டும் தனது தொழிலிலேயே முழுக்கவனத்தையும் செலுத்துவது என முடிவு செய்தார் பிரபுல்.
“ஒரு ஆவரேஜ் ஸ்டூடண்ட் ஆன எனக்கு படிக்கும் போதே வேலை பார்ப்பது கடினமானதாக இருக்கவில்லை. எந்நேரமும் படித்து வகுப்பில் முதல் மாணவனாக வர வேண்டும் என நான் எப்போதுமே விரும்பியதில்லை. இதனாலேயே வகுப்புகள் முடிந்த பின்னர் எனக்கு நிறைய நேரம் ஓய்வாக கிடைத்தது. இதனால் நான் பி.காம் படிக்கும்போதே பகுதிநேரமாக வேலை பார்த்து மாதம் ரூ.25 ஆயிரம் சம்பாதித்தேன். என்னால் படிப்பையும், வேலையையும் ஒரே நேரத்தில் சரியாக நிர்வகிக்க முடிந்தது,” என்கிறார் பிரபுல்.
வழக்கம் போல், பிரபுலின் கதையிலும் சில வில்லன்கள் புகுந்தனர். பிரபுல்லால் வியாபாரம் பாதிக்கப்பட்ட மற்ற வியாபாரிகள் உள்ளூர் தாதாக்கள் மற்றும் அரசியல்வாதிகளைக் கொண்டு பிரபுல்லை மிரட்டத் தொடங்கினர். இதனால் வெற்றிகரமாகச் சென்று கொண்டிருந்த தனது வியாபாரத்தை பாதியிலேயே கைவிடும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டார் பிரபுல்.
ஆனாலும் மனம் தளர்ந்துவிடவில்லை அவர். 2019ல் தனது டீக்கடைக்கென பிரச்சினையில்லாத, நிரந்தரமான இடம் ஒன்றைத் தேர்வு செய்ய முடிவு செய்தார். அப்போது அருகில் இருந்த மருத்துவமனை ஒன்று அவரது கண்ணில் பட்டது. நேரடியாகச் சென்று அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினார். அவர்களது மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே தனது டீக்கடையை அமைக்க சம்மதம் வாங்கினார். அதுவரை நாடோடி போல் அலைந்து கொண்டிருந்ததால், தனது டீக்கடைக்கு பெயர் என ஒன்றை வைப்பதைப் பற்றி அவர் சிந்திக்கவேயில்லை. அப்போதுதான் முதன்முறையாக தனது டீக்கடைக்கென ஒரு பிராண்ட் நேம் உருவாக்க அவர் முடிவு செய்தார்.
எத்தனையோ பெயர்களை அவர் பரிசீலித்தார். இறுதியில் தனது டீக்கடைக்கு, ‘மிஸ்டர் பில்லோர் அகமதாபாத்’ எனப் பொருள் வரும் வகையில், ‘எம்பிஏ சாய்வாலா’ (MBA Chaiwala) எனப் பெயரிட்டார்.
‘எம்பிஏவே படிக்காத நீ எப்படி உன் கடைக்கு இப்படி ஒரு பெயர் வைக்கலாம்?’ பலர் அவரைக் கேலி செய்தனர். இதற்கிடையே அவர் படிக்கவில்லை டீ வியாபாரம் தான் செய்கிறார் என்பது அவரது பெற்றோருக்கும் தெரியவந்தது. தங்களது குடும்ப மானத்தை வாங்குவதாக பிரபுல்லை அவர்கள் திட்டினார்கள். ஆனால் இது தான் தனது எதிர்காலத்திற்கு சரியான பாதை என்பதில் தெளிவாக இருந்தார் பிரபுல். எனவே விமர்சனங்களைக் கண்டு அவர் அஞ்சவில்லை.
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. அவரது டீயின் சுவை அனைவருக்கும் பிடித்துப் போகவே அடுத்தடுத்து பல கிளைகளைத் தொடங்கினார். ஆசைப்பட்டது போலவே, எம்பிஏ சாய்வாலா இந்தியாவின் குறிப்பிடத்தக்க டீ பிராண்டாக மாறியது.
புதுவிதமாக வாடிக்கையாளர்களை கவர்ந்த பிரபுல்
வாடிக்கையாளர்களைக் கவர பிரபுல் எடுத்த வித்தியாசமான முயற்சிதான் அவரது வியாபாரத்தை பெருக்க பெரிதும் உதவியது. யாரும் அவரது டீயைக் கண்டு கொள்ளாதபோது, தனது படிப்பை அங்கு பயன்படுத்த முடிவு செய்தார் பிரபுல்.
ஆங்கிலத்தில் தன்னிடம் டீ சாப்பிட வரும்படி அவர் வாடிக்கையாளர்களை அழைத்தார். ஒரு டீ வியாபாரி இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசுவதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். தனது பேச்சு சாமர்த்தியத்தின் மூலம் புதிய வாடிக்கையாளர்களை நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றினார் பிரபுல்.
தனது வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பிய அவர், காதலர் தினத்தன்று சிங்கிள்களுக்கு இலவச டீ என அறிவித்தார். இந்த வித்தியாசமான அறிவிப்பு அவரது டீக்கடையை மக்களிடையே பிரபலப்படுத்தியது. அந்த விளம்பரத்தைப் பயன்படுத்தி திருமணங்கள் உள்ளிட நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் எடுக்கத் தொடங்கினார் பிரபுல்.
எந்த படிப்பு தனக்கு வரவில்லை என பிரபுல் கருதினாரோ, அந்த படிப்பே அவரை ஆசிரியராக அழைத்து கௌரவப்படுத்தியது. ஆம், ஐஐஎம்-ல் தொழில் மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பெடுக்க அழைப்பு விடுத்தனர். மகிழ்ச்சியோடு சென்று தனது அனுபவப் பாடங்களை வளரும் மாணவர்களுக்கு பிரபுல் சொல்லிக் கொடுத்தார்.
தொடர்ந்து பிரபுல் தன் தொழிலை விரிவுப்படுத்துவது எப்படி என்றே சிந்தித்து, அதனை செயல்படுத்திக் கொண்டே இருந்ததால், ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளிலேயே எம்பிஏ சாய்வாலா இந்தியா முழுவதும் பல கிளைகளை திறந்தது.
“என்னைப் பார்த்து ஏளனமாகப் பேசியவர்கள், கிண்டல் செய்தவர்கள் எல்லாம்கூட இப்போது என்னிடம் அறிவுரை கேட்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்வதெல்லாம், ‘டிகிரி என்பது ஒரு விசயமல்ல, ஞானம் தான் முக்கியம்’ என்பதுதான். நான் முழு நேர சாய்வாலா. நான் என்ன செய்கிறேனோ அதனை மிகவும் விரும்பியே செய்கிறேன்,” என்கிறார் பிரபுல்.
பிரபுல் தற்போது தனது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவராக மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை பேச்சாளராக பல்வேறு கல்லூரிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
பிரபுல்லின் நிறுவனத்தில் இப்போது சுமார் 20 பேர் வேலை செய்கின்றனர். கடந்த 2019-20ம் ஆண்டில் அவரது ஆண்டு டர்ன் ஓவர் ரூ.3 கோடி ஆகும்.
நினைத்த படிப்பை படிக்க இயலவில்லை என கவலைப் படுபவர்களுக்கு பிரபுல்லின் வாழ்க்கை நல்லதொரு பாடம். நிச்சயம் நாம் விரும்பிய படிப்பை படிக்க முடியாவிட்டாலும், நிச்சயம் வேறொரு துறையில் சாதிக்க முடியும். அதற்குத் தேவை தெளிவான திட்டமும், நம்பிக்கையும், உழைப்பும் மட்டுமே..’ என்பதுதான் பிரபுல்லின் எம்பிஏ சாய்வாலா மறைமுகமாகச் சொல்லும் பாடம்.
“உங்கள் கனவுகளை நம்புங்கள். யாருக்காகவும், எதற்காகவும் அதனை விட்டுக் கொடுக்காதீர்கள். உங்கள் பணியில் கவனமாக இருங்கள். முழு அர்ப்பணிப்புடன் நீங்கள் பணி செய்யும் போது, நிச்சயம் அதற்கான பலன் உங்கள வந்தடையும்,” இது தான் வளரும் தொழில்முனைவோருக்கு பிரபுல் சொல்லும் அறிவுரை.
தகவல் உதவி: இண்டியா டைம்ஸ் | தொகுப்பு: ஜெயசித்ரா