சிசிடிவி ஆப்ரேட்டர் சுபைர் ரகுமான் இன்று மாதம் ரூ.50 லட்சம் வருவாய் ஈட்டும் ரகசியம் என்ன?
திருப்பூரில் சிசிடிவி ஆப்ரேட்டராக இருந்த 26 வயதுள்ள இவர், ரூ.10 லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த இ-காமர்ஸ் நிறுவனம் மூலம் இப்போது விற்பனையில் சாதனை படைத்து வருகிறார்.
திருப்பூர், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழிலில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தொழில் நகரமாகும். இங்கு தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பின்னலாடைகள் தயாரிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 90 சதவீத காட்டன் உடைகள், திருப்பூரில் இருந்து தான் உற்பத்தியாகின்றன. பருத்தி பிரித்தெடுக்கும் ஆலைகள், உள்ளாடை உற்பத்தி ஆலைகள் என ஆயிரக்காணக்கான தொழிற்சாலைகள் இங்கு சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.
தொழில்துறைகள் வேகமாக வளர்ந்து வரும் நகரமான இது, இளம் தொழிலபதிர்களை உருவாக்குவதிலும் முதன்மையானதாக உள்ளது. அப்படித்தான், திருப்பூரின் பிரபலமான ஆடைகள் விற்பனையை ஆன்லைனில் செய்த சுபைர் ரகுமான், இன்று வளர்ந்து வரும் தொழில்முனைவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
சுபைர் ரகுமான், 2014ம் ஆண்டு திருப்பூரில் சிசிடிவி கேமரா ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்த இவர், கல்லூரியில் இருந்து வெளியே வந்த நாள் முதலே அலுவலகங்களுக்குச் சென்று சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியை செய்து வந்துள்ளார்.
சம்பளத்திற்காக வேலை பார்த்தாலும், சுபைரின் மனதில் குடிகொண்டிருந்த எண்ணமோ வேறு ஒன்று, அது தனக்கான சொந்தத் தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்பதே. ஆனால் அதற்கு சரியான துறையை தேர்தெடுக்க தெரியாமல் திக்கு திசையின்றி நின்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு சிசிடிவி கேமரா பொருத்த சென்றவருக்கு, போதி மரத்தில் புத்தர் அடைந்த ஞானம் போல தெளிவு கிட்டியது.
”நான் சிசிடிவி பொருத்த சென்ற நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அறிய ஆவலாக இருந்தேன். அந்நிறுவனத்தில் மேலாளரிடம் பேசியபோது, அவர் இ-காமர்ஸ் நிறுவனம் எவ்வாறு ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டுகிறது என்பதை தெளிவாக விளக்கினார். இந்த ஆலோசனை தான் சுபைருக்கு தூண்டுகோலாக அமைந்தது.
தானே ஒரு நிறுவனத்தை உருவாக்கினால் அதற்கான உற்பத்திக்கு அதிக முதலீடு தேவை என்பதை உணர்ந்த அவர், ஆன்லைன் வர்த்தகத்திற்கு அதிக முதலீடு தேவை இல்லை என்பதை அறிந்து உற்சாகமடைந்தார்.
தனது தொழிலை துவங்குவதற்கு முன்னதாக, திருப்பூரில் உள்ள பல்வேறு ஆடை உற்பத்தியாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், தனது நிறுவனத்திற்கான முதலீடு மற்றும் ஆன்லைனில் அதிக அளவில் விற்பனையாகும் ஆடைகள் குறித்து அறிய நண்பர்களுடனும் கலந்தாலோசித்ததாகவும் கூறுகிறார்.
2010ம் ஆண்டில் இஞ்சினியரிங் படித்த பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த சமயம். 80 சதவீத இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையின்றி அலைந்து கொண்டிருந்தனர். அப்படி ஒரு நெருக்கடியான சமயத்தில் வேலையை விட தீர்மானித்த சுபைர், 2015ம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஆயத்த ஆடைகளை வாங்கி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் "தி பேஷன் பேக்ட்ரி" நிறுவனத்தை தொடங்கினார்.
என்னிடம் இருந்த பணம் அனைத்தும் நிறுவனத்தை பதிவு செய்யவும், ஜி.எஸ்.டி. எண்ணை பதிவு செய்யவுமே பயன்பட்டன. அதனால் எனது நிறுவனத்தை முதலில் நான் சிறிய அளவில் ஆரம்பித்தேன். சிறிய அளவில் ஆடைகளை வாங்கி, அவற்றை ஆன்லைன் மூலம் விற்க ஆரம்பித்தேன்.
தொழில் தொடங்கிய சிறது நாட்களிலேயே, தனது நிறுவனத்தின் ஆடைகளை அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதள வணிக நிறுவனங்களின் பக்கத்தில் பட்டியலிட்டார். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு என கிடைத்து வந்த ஆர்டர்கள், நாளாக நாளாக அதிகரிக்கத் தொடங்கின.
ஆன்லைனில் ஆடைகளை வாங்கும் பெரும்பாலானோர், 5 அல்லது 6 செட் குழந்தைகளின் ஆடைகளை காம்போ பேக்குகளாக வாங்க, அதிக அளவில் விருப்பம் காட்டுவதை கவனித்தார். எனவே குழந்தை ஆடைகளுக்கான காம்போ பேக்குகளை தயாரித்த அவர், அதனை 550 ரூபாய் முதல் 880 ரூபாய் வரை விற்பனை செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சிறிய அளவில் லாபம் தந்த அந்த விற்பனையே, அவரது வியாபாரத்திற்கு பெரிய வரமாக அமைந்தது.
தனித்தனி ஆடை விற்பனையை விட, காம்போ விற்பனை அதிகக் கவனம் பெற்றது. எனது விற்பனைகளுக்கு குறைந்த லாபமே கிடைத்த போதிலும், ஆன்லைன் வர்த்தகத்தில் என்னால் நிறைய வாடிக்கையாளர்களை கவர முடிந்தது. இதனால் எனது ஆர்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது, என்கிறார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் சுபைர் பயன்படுத்திய யுக்தி அவருக்கு கைகொடுக்க ஆரம்பித்தது. நாளொன்றுக்கு ஒரு ஆர்டர் மட்டுமே கிடைத்து வந்த நிலை மாறி, இன்று ஒரு நாளைக்கு 200 முதல் 300 ஆர்டர்கள் வரை வந்து குவியத் தொடங்கியுள்ளன. அதன் மூலம் அவரது நிறுவனம் மாதத்திற்கு 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறது.
பிரத்யேக ஆடைகளை விற்பதற்கான ஒப்பந்தத்தில் அமேசான் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ள சுபைர், தற்போது ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் முதல் 30 லட்சம் மதிப்புள்ள யூனிட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பெருமிதத்துடன் தெரிவிக்கிறார்.
பேஷன் பேக்ட்ரியை நிர்வாகிக்க உதவுவது சுபைரின் கள ஆய்வு மற்றும் திறமை மட்டும் கிடையாது. அவரது அப்பாவும் தான், ஜவுளி உற்பத்தியில் பணியாற்றிய தனது தந்தையின் அனுபவமும், சவால்கள் நிறைந்த இந்தத் தொழிலை வெற்றிகரமாக வழிநடத்த அவருக்கு உதவியுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த சுபைர், ஆந்திர வங்கி கொடுத்த ஓவர் டிராப்ட் வசதி மூலம் சற்று மீண்டு எழுந்துள்ளார். தற்போது அதிக நிதியுதவியுடன், புதிய டிசைனர்களைக் கொண்டு, ஒரு பெரிய உற்பத்தி பிரிவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட உள்ள டிசைன்களை துபாயில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கவும், தனது பிராண்டை உலக அளவில் பிரபலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.